பெண் MAGICIAN மகாலட்சுமி



-ஜெ.சதீஷ்  

எந்தத் துறையாக இருந்தாலும் தடைகளை உடைத்து தடம் பதிப்போம் என்ற அறை கூவலைப் போல், பல்வேறு துறைகளில் தங்களுக்கான ஒரு தனிப்பட்ட அடையாளத்தை பெண்கள் பதிய வைத்து  வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே பயணித்து வந்த மேஜிக் கலைத் துறையில், 2 ஆண்டுகளாக தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு பயணித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பெண் மேஜிக் கலைஞர் மகாலட்சுமி.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் மேஜிக் ஷோ நடத்தி பாராட்டுகளை பெற்றவர். தற்போது துபாயில் தன்னுடைய திறமையால் கலக்கிக்கொண்டிருக்கிறார். தந்திரக் கலை நிகழ்ச்சி ஒன்றின் இடைவெளியில் அவரை சந்தித்தபோது. ‘‘மதுரைதான் என்னுடைய சொந்த ஊர். நான் குழந்தையாக இருக்கும்போதே என்னுடைய தந்தை எங்களை விட்டுப் பிரிந்து வேறொரு குடும்பத்தோடு சென்று விட்டார்.

அக்கா, அண்ணன், அம்மா என மூன்று பேர் கொண்ட சிறிய குடும்பம் எங்களுடையது. அம்மாவின் பெரிய நம்பிக்கை என் அண்ணன்தான். ஒரு காலகட்டத்தில் அண்ணனும், அக்காவும் திருமணமாகிச் சென்ற பின்பும் அம்மாவும் நானும் தனிமையாக்கப்பட்டோம். வறுமை ஒரு பக்கம், தனிமை ஒரு பக்கம் என இரண்டு சோதனைகளுக்கு நடுவே பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் முடித்தேன்.

பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பள்ளியில் ஒரு மேஜிக் ஷோ நடைபெற்றது. அதிலிருந்துதான் எனக்கு இந்தக் கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது. மதுரையில் உள்ள ஒரு மேஜிக் கலைஞரை சந்தித்து எனக்கு இந்தக் கலையை கற்றுத் தரும்படி கேட்டேன். அவர் அதெல்லாம் உன்னால் செய்ய முடியாது என்று கற்றுத்தர மறுத்துவிட்டார்.

வேறொருவர் சில கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் கற்றுத் தருவதாகச் சொன்னார். ஆண்கள் மட்டும் கோலோச்சும் ஒரு துறையை பெண் கையிலெடுக்கக் கூடாதா? அதை இந்த சமுதாயம் ஏன் விரும்பவில்லை என்ற பல கேள்விகள் அப்பொழுது எனக்கு தோன்றியது. நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு, அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு தந்திரக் கலை தொடர்பான புத்தகங்களை படித்து கொஞ்சம் கொஞ்சமாக நானே கற்றுக்கொண்டேன்.

பகுதி நேர வேலைக்குச் சென்று மேஜிக் செய்வதற்கான பொருட்களை வாங்கினேன். அந்த சமயத்தில்தான் மெஜிஷியன் ராக்கேஷ் பற்றி இணையம் மூலம் பார்த்து, அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்தான் என்னுடைய முதல் குரு. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்தவர். எனக்கு முறையாக தந்திரக் கலையை சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.

திடீரென ஒரு நாள் அழைத்து இன்றைக்கு நீங்கள்தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றார். எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் எப்படி மேடையில் நிகழ்ச்சியை நடத்தப் போகிறேன் என்ற எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. நல்லவேளையாக நல்ல முறையில் நிகழ்ச்சி முடிந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. ராக்கேஷ் மேலும் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார். ‘நீ தனியாகவே நிகழ்ச்சிகளை நடத்து’ என்று தைரியம் கொடுத்தார்.

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்களில் மேஜிக் ஷோ நடத்தினேன். பார்வையாளர்கள் ஒரு பெண் மெஜிஷியனா என்று ஆச்சரியமாகப் பார்த்தனர். பல பேர் பாராட்டினார்கள். அந்த நேரத்தில் வறுமையின் ஆதிக்கத்தால் அடிபட்டுக் கிடந்தேன். புத்தகம் வாங்குவதற்குக் கூட எங்களிடம் பணம் கிடையாது. அபு பக்கர் என்கிற நண்பர் எனக்கு புத்தகம் வாங்க உதவி செய்தார்.

பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் எனக்கு உணவு வாங்கித் தருவார்கள். அதுதான் அன்றைக்கு நினைவிற்கு வந்தது எனக்கு. அப்படியே ஒரு வழியாக கல்லூரிப் படிப்பை முடித்தேன். எம்.எஸ்சி படிக்க வேண்டும் என்று ஆசையும் இருந்தது. வறுமையின் காரணமாக என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

நான் எந்த அளவிற்கு நல்லவர்களை சந்தித்தேனோ அதைவிட அதிகமான கொடியவர்களையும் இந்த சமுதாயத்தில் சந்தித்தேன். கல்லூரிப் படிப்பை முடித்து நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது எனக்கு உதவியாக என் அம்மாதான் வருவார். சில நேரங்களில் இரவு வீட்டிற்கு வருவதற்கு நேரமாகும், எங்களைச் சுற்றி இருப்பவர்கள் சிலர், எங்களை தவறாக எண்ணினார்கள்.

ஏன் இரண்டு பெண்கள் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தால் அவர்கள் தவறானவர்கள் என்று எண்ணுகிறார்கள் என்று பல முறை கோபப்பட்டதும் உண்டு. அதனால் அந்த சூழலில் இருந்து விடுபட வேறு இடத்திற்கு குடியேறினோம். ஆண் இல்லாத வீட்டில் என்னை வளர்த்து இந்த சமுதாயத்தில் என்னை ஒரு நல்ல திறமைசாலியாக மாற்றியவர் என் அம்மாதான். ஆரம்பத்தில் அம்மா கொஞ்சம் பயந்தார்.

பிறகு அவர்களே எனக்கு உதவியாக இருந்து என்னை வழிநடத்தினார். மற்ற மெஜிஷியன்களிடையே போட்டிகளை விட பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதனால் மதுரை தவிர மற்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். பெரிதாக வருமானம் இல்லை என்றாலும் இரண்டு பேருக்குப் போதுமான வருமானத்தை சம்பாதித்து வந்தேன். அரசுப் பேருந்தில்தான் அம்மாவும் நானும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவோம்.

இரண்டு பைகளில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வோம். சில இடங்களில் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் பணம் தருவார்கள். எனக்கு போக்குவரத்து பெரும் பிரச்சனையாகவே இருந்தது.  ஒரு வழியாக ஒரு டூ வீலர் வாங்கி பயன்படுத்தி வந்தேன். அதற்கு மாதம் மாதம் கொடுக்கக்கூடிய பணம் கொடுக்க முடியாததால் கம்பெனியில் எடுத்துக்கொண்டார்கள். என்னுடைய குரு ராக்கேஷ்தான் உதவி செய்து என் டூ வீலரை எனக்கு மீட்டுக் கொடுத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஒருவர் ‘நீங்கள்  மேஜிக் செய்யும் பொருட்களை குறைவாக எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி 500 மட்டும் கொடுத்து அனுப்பினார். சிரமப்பட்டு வீடு வந்து சேர்ந்ததை என்னால் மறக்கவே முடியாது. சென்னையில் தமிழரசன் என்கிற நண்பர்  எனக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தந்து உதவினார்.

அப்படியே ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரவீன் என்ற நண்பர் ஒருவர் எனக்கு  துபாய் செல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். எனக்கு விசா முதல், தங்குவதற்கு விடுதி என அனைத்து வசதியையும் அமைத்துக்கொடுத்து எனக்கு ஒரு வேலையையும் கிடைக்கச் செய்தார். இப்போது நான் துபாயில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில் ஷோ ஆர்கனைசராகவும், அவ்வப்போது  மேஜிக் ஷோவும் நடத்தி வருகிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து, ஒரு மேஜிக் ஷோ புரோகிராம் நடத்தித்தரச்சொல்லி கேட்டார்கள். நல்ல முறையில் நடத்திக்கொடுத்தேன். சிறந்த வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு பல இடங்களில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள். வேலை நேரம் சரியாக இருப்பதால் என்னால் நிகழ்ச்சிகள் நடத்த இந்தியா வர முடியவில்லை.

