கக்கூஸ் - இது படமல்ல பாடம்
- மகேஸ்வரி
“எங்களையும் நினைச்சுப் பாருங்க, நாங்களும் மனுசங்கதானே” என 60 வயதைக் கடந்த முதியவர் குரல் தழுதழுக்க நம்மை நோக்கி, கண்ணீர் கண்ணை மறைக்க தழுதழுக்கிறார். மற்றோர் இடத்தில் 50 வயதைக் கடந்த ஒரு பெண், “செத்தாலும் பரவாயில்லை, நம்ம குடும்பம் நல்லா இருக்கோணும்னு குழிக்குள்ள இறங்கிறாங்கம்மா… அவுங்க பிள்ளைகள் எல்லாம் டாக்டரு, எஞ்சீனியரு, வக்கீலுன்னு படிக்கோணும், ஏழைப்பட்டவுக எங்க பிள்ளைக மட்டும், உங்க வீட்ல அடைப்பு இருந்தா, குழிக்குள்ள இறங்கணும்மா? உங்க வீட்ல அடைப்பு இருந்தா உன் புள்ளைய குழியில இறக்குங்கடா…” என முகத்தில் அறைந்தார்போல் நம்மை நோக்கிக் கேட்கிறார் அந்த முதிய பெண்.
 ஒன்றே முக்கால் மணி நேரமும் நம்மை உலுக்கி எடுத்து, நம் மனசை புரட்டிப் போடுகிறது இந்த ஆவணப்படம். முகத்தில் அறைந்த மாதிரி அவர்கள் கேட்கும் பல கேள்விகள் நம்மீது தெறிக்கின்றன. சென்னை எம்.எம். ப்ரிவியூ தியேட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட “கக்கூஸ்” ஆவணப்படத்தின் இயக்குநர் திவ்யா பாரதியிடம் பேசியபோது,“கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தத் துப்புரவுத் தொழிலாளர்களோடு பயணித்து, அவர்களின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறோம்.
மொத்த காட்சிகளும் 92 மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அவற்றை 1.45 மணி நேரமாகத் தொகுத்திருக்கிறோம்” என பேசத் துவங்கினார். “நூற்றுக்கும் மேற்பட்ட கழிப்பிடங்களைப் பார்த்தோம். அவை எல்லாமே சென்னை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை என மாநகராட்சிகளில் பதியப்பட்ட காட்சிகள். சில காட்சிகள் சென்னை புதிய தலைமைச் செயலகத்திற்கு பின்னாலும் கூட பதிவு செய்தோம். வேறு சில காட்சிகள் நீதி மன்ற வளாகத்திற்குள்ளே.
 அவர்கள் துப்புரவுத் தொழிலில் இருக்கும்போதே, சாக்கடைக்கு மிக அருகிலும், பொதுக் கழிப்பிடங்களுக்குள்ளும் நுழைந்து எடுத்தோம். நிறைய காட்சிகளை அவர்களுக்கு இணையாக தரைமட்டத்தில் இறங்கி பதிவு செய்தோம். பாதாளச் சாக்கடைக் குழிக்குள் அடைப்பு எடுக்கும்போது கேமராவை கட்டி உள்ளே இறக்கி சில காட்சிகளை பதிவு செய்தோம்” என்கிறார்.
”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள ராமலிங்கா மில் என்ற சிற்றூரில். பஞ்சுமில்தான் என் உலகம். எனக்கு விபரம் தெரிந்து நான் பார்த்த பெரு நகரம் அருப்புக்கோட்டைதான். வீட்டிற்கு ஒரே பெண். நான் நன்றாக படிப்பேன். வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனவே நிறைய புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் என்னை நன்றாக வழி நடத்தினார்கள்.
