செல்ஃபி புள்ள...



-மகேஸ்வரி

இப்போதெல்லாம் திருமணத்திற்குச் சென்று, மேடை ஏறி மணமக்களிடம் அன்பளிப்பை கொடுத்து, வாழ்த்திவிட்டு இறங்கினாலே புது மணத் தம்பதியோடு மண மேடையில் நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்போதே நம் கைகளில் திணித்து விடுகிறார்கள். அட! என நாம் ஆச்சரியம் மேலிட கண்களை அகல விரித்துத் திரும்பினால், திருமண அரங்கத்தின் ஓர் ஓரத்தில் வைத்திருக்கிறார்கள் அந்த பெரிய செல்ஃபி பூத் மெஷினை.

வாண்டுகள், நண்பர்கள், வந்திருக்கும் உறவினர்கள் என அனைவரும் அந்த செல்ஃபி பூத் முன் கூட்டமாக, தனியாக, நண்பர்கள் படை சூழ, உறவினரோடு என விதவிதமாய் விரும்பிய விதத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அப்போதே இன்ஸ்டன்ட் ஸ்நாப்பாக தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, கைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமாக சில கார்ட்டூன் உருவ முகமூடிகள், பல வண்ணங்களில் கண்ணாடிகள், கலர் கலராய் தொப்பிகள் என அணிந்து வாண்டுகள் படம் எடுத்துக் குதூகலிக்கிறார்கள். இளைஞர்கள் பட்டாளமும் விதவிதமாக தங்கள் முகங்களை மாற்றி அபிநயம் காட்டிஇஷ்டப்பட்டவர்களுடன் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள். பிக் செல்ஃபி பூத் பற்றி அறிய அதை நிர்வகிக்கும் த்ரீ ஸ்டார் எண்டர்பிரைசஸ் மேலாளர் ராகவனை அணுகியபோது, இது குறித்து விரிவாக விளக்கினார்.

‘‘உங்கள் வீட்டுத் திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் கொண்டாட்டம், கெட் டூ கெதர் நிகழ்ச்சிகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுடைய ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிகழ்வுகள், நிறுவனங்களின் ப்ராடக்ட் லான்ஞ்ச் நிகழ்ச்சிகள், திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள், மிகப் பெரிய மால்களில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் இந்த பிக் செல்ஃபி பூத் மெஷினை வைத்துவிடுவோம்.

இதில் என்ன சிறப்பு என்றால், எந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாம் சென்றாலும் அந்த நிகழ்ச்சியின் நினைவுகளை புகைப்படமாக எடுத்து அதைத் தொகுத்து, ஆல்பமாக்கி நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் பிக் செல்ஃபி பூத்தில், நிகழ்வில் கலந்துகொண்ட நமது புகைப்படம், நிகழ்ச்சியில் இருந்து நாம் கிளம்பும்போது, அந்த இடத்தில் அப்போதே நம் கைகளில் போட்டோ ஃபிரேமில் வைத்து வழங்கப்பட்டுவிடும். 30 விநாடிகளில் ஒரு புகைப்படம் பதிவாகிவிடும்.

ஒவ்வொரு புகைப்படப் பதிவிற்கும் 4 ஃபிரேம் வைத்திருப்போம். அவை அடுத்தடுத்த விநாடியில் படம்பிடிக்கப்பட்டுவிடும். நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எங்களை அணுகி எந்தமாதிரியான நிகழ்ச்சி, அதில் பின்னணியில் என்ன இருக்க வேண்டும் போன்றவற்றை முன்கூட்டியே கூறிவிட்டால் அவற்றை நாங்கள் தயார் செய்து வைத்துவிடுவோம். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் பின்னணியில் அந்தக் காட்சி இணைந்திருக்கும்.

