சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை. சமீபகாலமாக சென்னை மக்கள் பார்த்து பரவசம் அடைந்த விஷயம் மெட்ரோ ரயில். வாகன நெரிசலில் சிக்கிச் சிதைந்த சென்னை மக்களுக்கு தற்போதைய மகிழ்ச்சியான வரவு இந்த மெட்ரோ. அதிலும் சென்னை மெட்ரோ ரயிலை இயக்குபவர்களில் பெண்களும் இருக்கிறார்கள் என்றால் அது சுவாரஸ்யம்தானே? அட, ஆச்சரியமும்… மகிழ்ச்சியும் கலக்க… சென்னை மக்கள் இப்பெண்களை ரொம்பவும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
பெண் சைக்கிள் ஓட்டினாலே சந்தோஷப்பட்ட நாட்களைக் கடந்து இன்று கார், கப்பல், விமானம் என்று அனைத்தையும் வசப்படுத்திக் கொண்டனர். சாதாரணமாக ராட்டினத்தில் அமர்ந்தாலே, கண்ணை மூடி கத்திய பெண்கள், இன்று உயர உயர பறக்கத் தொடங்கிவிட்டனர். சாதனையாகட்டும் சாகசமாகட்டும் எந்த எல்லையையும் தொட்டு விடுவோம் எனத் துடிப்போடு கிளம்பிவிட்டனர் இன்றைய இளம் பெண்கள்.
மெட்ரோ ரயிலின் உயரமான பாலங்களின் மீது பெண் ஓட்டுநர்கள் ரயிலை செலுத்தும் விதமே கொள்ளை அழகு. மேலிருந்து சென்னை நகரின் மொத்த அழகையும் நெரிசலையும் பறவைப் பார்வையில் நிமிடத்தில் கடக்கும் இந்த மெட்ரோ பெண்களை பாராட்டியே ஆகவேண்டும். முதல் கட்ட மெட்ரோ வழித்தடமான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் ப்ரீத்தி, ஜெயஸ்ரீ என்ற இரண்டு பெண் ஓட்டுநர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
தற்போது மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான நீட்டிப்பில் மேலும் மூவர் இணைக்கப்பட்டு ஐந்து பெண் இயக்குநர்கள் செயல்படுகிறார்கள். பெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கன்ட்ரோல் ரூமில் மெட்ரோ ரயிலை கட்டுப்படுத்துவதும் பெண் என்றால் அது பெண்களுக்கு கூடுதல் சிறப்புதானே? மெட்ரோ ரயில் இயக்குவதைப் பற்றி பெண் ஓட்டுநர்கள் கூறும்போது விடாமுயற்சியும் உடன் பணியாற்றுபவர்கள் கொடுக்கும் ஊக்கமுமே இந்தத் துறையில் அவர்்கள் வெற்றிகரமாய் செயல்படுவதற்கு காரணம் என்கின்றனர்.
மேலும் நிறைய பெண்கள் இத்துறைக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். “இதற்கான லோகோ பைலட் பணி அறிவிப்பு, செய்தி நாளேடுகளில் வெளியானபோது அதற்கென விண்ணப்பித்து முதலில் ஆன்லைனில் தேர்வு எழுதினோம் வெற்றியும் பெற்றோம். பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிலும் தேர்வான பிறகு மருத்துவப் பரிசோதனை முடிந்து டெல்லி மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனங்களில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றோம்.
இதில் ‘தியரி’ மற்றும் ‘டிரெயின் டிரைவிங்’ ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. உடன் வேலை செய்யும் மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினர். நாங்கள் மெட்ரோ ரயிலை இயக்குவதைப் பார்த்து எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பொதுமக்களும் பெண் ஓட்டுநர்களான எங்களைப் பார்த்து பெருமை அடைகின்றனர். இது உண்மையிலே பெண்களுக்கு மிகவும் சவாலான வேலைதான். மேலும் நிறைய பெண்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.
- மகேஸ்வரி
மெட்ரோ ரயிலில் பயணிப்பது பற்றி, இதில் தொடர்ந்து பயணம் செய்து வரும் மத்திய அரசு ஊழியரான சாந்தி சுப்ரமணியம், “நான் சென்னை அண்ணா நகரில் இருந்து செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை மெட்ரோ ரயிலில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் தினமும் பயணிக்கிறேன். மெட்ரோ ரயில் வருவதற்கு முன்பு பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமானதுடன் நேரத்திற்கு என்னால் பணிக்குச் சென்று திரும்ப முடியாது.
மேலும் 55 வயதைக் கடந்து, பணி ஓய்வு பெறும் நிலையில் நிற்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசல் நேர விரயத்தையும், உடல் நலத்தையும் அதிகம் பாதித்தது. பெரும்பாலும் ஆட்டோ, பஸ் என மாறி மாறிப் பயணம் செய்ய நேரிடும்போது போக்குவரத்திற்காக செய்யும் செலவுத் தொகையும் அதிகம் பிடிக்கும். தற்போது இந்த மெட்ரோ ரயில் பயணம் உண்மையிலேயே என்னைப் போன்ற சென்னைவாசிகளுக்கு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
எந்த நெரிசலும் இன்றி முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளின் இருக்கைகளில் டென்ஷன் துளியுமின்றி, தூரங்களை நிமிடங்களில் கடந்து, சென்னையின் மொத்த அழகையும் ரசித்தபடியே தினம் தினம் பயணிப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. அதுவும் நான் செய்யும் பயணங்களில் பெரும்பாலும் பெண் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையிலே அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்” என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
|