மண்ணிலே கலைவண்ணம் கண்டாள்



ஓர் அதிகாலை வந்த வாட்ஸ் அப் செய்தி இது - நம் வீடுகளில் வாட்டர் ஃபில்டர் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்யும் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் ஃபில்டரை மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் ஃபில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுக்களோடு இருக்கும்.

அதை உதறினால் அல்லது தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுக்கள் கீழே கொட்டும். நாம் என்ன நினைப்போம்? நல்லவேளை, இந்த வால்டர் ஃபில்டர் இருப்பதால்தான் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று… ஆனால் உண்மை அதுவன்று. அவை தூசு அல்ல. நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப்பொருட்கள். தண்ணீரைப் பார்க்கும்போது அந்தத் தூசுக்கள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஃபில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்த தூசுக்கள் நம் கண்ணிற்குத் தெரியும்.

கண்ணுக்கே தெரியாத அந்த தூசுக்களை பணம் செலவு செய்து விலை அதிகமுள்ள கருவிகளை வாங்கிப் பொருத்தி தண்ணீரில் உள்ள தாதுக்களை பிரித்து எடுத்து கீழே கொட்டுகிறோம். மேலும் யாருடைய வீட்டில் தண்ணீரை ஃபில்டர் செய்வதற்கு அதிக விலை கொடுத்து மெஷினை வாங்கி பொருத்தியிருக்கிறீர்களோ அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் ரத்தத்திற்குத் தேவையான தாதுப்பொருட்களின் குறை ஏற்பட்டு இந்தத் தாதுக்களை சரி செய்வதற்காக மருந்துக் கடைகளில் விலை கொடுத்து மாத்திரை வடிவில் வாங்கிச் சாப்பிடுகிறோம் என முடிந்தது அந்தத் தகவல்.

ஏரி, குளங்களில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் பல ஆயிரம் மைல்களைக் கடந்து நம் இல்லம் தேடி நமது வீட்டுக்குள்ளேயே வரும் இந்தத் தண்ணீரை பயன்பாட்டுக்குரியதாய் எப்படித்தான் மாற்றுவது என அறிய முயன்றபோது நமது முன்னோர் பயன்படுத்திய மண்பாத்திரங்களின் மகத்துவம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் பற்றியும் நிறைய தகவல்களை அறிய முடிந்தது. “நாங்கள் எங்கள் குடும்பத்துடன் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டங்களைத் தயார் செய்யும் தொழிலைச் செய்து வருகிறோம்.

ஆனால், எங்கள் வீடுகளிலேயே இதன் பயன்பாடு மிகவும் குறைவுதான். உணவுப் பொருள் தயாரிக்கவும், தண்ணீரை சுத்திகரித்து நல்ல குளிர்ந்த ஆரோக்கியமான தண்ணீராக குடிப்பதற்கும் கண்டிப்பாக மண்பாண்டங்களை பயன்படுத்த வேண்டும். மண் பாத்திரத்தில் சமைத்து வாழை இலையில் சாப்பிடும்போது ஆரோக்கியம் மட்டுமல்ல ஆயுளும் கூடும் என தன்  ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசத் துவங்கினார்” மீனாட்சி அம்மாள்.

“எங்களின் மாமனார் காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து நான்கு தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். எனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து கணவன் வீட்டுக்கு வந்ததில் இருந்து இந்தத் தொழிலில் செயல்படுகிறேன். என் மாமனார் மற்றும் என் கணவரிடம் இருந்து அவர்கள் மண் பாத்திரங்களைச் செய்யும்போது பார்த்தே அதன் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தேன். இப்போது எனக்கு வயது 66” என்றார். “குழந்தைப் பிறப்பு மாதிரிதான் இந்தத் தொழில்.

