இந்தப் பள்ளிதான் என் உலகம்
-கி.ச.திலீபன்
நாகர்கோவில் அருகே எறும்புக்காட்டில் இயங்கி வருகிறது சாக்கர் பள்ளி. பசுமையும், அமைதியுமான கிராமச் சூழலில் அமைந்திருக்கும் இப்பள்ளியில் தற்போது 9ம் வகுப்பு வரை 140 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் மீரா உதயகுமார். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த சுப.உதயகுமாரின் மனைவி. வரும் தலைமுறையை சிந்தனைச்செறிவு, படைப்புத்திறன், ஆளுமை மிக்க தலைமுறையாய் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து பள்ளிக் குழந்தைகள் மத்தியில் ஆசிரியப் பணியாற்ற வந்தவர்.
 மனனம் செய்து தேர்வெழுதும் நமது கல்விமுறை அறிவார்த்தமான தலைமுறையை உருவாக்காது என்கிற அதிருப்தியின் வெளிப்பாடாக ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறையைப் பின்பற்றி தனது மாணவர்களுக்குக் கற்பிக்கிறார். இந்தப் பள்ளியே தனது உலகம் என்று சொல்லும் மீரா சாக்கர் பள்ளி தொடங்கப்பட்டதற்கான நோக்கம் மற்றும் அதன் கற்பித்தல் முறை குறித்து பேசுகிறார்.
‘‘ஆசிரியப் பணி அதுவும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் கல்வியியல் படித்தேன். எனது திருமணத்துக்குப் பிறகு கணவரின் படிப்புக்காக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகப்பணி படித்தேன். அக்காலகட்டத்தில் பல கல்வி நிறுவனங்களையும் அவற்றின் கற்றல் முறையையும் பார்க்க முடிந்தது.
 கல்வி முறை குறித்தான தேடலில் அது தொடர்பான பல வற்றைப் படிக்கவும் செய்தேன். மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நமது கல்விமுறை மீது நம்பிக்கையற்றுப் போனேன். கல்வி என்பது வாழ்க்கையோடு கலந்ததாக இருக்க வேண்டும். புரிதலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் அப்படி ஒரு கல்வியை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் 2003ம் ஆண்டு சாக்கர் பள்ளியைத் தொடங்கினேன்.
இயற்கையான சூழலில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலை விட்டு சற்று தள்ளியிருக்கும் எறும்புக்காட்டைத் தேர்வு செய்தேன். பள்ளிக்குள்ளேயே தோட்டம் அமைத்து இயற்கை விவசாயப் பயிற்சியை அளித்தோம். விவசாயக்கூலித் தொழில் செய்பவர்களின் குழந்தைகள்தான் ஆரம்பத்தில் எங்கள் பள்ளியில் படித்தனர். அவர்களின் எண்ணம் தங்களது பிள்ளைகள் தங்களைப் போல் மண்ணில் இறங்கி வேலை செய்து சிரமப்படாமல் வொயிட் காலர் வேலை செய்ய வேண்டும் என்பதுதான்.
அப்படியிருக்கும்போது விவசாயப் பயிற்சி அளிப்பதை பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இந்த சமூகத்தின் பொதுப்புத்தியின்படி மதிப்பெண் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதில் மட்டுமே குறிக்கோளாக இருந்தார்கள். நோட்டில் என்னென்ன எழுதியிருக்கிறார்களோ அதைத்தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள் என்கிற தவறான புரிதலில்தான் இருந்தனர். கற்றல் என்பது புரிதலை ஏற்படுத்துவதுதானே தவிர பக்கம் பக்கமாக எழுதச் சொல்வது கிடையாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் பெற்றோர்கள் இந்தப் பள்ளி மீது நம்பிக்கையற்றுத்தான் இருந்தனர். சரியாகவே சொல்லிக் கொடுப்பதில்லை என்றே நினைத்தனர். ஆசிரியர்களும் வழக்கமான கல்வி முறைக்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்ததால் அவர்களால் எங்களது கற்றல் முறையை பின்பற்ற முடியவில்லை. குழந்தைகளுக்குக் கற்பிப்பது எங்களுக்கு சவாலாக இருக்கவில்லை. பெற்றோர்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும், ஆசிரியர்களை வழக்கமான கல்வி முறையிலிருந்து வெளிக்கொணர்வதும்தான் எங்களுக்கு சவாலாக இருந்தது.
ஆசிரியர்கள் மத்தியிலேயே வாசிப்பு என்பது இல்லாமல் இருந்தது. அவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் நிறையவற்றை வாசிக்க வேண்டும். அவர்களின் கற்றல் எல்லையற்றதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதற்கான உழைப்பைக் கொடுக்கும் ஆசிரியரால்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.
பாடப்புத்தகத்தில் யாரோ எழுதியிருப்பதை மனனம் செய்து அதை அப்படியே தேர்வில் எழுதுவதுதான் கல்வியா? கல்வி என்பது சுய சிந்தனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். படைப்புத்திறனை வெளிக்கொணர வேண்டும். ஆனால் இங்கோ சூழல் அப்படியானதாக இல்லை. எல்லோருக்கும் பொதுவான கல்வி/கற்றல் முறை என்பது இருக்கவே முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள்.
