செல்ஃபி படுத்தும் பாடு
விழித்ததும் செல்ஃபி... வியப்பில் செல்ஃபி, கொஞ்சல் செல்ஃபி, கோப செல்ஃபி... அட நானா! என ஒவ்வொருவரையும் படுத்தி எடுக்குது செல்ஃபி. செல்ஃபிக்காகவே ஸ்மார்ட் போன் பக்கம் கரை ஒதுங்கிய நம் மக்கள் எடுத்த செல்ஃபியை அடுத்த நிமிடமே உலகத்தின் பார்வைக்கு அனுப்பும் பரவசம். அடுத்தடுத்த நொடிகளில் வந்து விழும் லைக்கில் சிக்கித் தவிக்கும் இவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யங்களைப் போலவே அபாயங்களும் அதிரவைக்கின்றன.
செல்ஃபியால் உயிரை மாய்த்துக் கொள்பவர்களில் இந்தியாவுக்கே முதலிடம்! உளவியல்ரீதியாக இது ஒரு மனநோயாக உருவெடுத்துள்ளது. செல்ஃபி படங்களை வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும்போது பெண்கள் தங்களது ரகசியங்களை உலகறியச் செய்கின்றனர். சைபர் கிரைமில் பெண்கள் தங்களை இழக்கவும் செல்ஃபிகளே வாய்ப்பின் கதவுகளை திறந்து வைக்கின்றன. ஆனாலும் ஒரு அழகிய செல்ஃபி எடுத்துவிட்டால் அது தரும் பரவசம் மற்றை எல்லாம் மறக்கச் செய்து விடுகிறது. சேஃப்டி மற்றும் பியூட்டி கோடு ஏற்படுத்திக் கொண்டால் செல்ஃபியினால் ஏற்படும் அபாயங்களில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார் சைபர் கிரைம் புரொடக்ஷன் ஆலோசகர் ராகவன்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘செல்ஃபி எந்தளவுக்கு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை கூகுள் சொல்கிறது. ஒரு நாளைக்கு, 11 மணி நேரத்துக்கு மேல் அலைபேசியில் மூழ்கிக் கிடப்பவர்கள், சராசரியாக, 14 செல்ஃபி, 16 புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர். 21 முறை சமூக வலைத்தளங்களை பார்வையிட்டு, 25 எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றனர். பதின்மவயதினர் சராசரியாக ஒரு நாளில் நான்கு செல்ஃபி, ஆறு புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
உலகப் பிரபலங்களும் இதில் அடக்கம். செல்ஃபி எடுப்பது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மம்லர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். சாகசத்துக்காக உயிரை பணயம் வைத்து செல்ஃபி எடுப்பது இன்று சகஜமாகி வருகிறது. இது போன்ற ஆர்வக் கோளாறுகள் உயிரிழப்பில் போய் முடியும் போது சோகமே மிஞ்சு–்கிறது. இன்று பல இடங்களில் செல்ஃபி எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை போர்டுகள் வைக்கும் அளவுக்கு செல்ஃபி மோகம் சுனாமியாக மாறியுள்ளது.
யார் எவ்வளவு சொன்னாலும் செல்ஃபியை கட்டுப்படுத்த முடியாது என்பது இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தனது அழகை ரசிப்பது யாருக்குத்தான் பிடிக்காது. உதட்டை குவித்து, நாக்கை சுழற்றி, முகத்தை அஷ்டகோணலாக்கி என்று 27 வகையான போஸ்களில் செல்ஃபியில் பின்னியெடுக்கின்றனர். மொபைலில் பதிவிறக்கம் செய்யும் சில மொபைல் ஆப்கள் உங்களது கேலரி, எஸ்.எம்.எஸ். என அனைத்திலும் உங்களிடம் அனுமதி கேட்டு அத்தனை அந்தரங்கங்களையும் அள்ளிச் சென்றுவிடும்.
எந்த நேரத்தில் எங்கு, யாருடன் இருந்தீர்கள் என்பதைக் கூட ஒரு செல்ஃபியை பகிர்வதன் மூலம் நீங்கள் உலகுக்கு சொல்கிறீர்கள். எப்பொழுதும் டேட்டா ஆனில் இருப்பதாலும் உங்களது மொபைலில் உள்ள விஷயங்களை பலரும் களவாட முடியும். குளிக்கும் போதும், படுக்கை அறையில் தனிமையில் இருக்கும் போதும் செல்ஃபிகளை எடுக்காமல். தவிர்ப்பதே நல்லது. இணையத்தில் விஷயங்களை பகிர்வது எவ்வளவு எளிதாக உள்ளதோ அவ்வளவு எளிது உங்களது தகவல்களை திருடுவதும்.
ஆப் டவுன்லோட் செய்யும் போதும் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் எதையெல்லாம் அக்சப்ட் செய்கிறோம் என்பதில் கவனம் தேவை. எந்த இடத்திலும் எப்பொழுதும் டேட்டாவை ஆனில் வைத்திருப்பதைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் சொந்த விஷயங்களை பலர் திருடுவதைத் தடுக்கலாம். செல்ஃபி எடுப்பவர்கள் தனக்கு எது தேவை என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான சூழலில் செல்ஃபி எடுப்பது தவறில்லை. சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது, லைக்குக்கு ஆசைப்பட்டு லைஃபையே தொலைக்க வேண்டுமா? ’’ என்கிறார் ராகவன்.
