ஆண்டிப்பட்டி முதல் அட்லாண்டா வரை ஆடிய கால்கள்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் திருநங்கை நர்த்தகி. பரத நாட்டியக் கலைஞரான இவரின் கலைத்துறைப் பங்களிப்பின் காரணமாக இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் கலைத்துறைக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்கிற பெருமைக்கு ஆளாகிறார். ‘மதுரை மண்ணுக்கே இது பெருமை’ என்று மதுரை முகநூல் பக்கங்கள் சிலவற்றில் இச்செய்தியைக் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.
மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நர்த்தகியை சந்தித்தேன். நடனக்கலைஞராக உங்களது தொடக்கம் எப்படிப்பட்டது? என்கிற கேள்வியிலிருந்து உரையாடல் தொடங்கியது. நர்த்தகி என்னிடம் பகிர்ந்து கொண்டது அவரின் வாழ்க்கையை. அந்த வாழ்க்கையில் எல்லாமும் இருக்கிறது குறிப்பாக வலிகளும். ‘‘என் சொந்த ஊர் மதுரை என்பதால் சங்கம் வளர்த்த மதுரைக்கே உண்டான அத்தனை பண்புகளும் எனக்குண்டு. தமிழ் மீது எனக்கு ஆர்வம் அதிகம். மட்டுமல்லாமல் எனக்கு கற்றல்திறன் மிக நன்றாகவே உண்டு.
நானும் சக்தி பாஸ்கரும் சிறு வயதிலிருந்தே தோழிகள். தியாகராஜா நன்முறை மேல்நிலைப் பள்ளியில்தான் நாங்கள் படித்தோம். வசதியான குடும்பம் எங்களுடையது. நாங்கள் எங்களுக்குள் இருந்த பெண்மையை இடைப்பட்ட காலத்திலெல்லாம் உணரவில்லை. விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே நாங்கள் பெண்ணாகத்தான் உணர்ந்தோம். பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவோம். எங்களது திறமையைப் புரிந்து கொண்டு எங்களது தமிழாசிரியர்கள்தான் எங்களை ஊக்குவித்தார்கள். நாங்கள் எங்களுக்குள்ளிருந்த பெண்மையை உணர்ந்ததால் பெண்ணுக்கான நளினம் கைக்கூடி வர நடனம் என்பது இயல்பாக வந்தது.
தொடக்கத்தில் எங்களுக்கென குரு என்று யாருமில்லை. வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, யாமினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப் பார்த்துதான் நடனம் ஆடவே கற்றுக்கொண்டோம். எங்களுக்குள் இருந்த பெண்மையை இச்சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எங்கள் குடும்பத்தாரும் அடக்கம். ஒரு நாள் நாங்கள் கைவிடப்பட்டோம். இப்படியொரு நிலை எங்களுக்கு நேர்ந்திருக்கக்கூடாது என்றும் நினைத்தோம். ஆனால், எதிலிருந்தும் மீண்டெழுவதுதான் வாழ்க்கை. அதற்கான மன திடம் எங்களிடம் இருந்தது.
பரத நாட்டியத்தின் சூத்திரதாரிகளான தஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் பரத நாட்டியம் கற்றுக்கொண்டோம். தஞ்சை நால்வர் வாழ்ந்து மறைந்த வீட்டில் நாங்கள் 15 ஆண்டுகள் இருந்தோம் என்பதே பெருமையான ஒன்று. குருவிடம் நாங்கள் மாணவிகளாக இருந்த நாட்கள் எங்கள் வாழ்வின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். குரு எங்களுக்குள் இருந்த நாட்டியத் திறமையை வளர்த்தார்கள். அவரது மாணவிகள் என்பதில் எப்போதும் எங்களுக்குப் பெருமை உண்டு.