ஈரப்பதம் அதிகம் நிறைந்த களிமண் எங்கள் மானாமதுரை மண்ணின் சிறப்பு. மண்ணை நன்றாக காலால் மிதித்து அதை தயார் பண்ணி வைப்போம். மண்ணை மிதிப்பது என்பது மிகவும் சாதாரணமான வேலை இல்லை. அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருப்போம். அப்போதுதான் மண்பாண்டங்களை செய்வதற்கான வடிவம் சுலபமாக வரும். இது ரொம்ப முக்கியம். தற்போது இதற்கு அரவை மெஷின் வந்துவிட்டது. அதன் பின் தேவையான மண் எடுத்து சக்கரத்தில் வைத்து சக்கரத்தைச் சுற்றும்போதே வேண்டும் என்கிற வடிவத்தை உருவாக்கி விடுவோம்.

பின்னர் அவற்றைக் காயவைத்து, நெருப்பு மூட்டம் போட்டு அதில் வடிவங்களை வேக வைப்போம். நன்றாக வேக வேண்டும். அதுவும் மிக முக்கியம். அதன் பிறகு வெளியில் எடுத்து பாலிஷ் போடுவோம். முன்பு சக்கரத்தைக் கூட ஒருவர் கையால் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் இப்போது மின் இணைப்பு இயந்திரம் (மோட்டார்) வந்துவிட்டது. ஆரியப்பட்டா அடுப்பு. மாஞ்சுளா அடுப்பு. சித்த வைத்தியத்திற்கான வாழைத்தாரை அடுப்பு மற்றும் அலங்காரத்திற்கான பூ ஜாடிகள், அலங்கார விளக்குகள், சித்த மருத்துவத்துக்கான வாழைப்பானை, தண்ணீர் ஊற்றி வைக்க பயன்படும் கூஜா, சிறிய வகை ஜக்கு, கோயிலுக்குத் தேவைப்படும் சிறிய மற்றும் பெரிய அகல் விளக்குகள், பூந்தொட்டிகள் இவைகளை அதிகம் ஆர்டர் கொடுத்து வந்து எடுத்துச் செல்கின்றனர்.

இவை தவிர எங்களின் சிறப்புத் தயாரிப்பான கடம், இசைக் கலைஞர்கள் அதிகம் தேடி வந்து சுதி பார்த்து விரும்பி வாங்கிச் செல்லும் பொருள். மண்பாண்டப் பொருட்கள் என்பது இந்த வகையிலே தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ளது. எங்கள் காலம்போல சமையல் முதல் எல்லாவற்றிற்குமான பயன்பாடாக மண்பாண்டங்கள் இருந்தது முற்றிலுமாக அழிந்துவிட்டது. காரணம், இப்போது உள்ள பெண்கள் கேஸ் அடுப்பை அதிகம் பயன்படுத்துவதால் மண்பாண்டப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.

கேஸ் அடுப்பு பயன்பாட்டின் தொடர்ச்சியாக அலுமினியம், எவர்சில்வர், ஒட்டாமல் சமைக்கக்கூடிய நான்ஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்பாட்டில் வந்துவிட்டது. எனவே மண்பாண்டப் பொருட்களின் பயன்பாடு என்பது இல்லங்களில் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களே இந்தத் தொழிலை விரும்பிச் செய்கிறோம். இதை விட்டுச் செல்லவும் எங்களுக்கு மனம் வரவில்லை. ஐந்து பேர் எங்கள் குடும்பத்தில் இந்தத் தொழிலில் இருக்கிறோம். முடிந்தவரைக்கும் இத்தொழில் அழியக்கூடாது என்கிற முனைப்பு எங்களிடம் உள்ளது” என்றார் மீனாட்சி அம்மாள்.

