ஜும்பா டான்ஸ் ஆடுங்க ஃபிட் ஆயிடுங்க...



உடல் பருமன் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை. தூங்கப் போகும்போது ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான் இவர்களின் சபதமாக இருக்கும். காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு குட்பை சொல்லிவிடும். உடற்பயிற்சி என்பதை கடினமான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு ஜும்பா டான்ஸ் கட்டாயம் கைகொடுக்கும் என்கிறார் ஜும்பா டான்ஸ் பயிற்சியாளர் ஸ்வேதா. ஜும்பா டான்ஸ் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன என்பதைப் பற்றி அவர் நம்மிடம் விளக்கியவை...

“காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப எனக்கு கழுத்துவலி வந்தது. அதற்கான சிகிச்சைகள் எடுத்த போதும் சரியாகவில்லை. அப்பதான் எனது கஸின் எனக்கு இந்த டான்ஸை அறிமுகப்படுத்தினாங்க. அவங்க ஜும்பா டான்ஸ் பயிற்சியாளராக இருந்தாங்க. மருந்து, மாத்திரை, எலக்ட்ரிக் ஷாக் என எவ்வளவோ முயற்சி பண்ணியாச்சு. இதையும் முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு நினைச்சு இந்த டான்ஸை முதன்முதல்ல கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஆனா ஆச்சரியப்படும் விதமா எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்துவலி சரியாக ஆரம்பித்தது. அதனால அப்படியே மூணு மாசம் இந்த நடனத்தில் ட்ரைனிங் கோர்ஸ் படித்தேன். அதற்குப்பிறகு இப்ப பயிற்சியாளரா இருக்கேன். ஜும்பா டான்ஸ் என்பது ஃபிட்னஸ் டான்ஸ். டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஸ்டைலில் இருக்கும். ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும்போது நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும். நிறைய எப்ஃபோர்ட் போட வேண்டி இருக்கும். ஆனால் அதையே டான்ஸா ஆடும்போது கஷ்டம் தெரியாது.

சிறிய இடைவெளிகளுடன் ஒரு மணி நேரம் இந்த டான்ஸ் ஆடும்போது நம் உடலில் கிட்டதட்ட 700 கிராம் கலோரி எரிக்கப்படுகிறது. இதனால் அந்த நடனத்தை தொடர்ந்து ஆடுபவர்கள் அழகாக எடை குறைக்க முடியும். அதாவது ரொம்ப மெலிந்து போகாமல் தேவையான அளவு உடல் ஃபிட்னஸ் ஆக இருக்கும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் சதை குறைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற முறையில் நடன அசைவுகள் அமைக்க முடியும்.

அதாவது கையில் சதை குறைக்க வேண்டி இருந்தால், வயிற்றுத் தசைகள் குறைக்க வேண்டி இருந்தாலும் குறைத்துக்கொள்ளலாம். 3 மாத பயிற்சியில் 12 கிலோ வரை குறைத்தவர்களும் இருக்கிறார்கள். எடை குறைப்பில் தீவிரமாக இருப்பவர்களுக்கு நடனத்திற்கு முன்னர் சிறிது உடற்பயிற்சிகளையும் செய்ய வைக்கிறேன். பொதுவாக டீன் ஏஜ் பெண்கள் தொடங்கி 30-35 வயது வரை உள்ள பெண்களுக்கு கற்றுத்தருகிறோம்.

அதற்கு மேல் உள்ளவர்களுக்கு அவர்கள் வயதிற்கேற்ப இலகுவான நடன அசைவுகளை அமைத்து நடத்துகிறோம். ரொம்ப கடினமான அசைவுகளை செய்ய முடியாதவர்களுக்கு இந்த சலுகை. அதற்கு ஜும்பா டான்ஸ் கோல்டு என்று பெயர் வைத்திருக்கிறோம். கர்ப்பிணி பெண்கள் ஜும்பா டான்ஸில் ஈடுபட வேண்டாம். இதய நோயாளிகள், சிறு குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த நடனத்தை ஆட வேண்டாம்”.

ஒரு நாள் கூட மிஸ் பண்ண மாட்டேன் - நயனா,
மென்பொருள் வல்லுனர்


“எனக்கு சின்ன வயதில் இருந்தே நடனம் என்றால் பிடிக்கும். ஆனால் முறைப்படி எந்த நடனமும் கத்துக்கிட்டதில்லை. ஜும்பா நடனம் கற்றுக்ெகாள்ள சென்றேன். அங்கே வருபவர்களிடம் நீங்கள் எடை குறைப்புக்காக வருகிறீர்களா? ரிலாக்ஸேஷனுக்காக வருகிறீர்களா? என்று எல்லாம் கேட்பார்கள். அது போல என்னிடமும் ஏற்கனவே நீங்கள் சரியான எடையில் இருக்கிறீர்கள், எதற்காக இதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள்.

