ப்ரியங்களுடன்...



தீபாவளி சிறப்பிதழ் இரண்டும் தீபாவளி இனிப்பைப் போல் இனித்தது. குறிப்பாக ‘‘ரியல் ஸ்டோரி, தப்பிப் பிழைத்த கருத்தம்மா’’ நெஞ்சை நெகிழ வைத்தது. ‘வானவில் சந்தை’ புதிய தொடர் ஆரம்பமே சிறந்த வழிகாட்டியாக இருந்தது. இனிப்புகள் ரெசிபி 30 சமயத்திற்கு கை கொடுத்தது.
- எஸ்.வத்சலா சதாசிவன், சென்னை-64.

வாசக வாசகியர்களை கவர்ந்த தீபாவளி இனிப்புகளைப் பார்க்கும் போது அப்படியே வாயில் திணிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எழுந்தது. சுகர் பேஷன்ட்டுகளை வயிறு எரிய வைத்தன. வாடகைத்தாய் மனிதத்துக்கு எதிரானதா! சாதகமானதா! இது முற்றிலும் எதிரானதுதான். இதன் மூலம் பிழைப்பவர்கள் இடைத்தரகர்கள்தான். வெறும் சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியாதுதான். இது முற்றிலும் ஒழிக்க மாநில, மத்திய அரசுகள் வாரியம் அமைப்பது மிக மிக முக்கியம்!
- வண்ணை கணேசன், சென்னை-110.

தீபாவளி சிறப்பிதழாக இரண்டு வண்ண இதழ்களை வழங்கி எங்கள் நெஞ்சை அள்ளி விட்டீர்கள்! இனிப்புகள் ரெசிபி, தமிழ் சினிமாவில் பெண்களின் நிலைப்பாடு என்ன? என்பதை நுட்பமாக பதிவு செய்து விட்டீர்கள்!
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

‘தீப ஒளிக் காலங்களில்’ வாசித்த போது சிறு வயது சம்பவங்கள் மனக்கண் வந்து போனது. தீபாவளிக்கு முதல் நாள் டெய்லர் கடையில் போய் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்தது, அதிகாலை நான்கு மணிக்கே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் குளித்து, புதுப் பாவாடைச் சட்டையுடன், மகிழ்ச்சியில் திளைத்த பொற்காலம், எதைக் கொடுத்தாலும் வராது. ‘சாதிய வன்முறை’ மனதைச் சுக்கு நூறாக்கியது. என்று மனிதர்களாவார்கள் இந்த சதைப்பிண்டங்கள்?
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பப்ளிக் எக்ஸாம் பயம் வேண்டாம் என குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா திட்டமிட்டு படிப்பதற்காக கூறியிருந்த ஆலோசனைகள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு இன்றியமையாதவை என்றால் அது மிகையன்று!
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை தூவச் செய்து சக மனிதர்களைப் போன்று அவர்களும் முன்னேறுதல் என்பதை தனது வாழ்வியல் இலக்காகக் கொண்டு செயல்படும் பவித்ரா ஒய்.எஸ்-ன் பணி தொடர வாழ்த்துகள். பிறருக்கான முன்னுதாரணமாகத் திகழும் குவார் பாய் யாதவ் எனும் 104 வயது பெண்ணின் செயல் அனைத்துத் தரப்பு மக்களையும் விழிப்படையச் செய்தது.
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

திணறத் திணற தீபாவளி தித்தி(இனி)ப்புகள் முப்பது வகை வகையாக வெளியிட்டிருந்ததையே கண்டபோது ‘நாக்கு’ சுழல ஆரம்பித்து விட்டது. தலை சுற்றாத ஒரு குறைதான் போங்கள்.
- மஞ்சுளாபாய், வியாசர்பாடி.

வானவில் சந்தை நடுத்தர மற்றும் உயர்மட்ட வகுப்பினரின் மனதை நூல் கொண்டு அளந்துள்ளது. கடைப்பிடித்தால் வாழ்க்கை சிகரம் எட்டும் நிம்மதியில்.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி-7