இப்போது உள்ள தலைமுறை இத்தொழிலில் ஆர்வம் காட்டுவது இல்லை.அவர்கள் வேறு வேறு துறைகளையே அதிகம் விரும்பி நாடிச் செல்கின்றனர். ஆண்கள் அனைவரும் இந்தத் தொழிலை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சம்பாதிக்கச் சென்றுவிட்டனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று ஈட்டும் பணத்தை, இந்த மண்பாண்டத் தொழிலில் மொத்த குடும்பமும் தன் உழைப்பைச் செலுத்தினாலும் பெறமுடியாது. தயாரிப்புச் செலவு மற்றும் தினக் கூலியும் மிகவும் அதிகமாகிவிட்டது.

ஆனால், வருமானம் என்பது மிக மிகக் குறைவு. குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் இந்தத் தொழிலை குறைந்தபட்சம் காப்பாற்றவாவது முடிகிறது என்பது மீனாட்சி அம்மாளின் ஆதங்கம். எப்போதும் மண்ணால் பூசப்பட்ட உடலோடு வறுமைக்கோட்டிலே நின்று ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை, தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துத் தயாரிப்பவர்களை நாம் எந்த இடத்தில் வைத்துள்ளோம்? எத்தனை தலைமுறைகளாக இந்தத் தொழில் செய்தாலும் அவர்கள் நலிவுற்றவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு  வழங்கப்படும் விருதுகளும், பட்டங்களும் வெற்றுச் சம்பிரதாயங்களாகவே உள்ளன.

கட்டுரை, படங்கள்: மகேஸ்வரி

கடம் வாங்குவதற்காக கடம் வித்வான் வினாயக்ராம் மற்றும் டிரம்ஸ் சிவமணி அவருடைய இசைக் கருவியான உதூ, உத்தாங்கோ போன்ற இசைக் கருவிகளை மீனாட்சி அம்மாவிடம் தொடர்ந்து ஆர்டர் கொடுத்து மானாமதுரை வந்து பெற்றுச் செல்கின்றனர். எழுபதைத் தொடும்  நிலையிலும் மீனாட்சி அம்மாள் செய்யும் கடம் இந்தியாவைத் தாண்டி இசையில் சர்வதேசத்தையும் அதிரவைக்கிறது. அதன் தொடர்ச்சியாய் கடந்த ஆண்டு குடியரசுத்தலைவரின் கைகளால் புரஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறார் மீனாட்சி அம்மாள். ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு, தாமிர பட்டயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடம் செய்வதில் எனக்குக் கிடைத்த விருதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இந்த விருதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்கிறார் வெள்ளந்தியாக. நான் செய்த கடத்தை மேடையில் கடம் வித்வான் கொண்டு வாசிக்க வைத்து அனைவருக்கும் காண்பித்த பிறகே விருதினை குடியரசுத்தலைவர் எனக்கு வழங்கினார். கடம் செய்வது சுலபமான வேலையில்லை. தட்டுனா சுருதி சுத்தமாக வரனும்... சுருதி பார்த்தே கடத்தை (கட்டை பார்த்து) வாங்கிச் செல்வார்கள். தட்டினால் 20 நொடிகளாவது சத்தம் வரனும் என்றார்.

நந்தினி சுப்ரமணியம், சித்த மருத்துவர்
“தண்ணீரை சூடுபண்ணி மண் பானையில் ஊற்றி வைத்து குடிக்கலாம். தண்ணீரை மண்பாத்திரங்களில் ஊற்றி வைத்து குடிப்பதால் தண்ணீரில் உள்ள மினரல்ஸ் மற்றும் மண்ணில் உள்ள மினரல்ஸ் இரண்டும் சேர்ந்தே நமக்குத் தேவையான தாதுச்சத்துகள் கிடைக்கிறது. மேலும் மண்பாத்திரங்களில் சமைக்கும்போது சமைக்கும் பொருளில் உள்ள அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையையும் மண் பாத்திரங்கள் தடுக்கிறது. அதனால் அமிலத்தன்மை குறைக்கப்பட்டு உடல் சூடு குறைகிறது. இதன் மூலம் அல்சர் வராமல் உடலை பாதுகாக்கின்றன மண்பாண்டங்கள்.

