இழந்த பதக்கத்தை என் மாணவர்கள் மூலம் பெறுவேன்



அது இந்தியர்களால் மறந்துவிட முடியாத ஆசிய விளையாட்டுப் போட்டி. 2006ம் ஆண்டு கத்தார் தலைநகரில் பலம் பொருந்திய நாடுகள் போட்டிக் களத்தில் வெற்றிகளைக் குவிக்க, இந்திய வீரர்கள் தங்களது பதக்கக் கனவுகளுக்காக மனதுக்குள் மிகப் பெரிய யுத்தமே நடத்தினர். தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த சாந்தி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதினார். 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம், 3.16 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11க்கும் ேமற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்று நாட்டுக்கு பெருமை ேதடித் தந்தவர் சாந்தி. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதன் பின் சாந்திக்கு நேர்ந்த அவலங்களுக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை. அவர் நிகழ்த்திய சாதனை 10 ஆண்டுகள் கடந்து யாராலும் முறியடிக்கப்படவில்லை.

சாந்தியின் மீது சுமத்தப்பட்ட அவமானத்துக்கும் இன்றளவும் எந்த தீர்வும் இல்லை என்பது மலைக்க வைக்கிறது. விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் அதிகபட்ச வன்முறையே சாந்திக்கு நடந்தது. விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்ணின் தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது யார்? பெண்ணுக்கான மார்பக வளர்ச்சி குறைவாக இருக்கிறது.

நீ பெண் தானா என்ற கேள்வியோடு சுமார் நான்கு மணி நேரம் வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் நிர்வாண நிலையில் சாந்தியை சிறுநீர் கழிக்க வைத்தும், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கும் பாலியல் சோதனை என்ற பெயரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதுவரை பாலியல் பரிசோதனை செய்த அறிக்கை சாந்திக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், அவரிடம் இருந்த பதக்கங்கள் பறிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் உள்ள ஓர் ஆண் தன்னை ஆண் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பெண் தன்னை பெண் என நிரூபிக்க வேண்டும் என்ற அவலத்தின் உச்சம்தான் சாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமை. அதற்கு முன்பு வரை சர்வதேச விளையாட்டுத் தீர்பாயத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பாலின பரிசோதனை திடீரென சாந்திக்கு நடத்த வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்விக்கு இன்று வரை பதிலே இல்லை. அன்று சாந்தி இழந்தது பதக்கம் மட்டும் இல்லை. சாந்தி ஒரு பெண் என்பதன் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு கேட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதன் பின் சாந்தி சந்தித்த ரணம் மிக்க நாட்கள் அவரை குடும்பத்தில் இருந்து விலகியிருக்க வைத்துள்ளது. தன்னை பெண்ணா என்று கேள்வி கேட்டவர்கள் முன்பு ஆண் போல் உடையணிந்து வலம் வர வைத்திருக்கிறது. சாந்தி பிறப்பாலும், மனதாலும், உடலாலும், தான் பெண்தான் என்பதை இந்த உலகுக்கு உரக்கச் சொல்வதற்கான மொழியைத் ேதடி அலைந்து கொண்டிருக்கிறார்.

ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பரிசாக வழங்கப்பட்ட தொகையில் இலவச தடகள பயிற்சிக் கூடம் நடத்தினார். பண நெருக்கடியால் பயிற்சிக் கூடத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த 2014ல் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாய் பயிற்சி மையத்தில் தடகள பயிற்சியாளருக்கான பட்டயப் படிப்பு முடித்தார். பின் அங்கேயே ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். பறிக்கப்பட்ட பதக்கத்தையும், நிரந்தர வேலையும் அளிக்க வேண்டும் என்று சாந்தி மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.

மாநில பள்ளிக் கல்வி, இளைஞர் நலத்துறையின் அமைச்சர் பாண்டியராஜன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சாந்திக்கு தடகள பயிற்சியாளர் பணி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் சாந்தி, ‘‘கிராமப்புறங்களில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகளை சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டி களில் தங்க மங்கைகளாக வலம் வரச் செய்யும் கனவோடு காத்திருக்கிறேன்,’’ என்கிறார்.