 எனவே பெரியார், அம்பேத்கார், மார்க்சியம் என என் வாசிப்புத் தளம் விரிவடைந்தது. பள்ளியில் படிக்கும்போதே மானுட விடுதலைபண்பாட்டுக் கழகத்தில் இணைந்தேன். அதில் ஆவணப்படம் பார்ப்பது, கருத்து உரையாடல், புத்தகம் வாசிப்பு, நிகழ்வு, அரசியல் என என் பள்ளிக் காலம் கழிந்தது. இங்கேதான் எனக்கு மாற்றுச் சிந்தனைகள் உதித்தன. மாற்றத்தை விரும்பி உலக சினிமாக்களை பார்க்கத் துவங்கினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படம் பார்த்து விவாதித்தேன்.
சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில், விஷுவல் கம்யூனிகேஷன் தேர்ந்தெடுத்து, அந்தப் படிப்பைத் தொடர முடியாமல், பொருளாதாரச் சூழலால் மதுரை சட்டக் கல்லூரியில் இணைந்தேன். மதுரை, சென்னை என இரண்டு சட்டக் கல்லூரிகளிலும் மாறி மாறி படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே நோயுற்ற என் அம்மாவை இழந்தேன். இந்நிலையில் இடதுசாரிச் சிந்தனைகளுடன் எனது பொதுவெளிக்கான தளம் விரிவடைந்தது. எங்கெல்லாம் மக்களுக்கான பொதுப் பிரச்சனைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் செல்லத் தொடங்கினேன்.
இந்நிலையில் 2015 அக்டோபர் மாதம் மதுரையில் நிகழ்ந்த பாதாளச் சாக்கடையில் அடைப்பு எடுக்க குழிக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறந்த இரண்டு பேர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. இந்த சம்பவத்திற்கு முன்வரை, எனக்கு துப்புரவுத் தொழிலாளர்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. அவர்களின் பிரச்சனைகள் எதுவும் எனக்கு அதுவரை தெரியாது.
அந்தச் சம்பவமும், அந்த மலக்குழி மரணத்தில் உயிரிழந்தவரில் ஒருவரான முனியாண்டி என்பவரின் மனைவி மகாலெட்சுமியின் அழுகையும், கதறலும் என்னை மாற்றியது. அந்த நிகழ்வால் என்னை சம்மட்டி கொண்டு யாரோ அடித்தது போல் உணர்ந்தேன். மலக்குழிக்குள் இறங்கி மரணிப்பவர்களின் பிரச்சனையினை கையிலெடுக்க முடிவு செய்தேன். துப்புரவு பணியினைப் பேசாமல் மலக்குழி மரணத்தைச் சொல்லவே முடியாது.
தமிழகம் முழுவதும் பயணித்து, தமிழகத்தில் இருக்கும் அனைத்து விதமான துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். இந்த வேலையில் முழுக்க இறங்கிய பிறகு பல தகவல்கள் அவர்களைப் பற்றிக் கிடைத்தன. அதில் முக்கியமாக குப்பைகளைச் சுமந்து வரும் அந்த வண்டியினை பெரும்பாலும் பெண்களே தள்ளி வருவார்கள். அதில் சேகரித்து வரும் குப்பைகளை, உயரமான லாரிகளின் மேல் பகுதியில் 15 முதல் 20 கிலோ எடையுள்ள அந்தக் குப்பைகளை தூக்கி அடிக்க வேண்டும்.
இதில் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு கருப்பைக் கோளாறு, கருப்பை நீக்கம், பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் தாக்கத்தால் தொண்டை எரிச்சல், கை கால் பாதிப்பு, உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டில் பிரச்சனை, சிறுநீர் கழிக்க முடியாமை போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் வருகின்றன.
இதில் துப்புரவு வேலை என்பதில் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பை தவிர, மருத்துவமனைக் கழிவுகள், அழுகி நாற்றமெடுக்கும் செத்த பிராணிகளும் அடக்கம். இது தவிர ஆணுறைகள், பெண்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கின்களும் மனசாட்சியற்று, எந்தவித சிந்தனையும் இன்றி, நம்மைப்போன்ற இந்த மனிதர்களை பற்றிய சிந்தனையில்லாமல் குப்பைகளில் எந்த பாதுகாப்பும் செய்யப்படாமல் அசால்டாக தூக்கி எறியப்படுகின்றன.