அவரவர்களுக்கு ஏற்றபடியான கற்றல் முறையில் கற்பித்தல் அவசியம். XSEED என்கிற நிறுவனம் உருவாக்கிய கற்றல்முறையைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். கண், காது, உடல் இயக்கம் என மூன்று விதங்களில் பயில்பவர்கள் இருக்கிறார்கள். யார் யாருக்கு எந்த முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதை நாம் கண்டறிந்து அந்த வகையில் பயிற்றுவிக்க வேண்டும். எந்தக் குழந்தையும் மக்கு கிடையாது. அந்தந்த குழந்தைக்கு ஏற்றாற்போல் கற்பிக்கத் தெரியாததுதான் மடத்தனம்.
எல்லோரையும் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டியது ஒரு பள்ளியின் கடமை. எங்கள் மாணவர்களுக்கு யோகா, கர்நாடக சங்கீதம், ஓவியம் இம்மூன்றையும் கற்றுக் கொடுக்கிறோம். பாடத்தைத் தாண்டியும் பயிற்றுவிக்க இன்னும் பல இருந்தாலும் எங்களால் இப்போதைக்கு இவ்வளவுதான் முடிந்தது. கற்பித்தலில் முழுமையாக வேறுபட்டிருக்கிறோம். பாடம் நடத்துவதையும், கரும்பலகையில் எழுதுவதையும் பார்த்து கற்றுக் கொள்பவர்கள் கண் வழியாகக் கற்பவர்கள், சிலர் பாடத்தையே கவனிக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பதாக நினைப்போம்.
ஆனால் கேட்டலின் வழியாகவே அவர்கள் கற்றுக் கொள்வார்கள், சிலருக்கு உடல் இயக்கங்கள் மூலம் கற்பித்தால் மட்டுமே அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும். இப்படியாக வேறுபட்டிருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தகுந்த முறையில் கற்பிக்கிறோம். ஒவ்வொரு மாணவரையும் முழுமுதல் ஆளுமையாக உருவாக்குவதுதான் எங்கள் பள்ளியின் நோக்கமாக இருக்கிறது. தனது எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கிறோம்.
கருத்து வேறுபாடு வரும்போது இணைந்து செயல்படுவது பற்றி சொல்லித் தருகிறோம். வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக கல்வியைக் கொண்டு சேர்க்கிறோம். பேரிடரை நாம் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்பதற்காக எங்கள் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சியை அளித்திருக்கிறோம். இது மாதிரியான கற்றல்தான் வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்க முடியும். படிப்பு என்பது வாழ்க்கையோடு தொடர்புபட்டு இருக்க வேண்டும். அந்நியப்பட்டிருக்கும்போதுதான் கற்றல் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
படிப்பு என்பது சுலபமானதாக இருக்க வேண்டும். மதிப்பெண்களை விடவும் புரிதலே முதன்மையானது. புரிதலை ஏற்படுத்துவதோடு தான் புரிந்ததை வெளிப்படுத்தும் ஆற்றலையும் ஏற்படுத்துகிறோம். மாணவர்களை பாடப்புத்தகத்துக்கு அப்பாற்பட்டு நூல்களை வாசிக்க ஊக்கப்படுத்துகிறோம். களப்பயணத்துக்கு கூட்டிச் செல்கிறோம். காற்றாலை மின்சாரமா? அது எப்படி உற்பத்தியாகிறது என்பதை களத்துக்கே சென்று காண்பிக்கிறோம்.
காடு அமைத்தல், கடிதம் எழுதுதல் என அவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கான வழி வகைகளையும் செய்கிறோம். நாடகத்தை எப்படி கதையாக எழுதுவது? கதையை எப்படி நாடகமாக எழுதுவது? என்பனவற்றை விளக்குகிறோம். ஒரு கதையை எடுத்துக் கொண்டு கதை நாயகன் யார்? கதைக்களம் எது? கதையின் கரு என்ன என்று கதையின் கூறுகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒரு கதையின் கட்டுமானம் எத்தகையது என்பதை விளக்குகிறோம்.
ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து வந்து இது போன்ற வகுப்புகளை எடுக்கிறோம். இவையெல்லாம் தேர்வில் மதிப்பெண்கள் வாங்கித் தராது என்றாலும் வாழ்க்கை மீதான புரிதலையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். ஆரம்பத்தில் சாக்கர் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் தயங்கிய நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. நிறைய பெற்றோர் தேடி வர ஆரம்பித்திருக்கின்றனர். இதுவரை 8ம் வகுப்பு வரைதான் இருந்தது. இந்த ஆண்டு 9ம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கிறோம்.
அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு தொடங்கப்போகிறோம். சாக்கர் பள்ளியில் படித்துவிட்டுச் சென்ற குழந்தைகள் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இது பலருக்கும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. ‘‘சாக்கர் இப்ப பரவால... நல்லா சொல்லிக்கொடுக்கிறாங்க’’ என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். சாக்கர் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.
இவர்கள் இந்தப் புரிதலை அடையத்தான் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் நிறைகுடங்கள். அவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டினால் போதும். ஆனால் பெற்றோர்கள் எதிர்மறை எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை குறித்தான பயத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். கல்விக்கூடங்கள்தான் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
வளமான எதிர்காலம் என்பது பொருள் ஈட்டுவதில் மட்டுமல்ல. வாழ்வின் சகலத்திலும் தழைத்தோங்குவதுதான். அந்தப் பணியைத்தான் சாக்கர் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். ஏனென்றால் பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் எல்லாத் தரப்புக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்களின் அடுத்த நகர்வு அதுவாகத்தான் இருக்கும்’’ என்கிறார் மீரா உதயகுமார்.
படங்கள்: மணிகண்டன்
|