கலக்கல் காஸ்டியூம்ஸ்



-ஜெ.சதீஷ்

நாகரிக வளர்ச்சியோடு இணைந்தே பயணிக்கின்றன ஆடைகளின் நவீன வடிவங்கள். ஒருவர் அணியும் உடையை கொண்டு அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ள முடியும். இந்தியாவில் பல்வேறு நாடுகளின் கலாசார உடைகள் அதிகம் உலா வருகின்றன. மக்களின் எதிர்பார்ப்பும் நவீனத்தை நோக்கியே இருப்பதால் ஆடைகளின் வரவும் ஆடை வடிவமைப்பாளர்களின் வரவும் இன்று அதிகமாகியிருக்கிறது.
 
சென்னையில் பல்வேறு இடங்களில் ஃபேஷன் டிசைன் பள்ளிகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும்  நடத்தப்பட்டு சென்னையில் அண்மையில் நடத்தியது ரேகாஸ் ஃபேஷன் பள்ளி. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொள்ள தயாராகிக்கொண்டிருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளின் பரபரப்பான சூழலுக்கு நடுவே ரேகாஸ் நிறுவனத்தின் பயிற்சியாளரும், நிறுவனருமான ரேகாவை சந்தித்தோம்.

‘‘என்னுடைய வீட்டில் அனைவருமே ஆசிரியர் பணியில் அனுபவம் உள்ளவர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு தெரிந்தவற்றை பிறருக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வமாக இருந்தேன். குழந்தைகளுக்கு வண்ண வண்ண ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது எல்லா பெற்றோர்களின் ஆசை, நானும் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன்.

எனக்கு ஆடை அணிகலன்கள் மீது சிறு வயதிலிருந்தே அலாதி விருப்பம் உண்டு. பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட நிலையில், ஃபேஷன் டிசைன் தொடர்பான பாடப்பிரிவை எடுத்து படிக்க நினைத்தேன்’’ என்று கூறுபவர் எம்.பி.ஏ ஃபேஷன் டிசைன் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவர் தன்னுடைய டிசைனிங் துறையிலேயே பயணிக்க தொடங்கியுள்ளார்.

‘‘ஆடை வடிவமைப்பு என்பது ஒரு கலை. நான் கற்ற இந்தக் கலையை பிறருக்கு கற்றுக் கொடுக்க எண்ணினேன். கல்லூரிகளில் இருக்கக்கூடிய இந்தப் படிப்பை அனைத்துத் தரப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் ஒரு சில தயக்கங்கள் இருந்தாலும் துணிச்சலுடனே ஒரு பள்ளியை துவங்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

இதில் எல்லா வயதினரும் இந்தக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும், ஆண்-பெண் இருவரும் ஃபேஷன் டிசைனிங் படிப்பை எவ்வித பாகுபாடும் இன்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த ரேகாஸ் ஃபேஷன் பள்ளி’’.  குடும்பத்தினரது உதவியோடும் தன்னுடைய விடா முயற்சியாலும் 2010 ஆம் ஆண்டு இவரது கனவு நனவானது, நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் ரேகாஸ் பள்ளியை துவங்கினார்.

பள்ளி தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் ஏராளம் என்கிறார். ‘‘குறுகிய இடம் என்பதால் அடுத்தடுத்து மாணவர்களின் எண்ணிக்கையால் போதிய இடம் இல்லாமல் போனது.  இவ்வளவு சின்ன இடத்தில் எப்படி பள்ளியை நடத்த முடியும் வேறு ஏதேனும் துறையில் வேலைப்பார்க்காமல் எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் சிலரும் ஏளனம் செய்தார்கள்.

அதை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னுடைய பயணத்தைத் தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாவிடில் அதற்குப் பின் மேற்கொண்டு கல்வி பயில முடியாது; எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்கிற பார்வை நம் நாட்டில் பரவலாக இருக்கிறது. அதை முழுமையாக மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பொருளாதார சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் போனவர்கள், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்கள். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் என அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று ஃபேஷன் பள்ளியில், ஆடை தொடர்பான பல்வேறு டிப்ளமோ படிப்பு களை அறிமுகம் செய்தேன்.

3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை படிக்கக்கூடிய ஃபேஷன் டிசைனிங் இங்கு கற்றுத்தரப்படுகிறது. உண்மையிலே ஃபேஷன் டிசைனிங் ஒரு சிறந்த தொழிற்கல்வி. எங்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே ஆர்டர்கள் எடுத்து தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறோம்.  தென் இந்தியாவில் ஃபேஷன் டிசைனர்கள் குறைவு.

