கிச்சன் டிப்ஸ்



லட்டுக்கு கலவை சேர்க்கும் போது அரை டம்ளர் தேங்காய்த்துருவலை நெய்யில் வறுத்து கலந்து லட்டுகளாக உருட்டி எடுக்கவும். இந்த லட்டு மிகவும் சுவையாக இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, திருச்சி-621 306.

பொங்கல் மிகுந்து போய் விட்டால் பொங்கலை பந்து போல உருட்டுங்கள். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் இட்டு மூடி வைத்து விட்டு, மறுநாள் புளிப்பில்லாத தயிரில் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் (மோர் மிளகாய்) போட்டு தாளித்து அந்த உருண்டையில் கொட்டி கிளறுங்கள். வித்தியாசமான தயிர் சாதம் ரெடி. வெண்பொங்கல் தயிர் பொங்கலாகி விடும்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.
    
ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கன்டென்ஸ்டு மில்க், தேன் கலந்து வைத்துக் கொள்ளவும். பரிமாறும் போது அரிசிப் பொரியை அதில் போட்டுக் கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மா, பலா, பப்பாளி, தர்பூசணி என்று விரும்பிய பழங்களில் செய்யலாம்.
- எச்.தஸ்மிலா, ராமநாதபுரம்.
   
குருமா செய்யும்போது சிறிது இஞ்சி, ஓமம் இரண்டையும் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
- ஆர்.சங்கவி, கோவிலூர்.
   
சுக்குப் பொடியில் வெல்லப் பொடியைக் கலந்து, அரை ஸ்பூன் நெய்யும் சேர்த்து பண்டிகை பட்சணங்கள் சாப்பிட்ட பின் சாப்பிட்டால் அஜீரணம் வராது.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.
   
மாம்பழத்தின் விதையை எடுத்து நன்குக் காயவைத்து, ஊறவைத்த அரிசியுடன் சேர்த்து அரைத்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேகவைத்து சாப்பிட வயிறு மற்றும் உள் உறுப்புகள் பலம் பெறும்.
 
பாகற்காய் சமைக்கும்போது இஞ்சித்துருவல் சேர்த்துக் கொண்டால் கசப்பு குறைந்து இஞ்சி மணத்துடன் இருக்கும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
 
வெண்பொங்கல் செய்த பின் காராபூந்தி ஒரு கைப்பிடி அளவு, 200 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து போட்டு, நெய் விட்டு கிளறி சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
- ஆர். மீனாட்சி, திருநெல்வேலி.
 
ஹோட்டலில் செய்யும் உளுந்து வடை போல் செய்ய வேண்டுமா? 200 கிராம் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, பிறகு கிரைண்டரில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 4 டேபிள்ஸ்பூன் மிஷினில் அரைத்த அரிசி மாவை தூவி பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், கொத்தமல்லித்தழை போட்டு கலந்து பெரிய பெரிய வடையாக சூப்பராக தட்டலாம்.
- எஸ்.கெளரி, சிட்லபாக்கம்.
 
பாலை பாத்திரத்தில் சேர்க்கும் முன் கால் கப் தண்ணீர் சேர்த்து பிறகு பாலைச் சேர்த்து பொங்க வைத்து இறக்கினால் பாத்திரத்தின் அடியில் பால் ஒட்டாது.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
 
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரில் வீட்டைத் துடைத்தால் ஈ, எறும்பு வராது. அதே போல் வேப்பெண்ணெயைப் பஞ்சில் நனைத்து சுவாமி படங்களை துடைத்தால் பூச்சிகள் அண்டாது.
- இல.வள்ளிமயில், திருநகர்.