18ம் நூற்றாண்டின் கலகக்காரி நங்கேலி



- ஸ்ரீதேவிமோகன்

18ம் நூற்றாண்டில் பிறந்த ஒரு பெண், 21ம் நூற்றாண்டிலும் பேசப்படுபவளாக இருக்கிறாள். ஆனால் அவள் அப்படியொன்றும் ஒரு நாட்டை சேர்ந்த மகாராணியோ அல்லது ஆளை அசத்தும் அழகுப் பதுமையோ இல்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண். எப்போது பிறந்தவள் என்பது கூடத் தெரியாத அவளைப் பற்றி இன்றும் வரலாறு பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் அவளது தைரியமும் தியாகமும்தான்.

கேரள மாநிலத்தின் செர்தலாவை சேர்ந்த பெண் நங்கேலி. கேரளாவின் திருவிதாங்கூர் அரசு விதித்த கொடூரமான வரியை எதிர்த்து மக்கள் நடத்திய சமூக நீதிப் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்த ஒன்று. சாதிக் கொடுமைகளின் வரலாற்றில் நங்கேலியின் வாழ்க்கைப் பதிவு மறக்க முடியாத ஒன்று.

18, 19ம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் மன்னர்கள் கேரளாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். திருவிதாங்கூரின் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உலகில் வேறு எங்கும் காணாத கட்டுப்பாடுகள் அவை. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் நகை அணிய வரி, தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீசை வைத்தால் வரி, தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகத்தை மறைக்கும் மேலாடை அணிந்தால் வரி (முலக்கரம்).

இவர்கள் மார்பை மறைக்காமல் இருப்பதும், நகை அணியாமல் இருப்பதும், மீசை வைக்காமல் இருப்பதும்தான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த முலக்கரம் போன்ற வரிகள். உடை அணியும் விதத்தை வைத்தே மக்கள் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

இவ்வாறு விதிக்கப்பட்ட வரிகளால் ஆதிக்க சாதி மக்கள் செல்வச் செழிப்புடனும், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வறுமையாலும் வாடிக்கொண்டிருந்தனர். வரி கட்ட முடியாத குடும்பத்தைத் தேடி அரசாங்கம் வரும். ‘பரவாத்தியர்’ எனப்படும் வரி வசூலிப்பாளர்கள் வீடு தேடிவந்து வரியைக் கட்டச் சொல்லி மிரட்டுவார்கள். சிறுகண்டனின் மனைவி நங்கேலி.

இவர்கள் குடும்பத்தாராலும் அரசு விதித்த வரியைக் கட்ட முடியவில்லை. சிறுகண்டன் இல்லாத சமயத்தில் வீடு தேடி வந்த பரவாத்தியார்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நங்கேலி செய்த காரியம் அப்போது செர்தலாவில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் அனைத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எந்த ஒரு பெண்ணும் செய்யத் துணியாத காரியம் அது.

மார்பகங்களை துணி கொண்டு மூடினால் தானே வரி. எனக்கு அந்த மார்பகங்களே வேண்டாம் என தன் இரு மார்பகங்களையும் அறுத்து ஒரு வாழை இலையில் வைத்து அரசு அதிகாரிகளிடம் வரியாக ஒப்படைத்தார் நங்கேலி. அரண்டு போனார்கள் அவர்கள். அது நடந்த சில நிமிடங்களில் தன் வீட்டு வாசலை தன் ரத்தத்தால் நனைத்து இறந்து போனார். சிறிது நேரம் கழித்து வீடு வந்த சிறுகண்டன் தன் அன்பு மனைவிக்கு நேர்ந்த கதி கண்டு கலங்கிப் போனார்.

அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத சிறுகண்டன் தன் மனைவியின் சிதையில் தானும் குதித்தார். நங்கேலிக்கு ஏற்பட்ட துயரமும், அவர் கணவனின் இந்த உடன்கட்டை சம்பவமும் விஷம் போல எல்லா இடங்களுக்கும் பரவியது. 1803ம் ஆண்டில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் மாநிலமெங்கும் முலக்கரத்திற்கு எதிரான போராட்டம் துவங்கியது. நாடெங்கும் அது பெரும் இயக்கமாக மாறியது.

மக்களின் இந்த ‘தோள்சீலைப் போராட்டத்தை’ தவிர்க்க 1812ம் ஆண்டு ‘முலக்கர’த்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதில் சாதிய அடுக்குமுறையின் ஒரு வழிக்குத்தான் முடிவு கட்டப்பட்டது. பலருக்கு ஆதங்கங்கள் இருந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் அவை எல்லாம் சேரும் போதுதான் அது புரட்சியாக வெடிக்கும். அது போல ‘தோள்சீலைப் போராட்ட’த்தின் ஆரம்பப்புள்ளி நங்கேலியின் துணிச்சல் மிகுந்த தியாகம் மட்டுமே.

தோல்வியடைந்த புரட்சி கலகமாகிவிடும். வெற்றியடைந்த கலகம் புரட்சியாகிவிடும். இதுவும் வெற்றி பெற்றது என்றாலும் அங்கேயும் கொக்கி வைத்தார்கள் சாதி வெறியர்கள். கீழ்ச்சாதி பெண்கள் மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் மேல்சாதிப் பெண்களைப் போல மேலாடை அணியாமல் வேறு எந்த விதத்திலாவது அணியலாம் என்பதுதான் அது.

நங்கேலி வசித்து வந்த இடத்திற்கு ‘முலச்சிப்பறம்பு’ எனப்பெயரிடப்பட்டது. ‘முலச்சிப்பறம்பு’ என்றால் மார்பகங்கள் கொண்ட பெண்ணின் நிலம் என்று அர்த்தம். ஆனால் அந்த இடம் அவமான  சின்னமாகக் கருதப்பட்டு அந்த இடத்தை மூடி இன்று அது பலருடைய துண்டு நிலமாகிவிட்டது. சாதிய அடக்குமுறைக்கு எதிராக தன்னுடைய உடலையே சிதைத்துக்கொண்ட நங்கேலியின் வரலாறு தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்தப் பெண்ணுக்கென்று நினைவுச்சின்னம் கூட இல்லை என்பதுதான் வேதனை.