வறுமையிலும், சிங்கிள் பேரன்ட் அரவணைப்பிலும் வளர்ந்து வரும் 23 பெண் குழந்தைகளை ‘Adopted Athelete’ என்ற பெயரில் பயிற்சி அளித்து வருகிறார். “ஆசிய விளையாட்டுப் ேபாட்டியில் பெற்று இழந்த பதக்கத்தை எனது குழந்தைகளின் வழியாகப் பெறுவேன்,’’ எனும் தீவிரத்தை சாந்தியின் வலிமையான வார்த்தைகளில் உணர முடிகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கல்வி மையத்தின் ஆய்வு உதவியாளர், மதுரை சிருஷ்டி அமைப்பை சேர்ந்த கோபி சங்கர், சாந்தி தனது லட்சியத்தை அடைய பக்கபலமாக இருக்கிறார். சாந்தியை அக்கா என்று அன்புடன் அழைக்கும் ேகாபி சங்கர் சாந்திக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி வருகிறார். சாந்திக்கு நடந்திருக்கும் கொடுமை ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே அவமானத்துக்கு உள்ளாக்கியுள்ளது என குமுறும் கோபி மேலும் கூறுகையில், ‘‘சாந்தி ஆசியப் போட்டியில் நிகழ்த்திய சாதனையை 10 ஆண்டுகள் கழித்தும் யாரும் முறியடிக்கவில்லை. 

அவருக்கு நடந்திருக்கும் கொடுமையை தட்டிக் கேட்க யாரும் இல்லை. இது சாந்தியின் தனிப்பட்ட பிரச்னை மட்டுமில்லை ஒட்டுமொத்த பெண் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சவால். விளையாட்டுத் துறையில் பெண் மட்டுமே தன்னை ஒரு பெண் என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது போன்ற விதிமுறைகள் யாரால் எதற்காக உருவாக்கப்படுகிறது என்று அடுத்தடுத்து கேள்விகள் உருவாகின்றன.

பெண் குழந்தைகளை விளையாட்டுக்கு அனுப்பவே பெற்றோர் பயப்படுகின்றனர். விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தப்படும் பெண்ணுக்கு பின்பு திருமணம் நடக்குமா என்ற கேள்வி பெண்களின் விளையாட்டு திறனை புதைத்து விடுகிறது. திறமை இருந்தாலும் பெண் என்பவள் இங்கு திருமணத்துக்கு என்றே வளர்க்கப்படுகிறாள். வறுமையான குடும்பச் சூழலில் பிறந்த சாந்தி 800 மீட்டர் தூரத்தைக் கடக்க காற்று போல பறக்க வேண்டும்.

அதற்கு ஏற்ப பயிற்சி செய்த ஒரு விளையாட்டு வீராங்கனையின் உடல் அமைப்பு வழக்கமான பெண்ணைப் போல இல்லை என்று கேள்வி எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது. டெஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் பெண்ணுக்கு உள்ள அளவை விட கொஞ்சம் அதிகம் சுரந்தாலே  அவர்களை ஆண் என்று சொல்லிவிட முடியாது. பிறப்பால் சாந்தி பெண். டெஸ்ட்ரோஜன் அதிகம் உள்ள அனைத்துப் பெண்களும் விளையாட்டில் சாதிப்பார்கள் என்று கூறுவதும் அபத்தம்.

1999ல் சர்வதேச தீர்ப்பாயம் பாலின பரிசோதனையை தடை செய்திருந்தது. எதற்காக 2006ல் சாந்திக்கு பாலின பரிசோதனை செய்யப்பட்டது? ஒரு பெண் பூப்பெய்தவில்லை, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கூறி அவளை பெண்ணே இல்லை என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. சாந்திக்கு இருப்பது ஹைபர் ஆன்ரோஜெனிசம். அதாவது, ஒரு பெண்ணின் உடலில் குறிப்பிட்ட அளவை விட டெஸ்ட்ரோஜன் அதிகம் இருந்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஆனால், இப்படி உள்ள பெண்கள் எல்லாமே பெண்ணில்லை என்றும், அவர்கள் விளையாட்டில் சாதிப்பார்கள் என்றும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒடிசாவை சேர்ந்த வீராங்கனை டூட்டிசந்த்  கடந்த 2014ம் ஆண்டில் டெஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ளது என்பதற்காக இந்திய தடகள சம்மேளனம் அவரை தகுதி நீக்கம் செய்்து தடகள போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்தது.

