வண்ணக் கனவுகள்



-ஜெ.சதீஷ்

பல துறைகளில் பெண் ஆளுமையாகவும், பெண்ணிய எழுத்தாளராகவும், சிறந்த ஓவியராகவும் பன்முகத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாராகணேசனை சரளாஸ் ஓவியக் கலை கூடத்தில் சந்தித்தேன். பின்நவீனத்துவ ஓவியங்களுக்கு நடுவே அவரிடம் பேசத் துவங்கினேன்...

‘‘சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டிற்கு ஒரே குழந்தை நான். என்னுடன் சண்டை போடுவதற்குக் கூட அண்ணனோ, தங்கையோ கிடையாது. அம்மாவும், அப்பாவும் பிசினஸ் பிசியிலே இருப்பார்கள். என்னுடைய துணையாக என்னுடனே இருந்தவர் என்னுடைய பாட்டி மட்டும்தான். அப்போதைய காலகட்டத்தில் நண்பர்களிடம் பழகுவதற்குக் கூட கட்டுப்பாடுகள் இருந்தன எங்கள் குடும்பத்தில்.

அந்த சமயத்தில் எனக்கு தோழமையாக இருந்தது புத்தகங்கள் மட்டுமே. நாவல்கள் படிக்கத்தொடங்கி கவிதைகளின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஷேக்ஸ்பியர் தொடங்கி இன்றைக்கு இருக்கக்கூடிய புகழ் பெற்ற கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை படித்து வருகிறேன். ஆங்கிலம், தமிழில் வானம்பாடி தொடங்கி பல்வேறு கவிதைகளை வாசித்திருக்கிறேன். நாவல்கள் படிக்கும் போது கிடைக்காத ஒரு சந்தோஷம் கவிதை வாசிப்பில் எனக்கு கிடைத்தது. கவிதைகளைத் தொடர்ந்து நவீன கவிதைகளுக்குள் நுழைந்தேன்.

மரபு சார்ந்த கவிதைகளை என்னுடைய ‘உள்ளங்கள் தீப்பிடித்தால்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பில் எழுதினேன். அதன் பிறகு நவீனத்துவக் கவிதைகளும், பின்நவீனத்துவக் கவிதைகள் என மொத்தம் 5 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன். எழுத்துத் துறையில் மட்டும் பயணிப்பதால் நான் ஒருமுகத்தன்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேனோ என்று தோன்றியது.

என்னுடைய கவிதைகளுக்கு நான் உருவம் கொடுக்கவே ஓவியத்தை தேர்வு செய்தேன். எந்த ஓவியக் கல்லூரியிலும் படிக்கவில்லை, தமிழ் இலக்கியம் பயிலவில்லை, என்னுடைய ஆர்வத்தினாலே 15 வருடங்களாக ஓவியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கவிஞராகவும், பன்முகத்தன்மையோடு பயணித்து வருகிறேன்’’ என்கிறவர் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில்  பட்டம் பெற்றவர்.

இது மட்டுமல்லாமல் எம்.ஏ(பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்திருக்கிறார். கலை சார்ந்த எந்த எவற்றுக்கும் கல்லூரி சென்றுதான் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார் அழுத்தமாக. ‘‘ஒருவருக்கு ஒரு கலையின் மீது இருக்கக்கூடிய ஆர்வமே அவரை சிறந்த கலைஞராக மாற்றி விடும். நான் பார்த்துக்கொண்டிருந்த ஓவியமே எனக்கு ஆசானாக மாறியது என்பதே ஒரு எடுத்துக்காட்டு.

ஆரம்ப காலங்களில் டாவின்சி, வான்கா போன்றவர்களின் ஓவியங்கள்தான் அதிகமாக கவனிப்பேன். ஓவியமும் சிற்பமும் கலந்த கலவையாக இவர்கள் இருந்துள்ளார்கள்.  மொசாட்டின் இசையும், வான்காவின் ஓவியமும் என்னை இனம் புரியாத உலகிற்கு கொண்டு சென்றன.  இப்படி ஓவியம், இசை, கவிதைகள் என மூன்றும் ஒரு கோணத்தில் கொண்டுவருவதற்கு நான் தேர்ந்தெடுத்த வழிதான் பின்நவீனத்துவ ஓவியம்.

