நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாகும் அவலம்



சுகிதா

“இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3ல் 2 குழந்தைகள் சத்தற்ற குழந்தைகளாக உள்ளனர் என்பதை கேட்கும் போது அவமானமாக உள்ளது” - இப்படி 2012ம் ஆண்டு சொன்னவர் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங். ஆம். ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட பத்து லட்சம் குழந்தைகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இறக்கின்றனர். இந்தியாவில் 48.1 சதவிகித பெண்கள் ரத்த சோகையுடன் இருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டோடு பெண்கள் இருக்கும் 185 நாடுகளில் இந்தியா 170வது இடத்தில் இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஆண்டுதோறும் தரும் அதிர்ச்சிதான் முன்னாள் பிரதமரை அப்படிப் பேசவைத்தது. இது வெறும் ஆரோக்கியம் தொடர்பானது மட்டுமல்ல. பெண்களின் கல்வி, வறுமை, உணவு உற்பத்தி, சுகாதாரம் என்று அனைத்தோடும் தொடர்புடையது.

இந்தியாவின் வர்த்தகக் கேந்திரமான மகாராஷ்டிராவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 6 வயதுக்குட்பட்ட 395 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இறந்தனர். ஒரு வயதுக்குட்பட்ட 1193 குழந்தைகள் இறந்தனர். சிசு மரணம் 195.  பெரும்பாலும் பெண் குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இருக்கிறார்கள். இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். கர்ப்பம் தரித்து ஓரிரு மாதங்களில் கருக்கலைப்பு நடைபெறுவது கணக்கிலேயே வருவதில்லை.

ஊட்டச்சத்து குறைபாட்டால், ரத்த சோகையினால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இயற்கையாகவே கரு கலைவது இன்றைய கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை. ஆனால், அவை இந்தப் புள்ளிவிவரங்களுக்கு வராததால், அதற்கான தீர்வுகள் அரசின் திட்டங்களுக்குள் வருவதே இல்லை.  உண்மையாக இந்த புள்ளிவிவரங்கள் வளர்ச்சி இந்தியாவை நோக்கி குரல் கொடுத்தவர்களை உறைய வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இது குறித்த கவலை அவர்களுக்கு இல்லை.

மத்திய அரசின் குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் இந்தியாவில்  ஊட்டச்சத்திற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மதிய உணவுத் திட்டம், பொதுவினியோக திட்டம் என்று பிரத்யேகமாக பல திட்டங்கள் இருக்கின்றன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டமானது 1975ல் மகாத்மா காந்தி பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மூலம் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. சிசு மரணம், பேறுகால மரணம், ஆரம்பகால குழந்தை மரணம் என தொடர்ந்து இந்தியாவில் குழந்தைகளின் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. தப்பிப் பிழைத்து இருக்கும் குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை, எடை குறைவு, உயரம் குறைவு, ஊட்டச்சத்து குறைவு என்று ஏதாவது ஒரு பிரச்னை இருந்தது.

குழந்தைகளின் ஆரோக்கியமே வளர்ச்சியான இந்தியா என்ற நோக்கிலே குழந்தை வளர்ச்சித் திட்டம்  கொண்டுவரப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவது, 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாட்டைத் தடுத்தல், பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம், உளவியல் திறன் மற்றும் சமூக நிலையினை மேம்படுத்துதல், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

இவை அனைத்தும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. இணை உணவு, தடுப்பூசி, உடல் நலப் பரிசோதனை, மருத்துவப் பரிந்துரை, முன்பருவக் கல்வி, சத்துணவு மற்றும் சுகாதாரக் கல்வி அனைத்துமே மத்திய அரசினால் அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள். ஆனால், இவை அனைத்தும் முறையாக திட்டமிட்டபடி செயல்பட்டிருந்தால் இவ்வளவு குழந்தைகள் இறந்து போயிருக்க மாட்டார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகையுடன் இருப்பதால்தான் குழந்தைகள் எடைகுறைவுடன் பிறக்கிறார்கள் அல்லது இறந்து போகிறார்கள். இந்தியாவில் 55% கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகையுடன் இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்  55% பெண்கள் ரத்தசோகையுடன் இருக்கிறார்கள்.

அதற்காகத்தான் அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அதனை பெண்கள் உட்கொள்வதில்லை. அவை செவ்வரக்கு நிறத்தில் இருப்பதால் குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்ற கற்பிதம் அல்லது மாத்திரையின் முக்கியத்துவம் அறியாததால்  பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொள்வதில்லை. ரத்தசோகையினால் கடந்தாண்டு தமிழகத்தில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போயின.