பெண்கள் பயன்படுத்தித் தூக்கி எறியும் நாப்கின்கள், மனித மலத்தை விட துர்நாற்றம் தரக் கூடிய ஒன்று. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் முறையாக, சரியான முறையில் செய்யப்படாமல், அவற்றையும் சேர்த்தே இந்தத் துப்புரவுத் தொழில் பெண்கள் தங்கள் கைகளால் அகற்றுகின்றனர். தினமும் காலையில் மலத்தின் முகத்தில்தான் விழிக்கிறார்கள், சாக்கடையைப் பார்த்தபிறகு இவர்களுக்கு எப்படி சாப்பிடத் தோன்றும்? இவர்களின் குழந்தைகளின் நிலையும் இதுதான்” என்கிறார் திவ்யா.
ஒப்பந்த அடிப்படையில் தனியவார் வசம் துப்புறவு பணி இருப்பதால், இதில் குறைவான கூலி, மாத இறுதிவரை ஊதியம் தராமல் இழுத்தடிப்பு, அதிலும் பிடித்தம் செய்து வழங்குவது, பணி செய்ததற்கோ, ஊதியம் பெற்றதற்கோ எந்த முறையான பதிவுகளும் இல்லாத பணிச் சூழலையும் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றனர்.
“நாம் சுத்தமாய் வாழ நமது சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் இவர்களை நாம் எந்த இடத்தில் வைத்துள்ளோம். சாதியின் பெயரால் இவர்களை ஒதுக்கி, இவர்களுக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, ஒரே ஒரு கதவை மட்டும் திறந்து, மனசாட்சியற்று, மனித மலங்களை மனிதர்களை அள்ள வைப்பது தொழிலல்ல, அவமானம், பேரிழிவு” என்கிறார் திவ்யா. ஆவணப்படத்தின் இறுதியில் பாடலாசிரியர் தனிக்கொடி நம்மை நோக்கி எழுப்பும் கேள்விக்கு நம்மிடம் பதிலுண்டா? ‘ஆளமட்டும் நீங்களா சொல்லுங்கடா? செத்துமாளமட்டும் நாங்களா வந்து அள்ளுங்கடா’.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
கோபால கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் இந்த ஆவணப்படத்தில் திவ்யாவுடன் இணைந்து பயணித்த அவரின் இணையரான கோபாலகிருஷ்ணன், ஒரு கட்டத்தில் குடும்பச் சூழலால் திவ்யாவுடன் பயணிக்க முடியாமல் அவரின் பக்கபலமாய் இருந்து இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். அவரிடம் பேசியபோது, க்ரவுட் ஃபண்டிங் முறையில் முகநூல் நண்பர்களின் பணஉதவியுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
“2013 சட்டத்திற்குப் பிறகு கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை 20க்கும் மேற்பட்ட செப்டிக் டேங் க்ளீனர்கள் விஷவாயு தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். மொத்தமாக 1009 கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் தமிழகத்தில் இருப்பதாக, கடந்த வருடங்களில் தமிழக அரசு பொய்யான தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. அந்த புள்ளிவிவரம் தவறு என்றும், ஒவ்வொரு துப்புரவுத்தொழிலாளியும் ஒரு மலம் அள்ளும் தொழிலாளிதான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சிதான் இந்த கக்கூஸ் ஆவணப்படம்.
கையால் மலம் அள்ளக்கூடாது என்று 2013ல் சட்டம் இயற்றப்பட்டும் தோல்வியடைந்த நிலையிலே அது இருக்கிறது. 2014ல் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, செப்டிக் டேங் க்ளீன் செய்யும் போது, இறப்பவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்ற தீர்ப்பும் கூட உயிரற்றுக் கிடக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதற்கான நஷ்ட ஈடு சென்று சேர்வது இல்லை.
துப்புரவுத் தொழிலில் இருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரின் பிள்ளைகளின் படிப்பு போய்விடும். தந்தையின் வேலைக்கு பிள்ளைகள் வரவேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்ப சூழலுக்காக இந்த தொழிலுக்கு வந்துதான் ஆகவேண்டும். அவர்களுக்கு வேறு இடத்தில் வேலையும் தரமாட்டார்கள். டிகிரியே முடித்தாலும், ஹோட்டல்களில் துப்புரவுப் பணிகளில்தான் வேலை பார்த்தாகவேண்டும்.