நவீனத்துவ ஓவியங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காட்சிகளாகத் தெரியும். மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் என்னுடைய ஓவியத்தை பார்க்கும்போது  மன அமைதி கிடைக்கும் என்றால் அதுதான் என் ஓவியத்துக்கு கிடைத்த வெற்றி என்பேன்.  எந்தப் படத்தை தீட்ட போகிறோம் என்று முடிவெடுத்துத் தீட்டுவது பின்நவீனத்துவ ஓவியம் கிடையாது. கண் இமைக்கும் நேரத்தில் முடிவெடுத்து அதற்கு உயிர் கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும்.

என்னுடைய ஓவியங்கள் அனைத்தையுமே நான் இதைத்தான் வரைய போகிறேன் என்று முடிவெடுத்தபின் வரையப்பட்டவை இல்லை. என்னுடைய ஓவியங்கள் தினந்தோறும் எனக்கு ஒரு சவாலை கொடுத்தன. ஏனென்றால் ஓவியங்களை நான் தூரிகைகளால் வரைவது கிடையாது, என்னுடைய கைகளால் வரைகிறேன். நான் எதிர்கொள்கின்ற இந்த சவால் என்னவாக உருவாகிறது என்றால் அது எனக்கும் தெரியாது, என் கைகளுக்கும் தெரியாது.

ஆனால் அது மற்றவர்களின் பார்வைக்கு அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றதுபோல் தோன்றினால் அதுதான் அந்த ஓவியத்தின் வெற்றி. ஓவியரும், கவிஞரும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது படைப்பு எப்பொழுதும் புதிதாகவே இருக்கும். நான் எல்லா மாற்றங்களுக்கும் முகங்கொடுக்கிறேன்.

ஆகவேதான் எல்லா காலகட்டத்திலும் என்னால் இயங்க முடிகிறது’’ என்றவர் ராஜலஷ்மி பொறியியல் கல்லூரியில் 2 ஆண்டுகள் இயக்குனராகவும், விநாயகா பல்கலைகழத்தில் 8 ஆண்டுகள் கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்து, ஐஐடியில் நிறுவன வளர்ச்சித் துறையில் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

தற்போது சுய தொழிலாக டிரைடென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாளராகவும் பணியாற்றி வருகிறார். இடைவிடா பணிச்சுமைகளுக்கு நடுவே, ஓவியராகவும், எழுத்தாளராகவும் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதை விளக்குகிறார். ‘‘ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்.  அதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதுதான் நம்முடைய சாமர்த்தியம். நான் பெரும்பாலும் இரவு நேரங்களில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என்னுடைய ஓவியங்களைத் தீட்ட விரும்புகிறேன்.

அந்த வெளிச்சம் எனக்கு அமைதியையும், வித்தியாசமான புதிய சிந்தனையையும் கொடுக்கிறது. அந்த நேரம் எனக்கு உகந்ததாக இருக்கிறது. எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்வதற்கோ அல்லது அதை உணர்ந்து கொள்வதற்கோ நேரம் இல்லையென்று சொல்கிறவர்கள் முட்டாள்கள். நேரம் இல்லை என்ற காரணத்தை வைத்தே பல பெண்கள் இந்தத் துறையில் பயணிக்க விரும்புவது இல்லை.

காலம் மாறினாலும் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி ஒரு விஷயத்தை தவிர்ப்பது அவர்களின் தவறு. பெண்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து’’ என்கிறவர் தன் எழுத்துகளின் முன்னோடி கவிஞர் கமலாதாஸ்தான் என்கிறார். எழுத்துக்களை தாண்டி நவீன சிற்பியாகவும் தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார்.
 
‘‘உலகில் இருக்கக்கூடிய அனைத்து வகையான இசைகளையும் கேட்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கிறது. மரணமே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற பேராசையும் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய கலைப்பயணம் மரணத்தால் முடிந்து விடக்கூடாது என்பதால். பஞ்ச பூதங்கள்தான் என்னுடைய கலைகளின் தாயாக இருக்கின்றன. ஓர் ஓவியம் தனக்கான சுவரை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

ஆனால் ஓவியத்தை பார்ப்பதற்கும் அதைப் பற்றிப் பேசுவதற்கும் இந்த சமூகத்தில் நேரம் இல்லை என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விஷயம். பள்ளிக் குழந்தைகளை ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். சிறு வயது முதலே அவர்களுக்கு கலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார்  தாரா கணேசன்.

படங்கள்: ஆர்.கோபால்