1986ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் எங்கள் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. 80,90களில் திருநங்கைகள் மனிதர்களாகவே மதிக்கப்படாத காலகட்டம். அப்படியான சூழலில் நான் திருநங்கை என்று வெளிப்படையாக அறிவித்தே நாட்டியமாடினேன். கேலியான சொற்களால் அழைக்கப்பட்டு வந்த மூன்றாம் பாலினம் இப்போது எல்லோராலும் ‘திருநங்கை’ என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில் திருநங்கை என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியது நான்தான். எனக்குள் இருக்கும் நங்கையை நான் மதிக்கிறேன்.
உயர்வாகப் பார்க்கிறேன். ஆகவேதான் அவளை ‘திருநங்கை’ என்கிறேன். அனைத்து மேடைகளிலும் திருநங்கை நர்த்தகி என்கிற அறிவிப்போடுதான் நாட்டியம் ஆடுவேன்’’ என்றவரிடம் திருநங்கையாக மேடையேறி நாட்டியமாடியபோது புறக்கணிப்புகளையும், கேலிகளையும் சந்திக்க நேரிட்டதா என்ற கேள்வியை முன்வைத்தபோது, ‘‘கேலி, அவமானம், புறக்கணிப்புகள் எல்லாம் வாழ்வில் வெகு சாதாரணமான ஒன்றுதான். கல் எறிபவர்கள் கல்லை எறிந்து கொண்டேதான் இருப்பார்கள்.
அதையெல்லாம் பொருட்படுத்தினால் நாம் நமது இலக்கை அடைய முடியாது. நாட்டியத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற இலக்குதான் எங்களுக்கு இருந்ததே தவிர கேலிகளை நாங்கள் ஒருபோதும் பொருட்படுத்திக் கொண்டதே இல்லை. தமிழ் என்னோடு கலந்தது. சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களால் ஆன தமிழிசையில் நாட்டியம் ஆடுகிறோம். நாட்டியம்தான் எங்கள் வாழ்வு. அதை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்.
அதுதான் எங்களை இன்னமும் இளமையாக வைத்திருக்கிறது. பல வேளைகளில் பட்டினியோடெல்லாம் பயிற்சி செய்திருக்கிறோம். நிறைய காயப்பட்டிருக்கிறோம். ஆனால், காலத்துக்கு எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை இருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட நாங்கள் இன்று கொண்டாடப்படுகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாட்டியக் கலைஞராக தொட்டிருக்கும் உயரம் எங்கள் காயங்களை ஆற்றிவிட்டது. என் தோழி சக்தி பாஸ்கர் என் வெற்றிகளைக் கொண்டாடுபவள். எனக்கு பக்கபலமாய் எப்போதும் உடனிருப்பவள்’’ என்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற முதல் திருநங்கை நர்த்தகிதான். இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் இந்திய கலைஞர்கள் தர வரிசையில் முதல் நிலை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதைப் பெற்றவர் என்று நர்த்தகி தொட்ட மைல்கற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘‘மதுரையில் பிறந்த நான் இந்நாட்டின் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற தருணத்தில் உணர்ந்ததை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இதே போன்று நான் மகிழ்ந்த தருணமாக இருந்தது மதிப்புமிகு முனைவர் பட்டம். கலைஞர் என்பதன் பொருள் கனவுகளில் வாழ்பவர் என்றே சொல்வேன். ஆண்டிப்பட்டி முதல் அட்லாண்டா வரை பல ஊர்களுக்கும் பல நாடுகளுக்கும் சென்று எங்கள் நாட்டியத்தை அரங்கேற்றியிருக்கிறோம். யாருமே எங்களை திருநங்கைகள் என்று புறக்கணிக்கும் விதமாகப் பார்க்கவில்லை. எங்கள் நாட்டிய பாவனைகளை மிகவும் ரசிக்கின்றனர்.
நம் கலாசாரத்துக்குத் தொடர்பே இல்லாத ஜப்பானிலும் கூட எங்களது நாட்டியம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். எந்த கலைக்கும் உச்சம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. உச்சத்தைத் தேடி வாழ்நாள் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்’’ என்கிறார் நர்த்தகி.
- கி.ச.திலீபன்
|