ஆரோக்கியத்திற்கு 8 வடிவ நடைப்பயிற்சி



என்ன எடை அழகே - சீசன் 3

பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர்

சென்ற இதழில் ‘சீசன் 3’ தோழிகளுக்கு ‘எடை குறைப்பிற்கு ஏரோபிக்ஸ்’ என்ற தலைப்பில் அதற்கான பயிற்சிகளை ‘ஃபர்ஸ்ட் ஸ்டுடியோ’ என்கிற பெயரில் ஏரோபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயலெட்சுமி தோழிகளுக்கு செய்து காட்டி விளக்கினார். இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட தோழிகள் அனைவரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டனர் என்று சொல்கிறார் ‘பாடி ஃபோகஸ்‘ உரிமையாளர் அம்பிகா சேகர்.

இந்த முறை யோகா மாஸ்டர் முருகேசன் தோழிகளுக்கு 8 வடிவ நடைப்பயிற்சி பற்றி விளக்க ஆரம்பித்தார். “எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும்” என்பது பழமொழி. ஒரு எட்டு போயிட்டு வர்றேன் போன்ற வழக்கொழிந்த வார்த்தைகள் இதன் வழியாகவே வந்தன. கொரியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி புழக்கத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து செய்வது நல்ல பலனைத் தரும் எனச் சொல்லி அதன் செயல்முறைகளில் இறங்கினார்.

நடைப்பயிற்சியில் சாதாரணமாக நேராக நடந்து செல்வதைவிட “8 வடிவ நடைப்பயிற்சி” மிகவும் சிறந்தது. இதனால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. யோகிகளும், சித்தர்களும் இந்த நடைப்பயிற்சியை மிகவும் சிறந்ததாக கூறியுள்ளனர். இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை தினமும் குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். எப்படி எனப்  பார்ப்போம்.
 
செயல்முறை

* ஓர் அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக ஒரு கோடு வரைய வேண்டும். 12 அடி விட்டு மீண்டும் கிழக்கு மேற்காக மற்றொரு கோடு வரைய வேண்டும்.
* இரு கோடுகளுக்கு இடையில் வடக்கு தெற்காக ‘எட்டு’ என்ற எண்ணை வரைதல் வேண்டும்.
* அதன் மேல், தொடர்ந்து 15 நிமிடம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் பின் 15 நிமிடம்  வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் (clockwise and anticlockwise) மாறி மாறி நடக்க வேண்டும்.
* நடைப்பயிற்சியின் போது நிதானமாக மூச்சுப் பயிற்சி செய்யவேண்டும்.
* நடக்கும்போது நன்றாக கைகளை வீசி நடக்க வேண்டும்.
* நடைப்பயிற்சியினை காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் செய்யவேண்டும்.
* குறைந்தது அரை மணிநேரம் அதாவது, தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை முறைப்படி செய்தல் வேண்டும்.

பயன்கள்

* இந்த நடைப்பயிற்சியினை தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன்பெறுகிறது.
* நடைப்பயிற்சி தொடங்கிய அன்றே முடிவில் மார்புச் சளி கரைந்து  வெளியேறுவதைக் காணலாம்.
* படிப்படியாக இருமல் மற்றும் சைனஸ் நோய் நீங்கத் துவங்கும்.
* வெகு நாட்களாக இருந்து வரும் மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமம், மூக்கில் உள்ள அடைப்பு போன்றவை சரியாகி நன்றாக  மூச்சு விட முடியும்.
* இரண்டு வேளையும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால் உள்ளங்கை விரல்கள் சிவந்து இருப்பதைக் காணலாம். அதாவது, ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
* குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
* உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
* குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
* இந்த நடைப்பயிற்சியின்போது உடல் உறுப்புகள் அனைத்தும் முக்கியமாக, இடுப்பு மற்றும் கால்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன. இதனால் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் நல்ல செயல் திறனுடன் விளங்குகின்றன.
* நடைப்பயிற்சியின்போது அதிகமாக ஆக்ஸிஜன் உள்ளே செல்வதால் நுரையீரலில் இருக்கும் சளியும் நீங்கி விடும்.
* செரிமானக் கோளாறுகள், தைராய்டு நோய், உடல் பருமன், மூட்டு வலிகள், கால் பாத வெடிப்பு பிரச்னைகள் நீங்கும்.
* தோள்பட்டை வலி, கழுத்துவலி, முதுகு வலி, கை கால் வாத நோய்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, மூலநோய், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்கு இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும்.
* ரத்த அழுத்த நோயினை நீக்குவதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும். மருந்து மாத்திரைகள் தேவைப்படாது.
* இந்த நடைப்பயிற்சியை தினமும் அரை மணிநேரம், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு செய்து வந்தால் சர்க்கரை நோய் தொந்தரவுகள் முழுமையாக நம்மைவிட்டு நீங்கிவிடும்.
* கண் பார்வைக் குறைபாடு சரியாகும். ‘8’ வடிவக் கோட்டையே பார்த்துக்கொண்டு நடப்பதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி, கண்ணாடி அணிவதையும் தவிர்க்கலாம்.
* காது தொடர்பான கோளாறுகள் நீங்கி கேட்கும் திறன் அதிகரிக்கும்.
* வயதானவர்கள் மற்றவர்கள் உதவியுடன் நடப்பது நல்லது.
* தினமும் ஒழுங்காக இந்த 8 வடிவ நடைப்பயிற்சி  செய்தால் வயதானவர்களும் இளைஞர்கள் போல ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
* சாதாரண நடைப்பயிற்சியை விட 8 வடிவ நடைப்பயிற்சி நான்கு மடங்கு சிறந்தது. உடல் சக்தி பெருகி, ஆதார சக்கரங்கள் சரியாகச் செயல்படும்.
 
இத்தனை உடல் தொடர்பான பிரச்னைகளும் எவ்வாறு சரியாகிறது என்பதை இந்த 8 வடிவ நடைப்பயிற்சியினை நீங்கள் தொடர்ந்து செய்யும்பொழுது நீங்களே உணர்வீர்கள். ஆதாரச் சக்கரங்களை தட்டி எழுப்பி 8 வடிவம் உடலை சமநிலைப்படுத்துகிறது. “இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித் தந்த சித்தர்கள் ‘வாசி யோகத்தில்’ (மூச்சுப் பயிற்சியில்) உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள்” எனக் கூறி அது தொடர்பான பிராணாயாமப் பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் என முடித்தார் முருகேசன். நமது சீசன் 3 தோழிகள் தொடர்ந்து பயிற்சியில் இருப்பதால் அவர்களின் உடல் குறைவு பற்றிய தற்போதைய எடை நிலவரம் அடுத்த இதழில் தெரிவிக்கப்படும்.

- மகேஸ்வரி

படங்கள்: ஆர்.கோபால்