இதை எதிர்த்து  சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், ‘‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாக வைத்து மட்டும் பாலினத்தை முடிவு செய்வது அறிவியல்பூர்வமற்றது. பெண்தன்மையை உறுதி செய்வதற்காக தற்ெபாழுது உள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம், பாலின பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுகளுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் பாலின பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’’ என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பாலினப் பரிசோதனையால் இதுவரை 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவின் மூலம் விளையாட்டுத் துறையில் பாலின சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. டூட்டி சந்திற்கு 2 ஆண்டுகளுக்குள் நீதி கிடைத்தது. அவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இதே பிரச்னையில்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது.

சாந்தியின் பாலின பரிசோதனை அறிக்கை இன்று வரை சாந்திக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் இல்லை. தேசிய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை பல கேள்விகளுக்கு ‘அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும்’ இல்லை என பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட தற்காலிகப் பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய சாந்தி வலியுறுத்தியும், இப்போதுதான் அது நடந்துள்ளது. ஆசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்பெண் சாந்தி 2010ம் ஆண்டு தற்காலிகப் பயிற்சியாளர் பணியை உதறிவிட்டு மீண்டும் செங்கல் சூளையில் வேலை பார்த்தார். நம் நாட்டில் தான் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு இவ்வளவு மோசமான வாழ்க்கை நிலை இருக்க முடியும்.

கடந்த 2012ல் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த காஸ்டர் சமானியா என்ற வீராங்கனை பாலின பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானார். காஸ்டர் சமானியாவை நீக்கினால் சர்வதேச தடகள கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்தும் விலகுவதாக அவரது நாடு அறிவித்தது. பின் அவர் ஒலிம்பிக் போட்டியில் அந்த நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி வலம் வர அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆனால், இங்கோ நிலைமை வேறு.

மத்திய மாநில அரசுகள், இந்திய தடகள விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றிடம் தொடர்ந்து ேகாரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கிடையில் சாந்தியின் கனவு நனவாக நானும் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். கிராமப்புறங்களில் தாய் அல்லது தந்தையை இழந்துள்ள வறுமை யில் வாடும் பெண் குழந்தைகளை தேர்வு செய்து சாந்தி பயிற்சி அளித்து வருகிறார். அந்தக் குழந்தைகளின் உணவு, உடை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கும் பலரிடம் ஸ்பான்சர் பெற்று தனது கனவை நிறைவேற்ற போராடி வருகிறார்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியில் 23 குழந்தைகளுடன் இவரது ’Adopted Athelete’ பயிற்சி மையம் செயல்படுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு தடகள பயிற்சியோடு கல்வி, உணவு, தங்கும் வசதியும் அளித்து வருகிறார். ஆசியப் போட்டியில் வெல்ல ஆயிரம் தடகள விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்ற சாந்தியின் நம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது. என்னோடு பல நண்பர்கள், நிறுவனங்கள் இணைந்து இந்த விளையாட்டு மையம் நடத்துவதற்கான நிதி உதவிகளை அளிக்கிறோம்.

பணம் இருந்தால் மட்டும் தான் எதையும் சாதிக்க வைக்க முடியும் என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. இந்த சமூகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பெண் தலை நிமிரவே முடியாது என்பதும் சாந்தியைப் பொறுத்தவரை பொய். மூடநம்பிக்கைகளையும் பொய்களையும் தாண்டி உண்மைக்காக உழைக்கும் சாந்தியின் தீவிரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக் கல்வி ஆராய்ச்சி மையத்தை நிறுவ வேண்டும் என்பது சாந்தியின் அளப்பறிய ஆசை. அதற்காகவும் அவரோடு சேர்ந்து முயற்சிக்கிறோம். பெண் குழந்தைகள் அதிகளவில் விளையாட்டுத் துறைக்கு வர வேண்டும். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும் என்பதும் சாந்தியுடன் கரம் கோர்த்து நீதிக்காக ஓடும் எங்களைப் போன்றவர்களின் கனவாகும். விளையாட்டுத் துறையில் பெண் தன்னை பெண் என நிரூபிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். விளையாட்டுத் துறையிலும் சமநிலையை பெண்கள் அடைய வேண்டும்,’’ என்கிறார் கோபி.

- யாழ் ஸ்ரீதேவி
படங்கள்: அறந்தாங்கி சிவா