கிடைக்கக்கூடிய வருமானத்தில் மாதம் மாதம் அம்மாவிற்கு பணம் அனுப்புகிறேன். வலுவான எந்த ஒரு குடும்பப் பின்னணியும் இல்லாமல் என்னை இந்த அளவிற்கு வளர்த்த என் தாய்க்குத்தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்கிறார் தந்திரக் கலை நிபுணர் மகாலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்த மெஜிஷியன் ராக்கேஷை தொடர்பு கொண்டபோது, ‘‘ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் மிகவும் திறமையானவர் மகி.

நான் இதுவரை யாருக்கும் தந்திரக் கலையை சொல்லிக் கொடுத்தது கிடையாது. மகியின் ஈடுபாடும் ஆர்வமும்தான் அவரை வளரச்செய்துள்ளது. இன்டர்நெட்டில் என்னுடைய நிகழ்ச்சிகளைப் பார்த்து என்னை தொடர்பு கொண்டு பேசினார். உங்களுடைய புரோகிராம் வீடியோ ஒன்று அனுப்புங்கள் என்றேன். அவர் அனுப்பிய வீடியோவில் பார்த்தபோது ஒரு தொழிற்முறை மேஜிக் கலைஞர் செய்வது போல் நிகழ்ச்சியை செய்து இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரை உடனே வரவழைத்து அவருக்கு மேஜிக் கற்றுக்கொடுக்க தொடங்கி விட்டேன்.

இந்தியாவிலே பெண் மெஜிஷியன்ஸ் எண்ணிக்கை குறைவுதான். மகியின் முயற்சி பாராட்டத்தக்கது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன் திறமை மூலம் மகி இந்தளவுக்கு உயர்ந்துள்ளார். மியூசிக் இல்லாமல், பார்வையாளர்களிடையே கலந்துரையாடி மேஜிக் நிகழ்த்துவது ஆண்கள் மட்டுமே செய்து வந்தார்கள், ஆனால் மகி அதை கற்றுக்கொண்டு செய்து வருகிறார்.

முழுமையான ஈடுபாடும், ஆர்வமும் இல்லாமல் இதை செய்ய முடியாது. மகியின் முயற்சிகளில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்’’ என்றார். ராக்கேஷை தொடர்ந்து மகாலட்சுமியின் தாயாரிடம் பேசினேன். ‘‘மகாலட்சுமியின் அப்பா சின்ன வயசுலயே எங்களை விட்டு  வேற குடும்பத்துக்கு போயிட்டார். அந்தப் பிள்ளைக்கு கலெக்டர் ஆகணும்னுதான் ஆசை. என்கிட்ட வசதி இல்லாததால மேற்கொண்டு படிக்க வெக்க முடியல. மகிக்கு சின்ன வயசுல இருந்து மேஜிக் கத்துக்கணும்னு ஆசை இருந்துச்சு.

பெங்களூர்ல இருக்கும் தம்பி ஒருத்தர்தான் நல்லா கத்துக்கொடுத்து இப்போ துபாய் வரைக்கும் போய் வேல பாக்குது என் புள்ள. ரொம்ப கஷ்டப்பட்டுதான் வளர்த்தேன். நான் டைலரிங் வேல பாத்து செலவுக்கு கொஞ்சம் காசு கொடுப்பேன். புரோகிராம் எல்லாம் போக வேண்டாம்னுதான் சொன்னேன். வீட்டுக் கஷ்டம் வேற. அதனால நானும் கூடவே போ்ய் உதவியா இருந்தேன்.

எங்கக் குடும்பத்துல யாரும் வெளிநாடு போனது கிடையாது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இருந்தாலும் என் பொண்னு என் கூட இல்லைங்கும்போது வருத்தமாத்தான் இருக்கு. ஸ்கூல் படிக்கும்போதே ரொம்பத் திறமையா இருப்பா. எல்லா டீச்சருக்கும் ரொம்பப் பிடிக்கும் மகியை. காலேஜ்ல மேற்கொண்டு படிக்க வைக்க சொன்னாங்க. ஆனா முடியாம போச்சு’’ என்று கூறும்போது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. “எங்களுக்கு யாரும் துணையா இல்லை.  நம்புனவங்க யாரும் எங்கள பாத்துக்கலை. என் பொண்ணு சம்பாதிச்சுதான்  இப்போ என்னைப் பாத்துக்குது’’ என்கிறார் ஜெயலட்சுமி.