மேலும் உடலின் சூட்டையும் மண்பாத்திரங்கள் அதிக அளவு குறைக்கின்றன. இதனால் ஆண்களின் விந்தணு குறைபாடு சரிசெய்யப்படுகிறது. இதனால்தான் குழந்தையின்மை கருத்தரிப்பு மையங்களிலும் உடல் சூட்டைக் குறைக்க மண் பாத்திரங்களிலே உணவைத் தயார் செய்து உண்ணச் சொல்கிறார்கள். அதனால் ஆண்களின் ஹார்மோன் லெவல் அதிகமாகும். உடல் சூட்டைக் குறைக்க மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மிகவும் உதவிபுரிகின்றன.

பிளாஸ்டிக் பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி வைப்பதால் பிளாஸ்டிக்கில் உள்ள வேதியியல் பொருட்கள் தண்ணீரில் நிச்சயம் கலக்கும். தரமான பிளாஸ்டிக் என்று விளம்பரம் செய்யப்பட்ட பொருட்களாக இருந்தாலும் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் வேதியியல் தன்மை அளவு குறையுமே தவிர உறுதியாக தண்ணீரில் அதன் வேதியியல் தன்மை சேரும். அலுமினியம், மெட்டாலிக், சில்வர் போன்ற பாத்திரங்களில் சமைக்கும்போது  பாத்திரத்தில் உள்ள மெட்டாலிக், அயர்ன்ஸ் உணவில் கலக்கும்.

இதனால் உணவு நச்சுத்தன்மையடைகிறது. மண்பாண்டத்தில் அது நடக்காது. மண் பாண்டத்தில் உள்ள மண் நச்சுத்தன்மையை உள்வாங்கக்கூடியது. மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவின் சுவை சிறப்பாக இருப்பதற்குக் காரணம் பாத்திரம் அடுப்பில் வைத்ததும் உடனடியாக சூடாகாமல் ஒரே சமநிலையில் சூடாகி பாத்திரத்தில் மெதுவாகப் பரவுகிறது. மேலும் மண்பாண்டத்தில் கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துளைகள் அதிகம் இருக்கும். மண்பாத்திரங்கள், செப்புப் பாத்திரங்களை அன்றாடம் பயன்படுத்தும்போது ரத்தம் சுண்டாது.

எனவே ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாது. மண்பானையில் செப்புக் காசுகளை போட்டுவைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் குடித்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது. அது இதயத்தைப் பலப்படுத்துவதுடன் ரத்தநாளங்களும் பலப்படும். மேலும் ரத்தசோகை வராது. மண்பாத்திரத்தில் வெட்டிவேர், பதிமுகம், ரெட் சாண்டல் எனப்படும் சிவப்புச் சந்தனக் கட்டை, நெல்லிக் கட்டை இதையெல்லாம் போட்டு வைத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை அனைத்தும் நாட்டு மருந்துக்கடைகளில் கண்டிப்பாகக் கிடைக்கும்”.

மீனாட்சி அம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ

“சின்னச் சின்ன பொருட்களை செய்து நன்றாக பழகிய பிறகே பெரிய பொருட்களை செய்யத் துவங்கணும். எல்லாமே சக்கரம் சுத்தும் நிலையிலேயே அந்த அந்த வடிவத்திற்கு பொருட்களை கொண்டு வருவோம். தற்போது கடத்திலேயே அந்தக் காலத்து சித்தர்கள் உருவத்தை வைத்து என் அப்பா புதுவிதமான கடம் செய்கிறார். தந்தூரி அடுப்பு கூட செய்கிறோம். (சக்கரத்தை ஓட விட்டு மிகவும் ஆவலாக விளக்கு செய்து காட்டுகிறார்) கண்ணால பார்த்துப் பழகித்தான் அதன் நுணுக்கத்தோடு செய்ய வேண்டும்”.