பெண்கள் சிலர் பள்ளி படிக்கும்போதோ அல்லது கல்லூரி படிக்கும்போதோ தையல் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பொழுதுபோக்காக நேரத்தை செலவழிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதைத்தாண்டி அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. ஆனால் ரேகாஸ் பள்ளியில் காஸ்டியூம் டிசைன், டெக்ஸ்டைல் பிரின்டிங், நெயில் ஆர்ட், பாடிக் மேனேஜ்மென்ட் என்று அனைத்து விதமான ஃபேஷன் டிசைன்களையும் கற்றுக்கொடுத்து மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பணிகளையும் வழங்கி வருகிறோம்’’. என்று கூறும் ரேகாவின் மாணவிகள் நல்ல வருமானத்தில் சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறார்கள்.

‘‘தற்போது உள்ள சூழலில் இளம் வயதினர் முதல் முதியவர் வரை புது மாடல்களில் ஆடை அணிவதையே விருப்பப்படுகிறார்கள். நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள நாகரிகம், அவர்களின்  பண்பாடு, உடை, சிகை அலங்காரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்து வந்து புதிய மாடல்களில் ஆடைகளை எப்படி வடிவமைக்கலாம் என்று மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.
 
ஃபேஷன் டிசைன்  என்றால் அது பெண்களுக்கான ஒரு துறை என்று சிலர் தவறாக எண்ணுகிறார்கள்.  என்னுடைய பள்ளியில் ஆண்களுக்கும் வகுப்புகள் துவங்க முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஆடைகளின் தேவை இருக்கும் வரை ஆடை ஃபேஷன் டிசைனர்களின் மவுசு குறையவே குறையாது’’ என்கிறார்  ரேகாஸ் ஃபேஷன் பள்ளி நிறுவனர் ரேகா.

ரேகாஸ் பயிற்சி பள்ளி நடத்தும் ஃபேஷன் ஷோவிற்கும், தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் மாடலாக பணியாற்றும் நவ்யா சுஜியிடம் பேசினோம். ‘‘இந்தப் பள்ளியில் திருநங்கைகள் பயிற்சி பெறுகிறார்கள். ரேகாவையும் அவரது பள்ளியையும் ஃபேஸ்புக் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். இங்கு இருக்கக்கூடிய மாணவர்களின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்படும் ஆடைகள் மிகவும் அற்புதமாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கின்றன. 

எங்களை போன்ற மாடல் பெண்களுக்கு ரேகாஸ் பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறன் கொண்ட ஆடைகள் வரப்பிரசாதம். மேலும் இப்பள்ளியின் சூழல் ஒரு பள்ளி போல் இல்லாமல் ஒரு குடும்பமாக இருக்கிறது. இங்கு ஏழை பணக்காரர்கள் என்கிற பாகு பாடு கிடையாது. அனைவரையும் சரிசமமாகவே நடத்துகிறார். சுமார் 4500 மாணவர்களுக்கு மேல் இங்கு பயிற்சி பெற்று பயனடைந்து இருக்கிறார்கள்.

இது வரையிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் புதுப் புது டிசைன்களில் இவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. மாணவிகள் மட்டும் அல்லாமல் இங்கு பணியாற்றக்கூடிய அனைவரிடமும் சகோதரிபோல் பழகுகிறார் ரேகா’’. இங்குள்ள மாணவர்களுக்கு ஃபேஷன் ஷோ பயிற்சியாளராக இருக்கும் பாகீரதி கூறுகையில், ‘‘ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த பள்ளியை  பார்த்து வருகிறேன். 

மிகச் சிறப்பாகவும் திறமையானவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் ஒரு பள்ளியாக இதை நான் பார்க்கிறேன். எப்படி சம்பாதிப்பது என்று யோசிப்பவர்களுக்கு இந்த பள்ளி சிறந்த வழி என்று கூறலாம். 16 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இங்கு படித்து பயன் பெற்றிருக்கிறார்கள். வெளி மாநிலத்திலிருந்தும் வந்து படிக்கிறார்கள். ஆடை மட்டும் இல்லாமல் அக்ஸசரிஸ் போன்றவற்றையும் அவர்களே வடிவமைத்துக்கொள்ளும் பயிற்சியும் ரேகா கற்றுக்கொடுக்கிறார்.

முன்பெல்லாம் திருமணம் என்றால் திருமணப் பெண்ணிற்கு மட்டும்தான் ஆடை வடிவமைக்கப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், அந்தக் குடும்பத்தில் அனைவருக்குமே நியூ மாடல் ஆடைகள் அவசியமாகி இருக்கிறது. தலை முதல் கால் வரை எல்லா வித அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய ஆடைகள் என மாணவிகளே அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு  புது டிசைன்களில் எல்லா விதமான நிகழ்ச்சிகள், பார்ட்டி டிசைன் ஆடைகள், ஸ்டைலிஷ் ஆடை என மாணவர்களின் கிரியேட்டிவிட்டி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கிறது” என்கிறார் பாகீரதி.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்