வானவில் சந்தை



நிதித் திட்டமிடலும் குடும்பமும்

முந்தைய இதழ்களில், ஒரு குடும்பத்தில் கணவனுக்கு இணையாகவே மனைவியும் நிதி சார்ந்த விவகாரங்களில் பங்கு கொள்ள வேண்டிய தேவையையும், அதைச் செய்வதற்கு நிதித் திட்டமிடல் எப்படி உதவும் என்றும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். அதற்கு முதலில் குடும்பத்தின் வரவு செலவு பற்றிய தகவல்கள் தேவை. எடுத்துக்காட்டாக, வருமானம் என்றால் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள். சம்பளக்காரர்களுக்கு வருமானத் தகவல் வெளிப்படையாக இருக்கும்.

தொழில்முனைவோருக்கு அது அவ்வளவு தெளிவானதாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதனால் நிதி மேலாண்மை இரு வகையினருக்கும் ஒரே போன்றதல்ல. இந்தக் கட்டுரையில் மாதச் சம்பளக்காரர்களை பற்றிப் பார்க்கலாம். வருமானம் பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஓரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது.

அடுத்த ஒரு வருடத்துக்கான செலவுகளை திட்டமிட இதுதான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடுவதற்கு ஊக்கத்தொகையை (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். செலவு இதில்தான் பலருக்கும் பிரச்னை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கேதான்.

எங்கள் அனுபவத்தில், கணவன்-மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவி குடும்பத்திற்கு உழைப்பை வழங்குகிறாள். அதனால் அவள் தன்னால் ‘நன்கு கவனிக்கப்பட’ வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி என்பவள் குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது.

இதில் கணவனுடைய ‘பெருந்தன்மை’ ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் மட்டும் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய ‘பெருந்தன்மைக்கு’ வேலையில்லை. 

செலவுகளை மூன்றாகப் பிரிக்கலாம்
1. வாழ்வுச்செலவு
2. தொழில் செலவு
3. விருப்பச் செலவு.

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு. இதில் மருத்துவச் செலவு என்பது வழக்கமான, காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கான சிறு செலவுகளையே குறிக்கும். தொழில் செலவு என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கும் உண்டு. அதாவது, வேலை நிமித்தம் அவர்கள் செய்ய வேண்டியவை (நிறுவனத்தால் திரும்பக் கொடுக்கப்படாத செலவுகள்). இதில் போக்குவரத்து, சாப்பாடு, சக பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளும் செலவுகள் போன்றவை அடங்கும்.

மேற்கண்ட இரண்டும் அடிப்படை செலவுகள் எனலாம். மூன்றாவதான விருப்பச் செலவு (பொழுதுபோக்குச் செலவு, தனித்த விருப்பங்களுக்கான செலவு, தானம் போன்றவை) என்பது அடிப்படையானதல்ல. ஆனால் நிதிமேலாண்மையில் பெரும் பாதிப்பைச் செலுத்துவது அதுதான். ஏனென்றால், வாழ்வு மற்றும் தொழிற் செலவுகளில் பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை. ஆனால் விருப்பச் செலவுகள் ஒருவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செல்போனை (விலை ரூ.30000 என்று வைத்துக் கொள்வோம்) மாற்றும் ஒருவர் தான் மாதந்தோறும் ரூ.1250 செல்போனுக்காக செலவு செய்வதாக உணர்வதில்லை. அவரையே ஓய்வூதியத்திற்கென கூடுதலாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கச் சொன்னால் இல்லையென்பார். அதனால், ஒரு குடும்பம் தனது எதிர்கால திட்டங்களுக்கு பணம் ஒதுக்கிய பின்பே விருப்பச் செலவுகளை செய்யவேண்டும்.

ஏனென்றால் விருப்பச் செலவுகளின் உடனடி நுகர்வின்பம் (அறுபது வயதில் கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியத்தை விட இன்றைய ஐபோன் 7 அதிகக் கவர்ச்சியானது) அளிக்கும் தூண்டுதல் அப்படி. அது மனித மனத்தின் பொதுவான பலவீனம். உண்மையில் ஒரு குடும்பத்தின் நிதித் திட்டமிடலுக்கான தேவை என்பது இந்த தனி மனித பலவீனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவும்.

ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதைக் கொண்டே நிதிக் குறிக்கோள்களை (குழந்தைகளின் கல்வி, திருமணம், சொந்தவீடு, ஓய்வுக்கால நிதி போன்றவை) அடையத் திட்டமிட முடியும். அதை நிகர இருப்பு எனலாம். ஒரு வகையில், மாத வருமானக்காரர்களின் நிதித்திட்டமிடல் என்பது நிகர இருப்பைத் திட்டமிடுதலே. அதன் அடிப்படைகளை கீழே காணலாம்.

காப்பீட்டுத் திட்டமிடல் (Insurance Planning)
நிகர இருப்பின் முதல் செலவு காப்பீட்டுக்கானது. அடிப்படை காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாத எந்த திட்டமும் மணல் மேல் கோட்டைதான். அதிலும் மருத்துவச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள சமூகத்தில், காப்பீட்டுத் துணையில்லாத ஒரு குடும்பம் எதிர்பாராத நிதிப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் அதிகம். ஒரு குடும்பத்திற்கு அடிப்படையாகத் தேவைப்படும் காப்பீடுகள் மூன்று வகை.

முதலாவது, சம்பாதிக்கும் நபருக்கான ஆயுள் காப்பீடு. இதன் நோக்கம், எதிர்பாராத விபத்தினாலோ அல்லது மரணத்தாலோ, குடும்பத்திற்கான பண வரத்திற்குக் காரணமான நபர் மூலம் வரும் வருமானத்தை இழப்பதிலிருந்து குடும்பத்தை காப்பதே. இரண்டாவது, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆன மருத்துவக் காப்பீடு. பெரிய மருத்துவச் செலவுகள் எவரையும் புரட்டிப் போட்டு விடும்.

அதற்கான பெரும்பணத்தை எப்போதும் கையிருப்பில் வைத்திருப்பது பணக்காரர்களன்றி யாருக்கும் சாத்தியமில்லை. பெரிய மருத்துவச் செலவை எதிர்கொள்ளும் காப்பீடு இல்லாதவர்கள், அதுவரை சேர்த்த செல்வத்தை இழக்க நேரிடும் அல்லது பெரும் கடனை சுமக்க நேரிடும். மூன்றாவதாக, ஒரு குடும்பத்தின் சொத்துகளை (வீடு, வாகனங்கள், பொருட்கள் போன்றவை) காப்பீடு செய்தல்.

இங்கு பெரும் வசதியுள்ளவர்கள் கூட வீட்டைக் காப்பீடு செய்யாத சூழலே உள்ளது. சென்னை வெள்ளத்தின்போதும் வர்தா புயலின்போதும் இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகும் கூட சொத்துகளை காப்பீடு செய்வதென்பது இங்கு தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் வாகனங்கள் பெரும்பாலும் காப்பீடு செய்யப்பட்டிருப்பது, அது சட்டத் தேவை என்பதானாலேயே. உண்மையில் ஒரு குடும்பத்தின் முதல் செலவு காப்பீட்டுக்கானதாகவே இருக்க வேண்டும். அப்படியல்லாத எந்தத் திட்டமும் குறைபட்டதே.

நிதிக் குறிக்கோள்களை திட்டமிடுதல்
காப்பீட்டுத் திட்டத்திற்கு அடுத்ததாக, குடும்பத்தின் நிதிக்குறிக்கோள்களை திட்டமிட வேண்டும். அவற்றைக் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்கள் என வகைப் படுத்தலாம். நான்கு வருடங்களில் வரும் உயர்கல்விச் செலவைக் குறுகிய காலத் திட்டமென்றால், பதினைந்து வருடங்களில் தேவைப்படும் ஓய்வுகால நிதியை நீண்ட காலத் திட்டம் எனலாம்.

இவை ஒவ்வொன்றுக்கும் அதன் கால அளவைப் பொறுத்து சரியான முதலீடுகளை செய்ய வேண்டும். இதற்கான நேரத்தை ஒதுக்கி அதைச் செய்ய வேண்டும். சம்பாத்தியத்திற்கு உழைக்கும் நேரத்தில் ஒரு சிறிய அளவையாவது அதைத் திட்டமிடுவதில் பெண்கள் செலுத்த வேண்டும். முடியாதவர்கள் நிதித் திட்டமிடுபவர்கள் அல்லது நிதி ஆலோசகர்களின் சேவையைக் கோரிப் பெறலாம். ஏனென்றால் சரியான திட்டமிடுதலே பாதி வெற்றிதான்.