கர்ப்பிணிப் பெண்களிடம் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை போன்றவைதான் இதற்கு முக்கியக் காரணம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி கடந்த 2013ம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து, திட உணவுகள், பழங்கள் வாங்கிக் கொள்வதற்காக 6000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், இது குறித்து ஆய்வு செய்த போது பெரும்பாலான பெண்கள் சத்தான உணவிற்காக அந்தப் பணத்தை பயன்படுத்துவதில்லை.

தரமான, சரிவிகித அளவிலான ஊட்டச்சத்து ஆகாரங்களை அரசே நேரடியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குவதே சிறந்தது என்று  இதனை ஆய்வு செய்த இந்திய புள்ளியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய அடிப்படைத் தேவையான அரிசி, கோதுமை போன்ற பொருட்களை கூட சொற்பப் பணமாக வங்கிக் கணக்கில் நுகர்வோருக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இந்த ஆய்வினை பரிசீலிக்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை.

மற்ற  மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு குறைவுதான். அதற்குக் காரணம் தமிழகத்தில் மட்டும் 1980களில் இருந்து பல்வேறு குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுதான். மதிய உணவுத் திட்டத்திற்கு இந்தியாவில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. மத்திய அரசின் திட்டம் அல்லாது தமிழகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்டவை பிரத்யேகமாக செயல்படுத்தப்படுகின்றன.

பெண் கல்வியின் முக்கியத்துவம்

பெண்கள் கல்வி கற்பதற்கும் ஊட்டச்சத்திற்கும் தொடர்பிருக்கிறது. பெண்கல்வியில் முன்னேற்றம் கண்ட தமிழகம் போன்ற மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி, கழிப்பறைப் பயன்பாடு அனைத்திலும் விழிப்புணர்வு பெற்றிருந்தாலும் 44% கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகையுடன் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் பெண் கல்வி தேசிய அளவில் சராசரியாக 12 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இது 19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சிக்கிமில் கடந்த பத்தாண்டுகளில் 18 சதவிகித பெண் கல்வி வளர்ச்சி உயர்ந்துள்ளது. ஆனால், அங்கு போக்குவரத்து, பொருளாதார நிலை, தட்பவெப்பம்  இவை மோசமானதாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.

கழிப்பறைகளின் முக்கியத்துவம்

2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 54% பேர் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் மலத்தில் இருந்து பரவும் தொற்றுண்ணிகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி, காலரா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. மேலும் குழந்தைகளின் எடையைக் குறைப்பதோடு வளர்ச்சியையும் குறைக்கிறது. மலம் கழித்துவிட்டு சோப்பினால் கை கழுவும் பழக்கம் இல்லாததாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. உணவு அருந்துவதற்கு முன்பு கண்டிப்பாக சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவவேண்டும்.

அது மட்டுமல்லாது திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகிறது. ஐ.நாவின் குழந்தை மற்றும் பெண்கள் வளர்ச்சி நிதியமான யுனிசெஃப் கழிப்பறைகளின் முக்கியத்துவம், சோப்பினால் கை கழுவுவதன் முக்கியத்துவம், ஊட்டச்சத்துக் குறைபாடு களைதல், சுத்தமான குடிநீர், தாய்ப்பாலின் முக்கியத்துவம் உள்ளிட்டவைக்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்குமான நியாயமான வாய்ப்பு உள்ளிட்டவைக்காக யுனிசெஃப் பணியாற்றி வருகிறது.

உணவு உற்பத்தியில் இந்தியா

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாகக் கூறும் நம் நாட்டில்தான் பல லட்சம் பேர் பட்டினியோடு தூங்கச் செல்கிறார்கள். பட்டினிச் சாவுகள் ஒருபுறம் என்றால் பெண்கள் பட்டினி கிடப்பதால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக இந்தியப் பெண்கள் சரிவிகித சத்துள்ள உணவை உண்பதில்லை. வீட்டில் அனைவரும் உணவு அருந்திய பிறகு மிச்சமிருப்பதை உண்பதால்தான் பெரும்பாலான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு நோய்க் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள்.

வேளாண்மை நம் நாட்டில் சிறப்பாக இருந்தபோது இத்தகைய மரணங்களின் எண்ணிக்கை குறைவு. 90களுக்கு பிறகு இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இறங்கியது. இதனால் வேர்க்கடலை, சிறுதானியங்கள் பயிரிட்ட விவசாயிகள் எண்ணெய் வித்து விவசாயத்திற்கு மாறினார்கள். அது மட்டுமல்லாது பெரும்பாலான வேளாண்மை பணப்பயிர்களாக இருந்ததன் விளைவு உணவு உற்பத்தியில் நாம் சரிவிகித வளர்ச்சியை எட்டமுடியாமலும் மற்றொரு புறம் உணவு உற்பத்தி இருந்தும் அது மக்களுக்கு பயன்பெறாமலும் போனது. வேர்க்கடலையில் இருக்கும் புரதச்சத்து பெண்களுக்கு அதிக பலனை தரக்கூடியது.