8ல் இருந்து 9 மணி நேரம் வரை கணினி முன் உட்கார்ந்து வேலை செய்யும் போது எனக்கு ஒரு மன அமைதி தேவைப்படுகிறது என்று தெரிவித்தேன். தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மட்டுமல்லாமல் நமக்கு விருப்பப்பட்ட உணவுகளையும் சாப்பிடுகிறோம். அதனால் உடல் எடை கூட வாய்ப்பு இருக்கிறது என்பதாலும் இந்த டான்ஸில் இணைந்தேன். இதில் ஃபிட்னஸ் கிடைப்பது மட்டுமல்லாமல் இப்போது ரொம்ப ரிலாக்ஸாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வாரத்தில் மூன்று நாள் நடனப் பயிற்சியளிக்கப்படுகிறது. டான்ஸ் ஆரம்பிக்கும் முன் 15 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வைக்கிறார்கள். என்ன டயட்... எப்படி எடுத்துக்கொள்வது போன்ற விஷயங்களையும் சொல்லித்தருகிறார்கள். அதை முறையாக செயல்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. தொடர்ந்து பயிற்சியினால் நல்ல பலன் கிடைக்கிறது. ஜிம்மில் ஆண்களும் இருப்பதால் சில பெண்கள் அவர்கள் முன் பயிற்சி செய்ய சங்கடமாக உணர்வார்கள்.

எங்கள் கிரியேட்டிவ் ஸ்டுடியோ பெண்களுக்காக மட்டும்தான். அதனால் நிறைய பெண்களுக்கு வசதியாக இருக்கிறது. ஜிம்மில் 2 மணிநேரம் செய்யும் பயிற்சிக்கு ஈடானது ஒரு மணி நேரம் இந்த நடனத்தை ஆடுவது. ஜிம்மில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் இணைத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே சிறுமிகள் கூட இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். வயதுக்கு மீறின எடையை குறைக்க சிலர் தங்கள் பெண்பிள்ளைகளை இந்த நடனப் பயிற்சியில் சேர்க்கிறார்கள்.

இது அவர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. இங்கே வேகமாக ஆட விரும்புபவர்கள் வேகமாக ஆடலாம். முடியாதவர்கள் மெதுவாக ஆடலாம். அந்த வசதியும் இருக்கிறது. பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறோம், கலோரிகளை எரிக்கிறோம் என்பது தெரியாமலே நாம் செய்வதுதான் இந்த நடனத்தின் ஸ்பெஷல். நான் விரும்பும் ஒரு விஷயம் எனக்கு பயனுள்ளதாகவும் இருப்பதால் ஒரு நாள் கூட இந்தப் பயிற்சியை நான் மிஸ் செய்ய விரும்புவதில்லை. இதை ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் நான் உணர்கிறேன்”.

ஜும்பா நடனம் என்பது இசையுடன் கூடியது. பல வகை இசைக்கு ஏற்ப ஆடும் போது இயல்பாகவே அந்த பயிற்சி நம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். அதைத் தாண்டியும் ஜும்பா நடனத்திற்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அவை...
 
எடை குறைப்பு
தொடர்ந்து ஒரு நடன அமைப்பை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யும் போது நமது ரத்த ஓட்டம் சீராகும். தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையும். தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் போது இதயம் பலமடைகிறது.
 
உடல் அழகு
அந்தக் காலத்தில் பெண்கள் மாவாட்டுதல், அம்மி அரைத்தல் போன்ற கடுமையான வேலைகள் செய்வார்கள். அதனால் அவர்கள் உடல் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருக்கும். உடல் வடிவமைப்போடு அழகாக காட்சி அளிக்கும். ஆனால் இப்போது இருக்கும் பெரும்பாலானோர் இயந்திரங்களின் உதவி இருப்பதால் உடலை கடுமையான வேலைகளுக்கு உட்படுத்துவதில்லை. அதனால் உடலில் வளைந்து கொடுக்கும் தன்மை இருப்பதில்லை.

அதிலும் எந்நேரமும் கணினி முன் உட்கார்ந்து உடல் உழைப்பை குறைத்து மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பவர்களுக்கு உடலில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை குறைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் ஜும்பா நடனத்தை பழகும்போது இசைக்கு ஏற்றாற்போல் ஆடி ஆடி உங்கள் உடல் எளிதாக வளைந்து நெளிந்து கொடுக்க பழகும். அதனால் உடலில் நளினம் இருக்கும்.
 
மகிழ்ச்சியான மனது
ஜும்பா நடனம் ஆடும் போது உடல் மட்டுமல்ல மனதும் அழகாகிறது. ஆம். கார்டியோ வாஸ்குலர் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்கள் நம் உடலில் தூண்டப்படுகிறது. அதனால் நம் மன அழுத்தம் குறைகிறது. மனது மகிழ்ச்சி கொள்ளும் போது அழகாகவும், பலமாகவும் ஆகிவிடுவது இயல்புதானே.
 
வளர்சிதை மாற்றம்
ஜும்பா நடனம் ஆடும்போது கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடலில் தேவையற்ற கொழுப்பு அகற்றப்படுகிறது. நம் உடலின் மெட்டபாலிஸம்(வளர்சிதை மாற்றம்) அதிகரிக்கிறது. இதனால் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையோடு நாம் இருக்கலாம்.

அல்பெர்ட்டோபெட்டோ என்பவர்தான் ஜும்பா நடனத்தை வடிவமைத்தவர். ஏரோபிக் பயிற்சி யாளரான இவர் ஒருமுறை மேடை நிகழ்ச்சிக்காக செல்கையில் ஏரோபிக் பயிற்சிக்கான டேப்பை மறந்து சென்றுவிட்டார். என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கும் போது காரில் இருந்த பார்ட்டிகளுக்கு பயன்படுத்தும் டேப்பை கொண்டு போய் அதற்கேற்றபடி அசைவுகள் வைத்து ஆடி சமாளித்தார். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஜும்பா டான்ஸ். இன்று மக்கள் ஏரோபிக்கை விடவும் ஜும்பாவை தான் மிகவும் விரும்புகிறார்கள்.