அவர்களின் பணிகளில் உள்ள சங்கடம் நம்மை உறுத்தவில்லையென்றால் அதற்கு நம்மிடம் இருக்கும் சாதி தான் காரணம். இது அவங்களுக்கான வேலை தானே, என்ற எண்ணம் நம் மனதில் ஏற்றப்பட்டுள்ளது. அரசும் கூட அவர்களுக்கான சலுகைகளையும், நஷ்டஈடுகளை சரிவர கொடுப்பதில்லை. விஷவாயு தாக்கி இறந்த குடும்பத்திற்கு, விரல் விட்டு எண்ணும் அளவிற்கு, பெரும் போராட்டங்களுக்கு நடுவேதான் அவர்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கப்படுகிறது”.
பழனி குமார், ஒளிப்பதிவாளர் ‘‘மிகமிகக் கொடூரமான ஒரு வாழ்வை இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் அவர்களையும், அவர்களின் வேலையினையும், காட்சிப்படுத்த முடியாத சிரமங்கள் எல்லாம் நிறைய இருந்தது. பல இடங்களில் எங்களின் கேமரா பாதிப்படைந்தது. அவர்களோடு இந்த ஓராண்டாய் அவர்களின் வலிகளை பதிவு செய்தேன். இதற்கு மேல் இதில் சொல்ல என்ன இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து அவர்களின் வலிகளை உணருங்கள்”.
பாஷாசிங் இந்த ஆவணப்படத்தை எடுக்க திவ்யாவிற்கு மிகவும் உந்து சக்தியாக இருந்த, “தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற புத்தகத்தை எழுதியவரும், பத்திரிகையாளரும் சமூக சிந்தனையாளருமான பாஷாசிங் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கக்கூஸ் ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு இந்த ஆவணப் படத்தை வெளியிட, மலக் குழி மரணத்தில் விஷவாயு தாக்கி இறந்த துப்புறவுத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, ஆவணப்படத்தின் குறுந்தகடை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பாஷாசிங் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையினை இந்தியா முழுவதும் பயணம் செய்து பதிவு செய்ததையும் அதன் காரணமாய்தான் ஒரு தோட்டிப் பத்திரிகையாளர் என சக நண்பர்களால் அழைக்கப்பட்டதையும் பதிவு செய்தார். மலம் அள்ளும் இந்தப் பெண்கள் தங்கள் சமையலில் மஞ்சள் தூளையும், மஞ்சள் பருப்பையும் சாப்பிடுவது மிகமிகச் சித்ரவதையானது என்றும் தெரிவித்தார்.
பகலவன், படத் தொகுப்பாளர் ‘‘எடிட்டிங் ஸ்டூடியோவிற்குள் நுழையும்போது டாய்லெட்டிற்குள் நுழைந்த மாதிரியான ஒரு உணர்வுதான் இருந்தது. நான் விஷுவலாகத்தான் இவைகளைப் பார்த்தேன். என்மேல் மலம் தெரிக்கவில்லை. ஆனால் களத்தில் இருந்தவர்களின் நிலை? மலக்குழி மரணங்களைப் பார்த்து சில நேரம் தொடர முடியாமல் எடிட்டிங்கை நிறுத்திவிட்டு வெளியில் சென்று சிறிது நேரம் என் மனநிலையை சரிசெய்துவிட்டு தொடர்ந்தேன்.
இதில் கேமராவிற்கு பின்னால் பேசிய விசயங்கள் இன்னும் நிறைய. அவற்றை எல்லாம் இதில் கொண்டுவர முடியவில்லை. சகமனிதர்களாகிய இவர்களையும், இவர்களது வாழ்க்கையையும் ஒன்றே முக்கால் மணி நேரம் கூட நிழலில் பார்க்க முடியாமல் முகத்தை திருப்புகிறோம். நிஜத்திலும் இது நடப்பதால்தான் இந்நிலை தொடர்கிறது”.
|