உதாரணத்திற்கு திருமண நிகழ்ச்சியாக இருந்தால், மணமக்களோடு அவர்களது திருமண மேடை அமைப்பு ஒவ்வொரு புகைப்படத்தில் பின்னால் இருப்பதுபோன்று செல்ஃபி பூத் முன் நின்று புகைப்படம் எடுப்பவரின் பின்னணி வரும். அதுவே ஒரு கார் நிறுவனத்தின் கார்  லான்ஞ்ச் நிகழ்ச்சியாக இருந்தால் அதில் கலந்துகொள்ளும் கார்ப்ரேட்களின் புகைப்படத்தின் பின்னணியில் அந்த காரின் தோற்றம் இருப்பதுபோல் அமைத்திருப்போம்.

மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகைப்படம் எடுப்பவர்களின் படங்களை அந்த நிமிடமே அவர்களது மெயில் ஐ.டி, எஸ்.எம் எஸ், முகநூல் பக்கம், டுவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களோடு இணைத்து அடுத்த நொடியிலே அனுப்பிவிடுவோம்.

இதன் மூலம், அவர்களின் மெயில் ஐ.டி. சேகரிக்கப்பட்டு விடுவதுடன், நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்தின் தயாரிப்பு, செயல்பாடு பற்றி அனைத்து விவரங்களும் அவர்களுக்கு ஷேர் ஆகிவிடும். இதன் மூலம் சோஷியல் மீடியா நெட்வொர்க் தொடர்பு நிகழ்ச்சியினை நடத்தும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விரிவடைகிறது. அனைவரின் மெயில் ஐ.டி,யும் ஒரே நேரத்தில் சேகரிக்கப்பட்டு விடுகிறது.

இந்த பிக் செல்ஃபி பூத் என்பது கியாஸ்க் (KIOSK) எனப்படும். அதாவது வங்கி நடவடிக்கைகளில் மேனுவலாக இல்லாமல் கம்ப்யூட்டர் மூலமாக பணம் செலுத்துவது, எடுப்பது, பாஸ்புக் பிரின்ட், செக் டெபாஸிட் மெஷின், டச் ஸ்கிரின் இன்பர்மேஷன் இவை எல்லாமே கியாஸ்க் என அழைக்கப்படும். அதற்குள் இயக்கப்படும் மென்பொருள் செயலிமட்டுமே வேறுபடும்.

இதில் பிக் செல்ஃபி பூத் எனப்படும் கியாஸ்க் மெஷினில் போட்டோ சாஃப்ட்வேர் உள்ளே இருக்கும். அதில் எல்லாம் ரெடிமேடாக போட்டோ ஷாப், பேக்ரவுண்ட் செட்டிங், போட்டோ பிரின்ட் எல்லாம் சாஃப்ட்வேரில் செட் செய்து வைக்கப்பட்டிருக்கும். இதை ஒரு சின்னக் குழந்தைகூட இயக்கி செல்ஃபி பூத் முன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். பிரின்ட் எடுக்க முடியும்.

பிரின்ட் தேவை இல்லை என்றால் சோஷியல் மீடியா நெட் வொர்க்கை இணைத்து தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்போதே ஷேர் செய்துகொள்ள முடியும். பிக் செல்ஃபி பூத் கியாஸ்க் மெஷின் தங்கள் நிகழ்ச்சியின் நேரத்தைப் பொருத்து வாடகைக்கு கிடைக்கும். மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கு 10,000 ரூபாய் வாடகை.

இதில் 30 விநாடிக்கு ஒரு போட்டோ என எத்தனை போட்டோ வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். பிரின்ட் அவுட்டும் எத்தனை வேண்டுமென்றாலும் தரப்படும். அன்லிமிட்டெட் போட்டோ மற்றும் அன் லிமிட்டெட் பிரின்ட் அவுட். 7 மணி நேரம் நிகழ்ச்சி என்றால் 15,000 ரூபாய் வாடகை. இதில் போட்டோ பிரின்ட் அவுட் கிடையாது. அதற்கு பதிலாக உங்களின் புகைப்படம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படும்” என முடித்தார்.

படங்கள்: ஆர்.கோபால்