அதனால்தான் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடலை மிட்டாய்களை குழந்தை வளர்ச்சித் திட்டங்களில் வழங்குகிறார்கள். பொது வினியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்டவற்றை ஒரு ரூபாய்க்கு வழங்குவது உடல் ஆரோக்கியத்தில் சரிவிகித வளர்ச்சியை தேசம் முழுவதும் பெறுவதற்காகத்தான். ஆனால், கள நிலவரமோ வேறாக இருக்கிறது. இன்றைக்கு மீண்டும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பருவ மழை பொய்த்தது, தட்பவெப்ப நிலை மாற்றங்கள் போன்றவை தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்கி உள்ளன. குறைந்த தண்ணீரில் சிறுதானியங்கள் பயிரிட முடியும் என்பதால் மீண்டும் விவசாயிகள் பணப் பயிர்களில் இருந்து சிறுதானியங்கள் பக்கம் திரும்புகிறார்கள்.

சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் பெண்கள் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. அரிசி, கோதுமையைவிட பெண்களின் ஊட்டச்சத்திற்கு சிறுதானியங்களே சிறந்தவை. இந்தியாவில் கிராமங்கள், நகரங்கள் இரண்டிலுமே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளன. வேளாண்மை ஒரு பக்கம் பொய்த்துப் போய் அனைவரும் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அப்போது ஒருவருடைய ஊதியத்தால் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாமல் போகிறது.

வீட்டு வாடகை தொடங்கி குடிநீர் வரை அனைத்திற்கும் பணம் தேவையாக இருக்கும்பட்சத்தில் குறைந்தளவு பணத்தையே உணவிற்காக செலவிடுகிறார்கள். அதன் விளைவு நகரங்களில் வசிப்பவர்களும் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைக்கு ஆளாகிறார்கள். கிராமப் புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் நோக்கத்தில் மிக முக்கியமானது அடிப்படை உணவுத் தேவைக்கான பொருளாதாரத்தை உத்தரவாதப்படுத்துவது. அனைத்துத் திட்டங்களிலும் நடைபெறும் முறைகேடுகளும், ஊழலும் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது போலவே ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் காரணமாக உள்ளது.

சமூக செலவினங்கள் நிதியை குறைத்த மத்திய அரசு

கடந்த மூன்றாண்டு பாஜக ஆட்சியில் சமூக செலவினங்களுக்காக ஒதுக்கும் நிதியினைக் குறைத்ததோடு ஒதுக்கிய நிதியையும் செலவு செய்யவில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இது போன்று நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யாமல் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பா.ஜ.க. ஆட்சியில்தான் 61 சதவிகித நிதி பயன்படுத்தப்படவில்லை. இதில் பெரும்பாலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. மக்கள்தொகையில் 25 கோடி பேர் தலித் மற்றும் பழங்குடியினர் இருக்கிறார்கள்.

அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் பயன்படுத்தாமல் சுமார் 2.8 லட்சம் கோடியை திருப்பி அனுப்பி இருக்கின்றன. ‘நிதி அயோக்’கால் ஒதுக்கப்பட்ட இப்பணம் செலவு செய்யப்படவில்லை என்றால் மீண்டும் அடுத்த ஆண்டுக்கு அந்த நிதியை பயன்படுத்த முடியாது. ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்ற பிரச்னைகளாலும் வறுமையினாலும் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

14வது நிதி அறிக்கையின்படி மத்திய அரசிற்கு 32 சதவிகிதமாக இருந்த வரி வருவாய் 42 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதனை கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவைக்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறதோ குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வளவு செலவு செய்ய முன்வருகிறதோ அதைப் பொறுத்துதான் இந்தியா கனவு காணும் வளர்ச்சியைப் பெறும். இந்தியாவில் நிமிடத்திற்கு ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கிறது என்பது வேதனைக்குரியது.

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் எத்தனை குழந்தைகள் இறந்தனவோ என்று நினைக்கும்போது பதற்றம் தொற்றுகிறது. இந்தப் பதற்றம் உண்மையாக மத்திய, மாநில அரசுகளுக்கு வரவேண்டும். சுத்தமான இந்தியாவிற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் வெறும் விளம்பரமாக இல்லாமல் உண்மையாக பலனளிக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியாவைவிட ஆரோக்கியமான இந்தியாதான் இப்போது அவசரத் தேவை.

இனி ஒரு குழந்தையும் இறக்காமல் இருப்பது பெண் குழந்தைகளை பெரிதினும் மதிப்பதாக கூறிக்கொள்ளும் இந்தியப் பிரதமரின் கையில்தான் உள்ளது. (குறிப்பு:  கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உலக சுகாதார மையம், யுனிசெஃப், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட ஆய்வு, தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு மையம் ஆகியவற்றில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.)