விமானத்தில் விதம் விதமா செல்ஃபி யுனீக் நிறுவனம் ‘பிரீஸ் டிரோன்’ என்ற பெயரில் செல்ஃபி எடுப்பதற்கான பிரத்யேக குட்டி விமானத்தை உருவாக்கி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் 4கே ரெசலுசன் தெளிவில் படங்கள், வீடியோக்களை எடுத்துத்தள்ளும். 13 எம்.பி. கேமரா கொண்டுள்ளது. செல்போன் அப்ளிகேசன் மூலம் இதை இயக்கலாம். 12 நிமிடங்கள் வரை அந்தரத்தில் மிதந்து செல்ஃபி எடுக்கும்.
இதில் எடுக்கும் படங்கள், வீடியோக்களை அப்ளிகேசன் மூலம் எடிட் செய்யலாம். நேரடியாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப், ட்விட்டர் தளங்களில் பகிரும் வசதியும் உள்ளது. அரை மணி நேரத்தில் சார்ஜ் ஆகிக்கொள்ளும். விலையோ 499 அமெரிக்க டாலர்கள். செல்ஃபி ஏற்படுத்தும் பாதிப்பு அடிக்கடி ‘செல்ஃபி’ எடுப்பதால் முகம் பாதிக்கப்படுகிறது. போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும். செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் மரபணுவை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
எந்தக் ேகாணத்தில் நாம் அழகாகத் தெரிவோம் என்ற தேடல் செல்ஃபியில் டென்சனை ஏற்றுகிறது. செல்ஃபி ஒரு நோயாக தொற்றிக் கொள்ளும். நிமிடத்திற்கு ஒருமுறை செல்ஃபி எடுக்கா விட்டால் டென்சனில் தவிக்கும் நிலைக்கு தள்ளும். செல்ஃபி உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளை தருகிறது என்று ஆய்வுகள் அதிரவைக்கின்றன. சமீபத்தில் ஒஹியோ பல்கலைக்கழகத்தில் எடுத்த ஆய்வில் செல்ஃபி எடுத்துக் கொண்டேயிருப்பவர்கள் உளவியல்ரீதியாக பிரச்னைகளை சந்திக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளது.
எடுக்கும் செல்ஃபியை சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்து கொண்டே இருப்பவர்கள் உளவியல் ரீதியாக ஏதாவது ஒன்றின் மீது அதீத ஈடுபாடு காட்டுபவர்களாக உள்ளனர். இது பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவர்களை ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் அடிமைகளாக மாற்றி எந்த வேலையிலும் கவனம் செலுத்த விடாமல் கலங்கடிக்கிறது. இப்படி செல்ஃபி மோகம், ஃபேஸ்புக் பிசாசு, வாட்ஸ் அப் வைரல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு தெரபி அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அச்சச்சோ ஆபத்து செல்ஃபி
வித்தியாசமாக செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதற்காக, இறந்துபோன பெரியப்பா முகத்துடன் ஒட்டிக் கொண்டு ஒப்பாரி செல்ஃபி எடுப்பது. தன்னைக் கொத்த வந்த பாம்பை கையில் பிடித்தபடி பாம்பு செல்ஃபி எடுத்து அதனிடம் கொத்து வாங்கி பரலோகம் போவது. மிக உயர்ந்த கட்டிடங்கள், அருவி போன்ற நீர்நிலைகளில் அமர்ந்து செல்ஃபி எடுக்கத் துவங்கி விட்டால் லைட்டிங் பார்த்து, ஷேடிங் பார்த்து, முகத்துக்கான அழகிய கோணம் பார்த்து ஆபத்தில் சிக்கியவர்கள் அதிகம். இந்த இடங்களில் செல்ஃபியில் அழகாகக் தெரிவதை விட உயிரை காப்பாற்றிக் கொள்வது முக்கியம்.
நட்பில் மிக நெருக்கமாக முகத்தோடு முகம் வைத்து செல்ஃபி எடுப்பதால் தலையில் பேன் பரிமாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. செல்ஃபி எடுக்கும்போது மிக அருகில் மொபைலை வைப்பதால் உடல் குண்டாக தெரியும். சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது குண்டாகத் தெரிகிறோம் என்று நினைப்பதால் மொபைலில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்பதற்காக சாப்பாட்டைக் குறைத்து ஒல்லி உடலுக்கு மாறுகின்றனர். இதுவும் உடல் நலனை பாதிக்கும்.
செல்ஃபியின் போது தொடர்ந்து முழங்கையை வளைத்தபடி போட்டோ எடுப்பதால் முழங்கைகளில் திசுக்கள் பாதிப்படைந்து வீக்கம் உண்டாகிறது. முழங்கை வலி உண்டாகும். தேய்மானமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆபத்துகள் தவிர்க்க அளவோடு எடுக்கலாம் செல்ஃபி. செல்ஃபியை அழகாக எடுக்க என்னென்ன போஸ், லைட்டிங், கேமரா மற்றும் எடுத்த செல்ஃபிகளை அழகூட்டி அற்புதங்கள் நிகழ்த்தும் ஆப்கள் வரிசை கட்டி நிற்கின்றன. செல்ஃபி எடுக்கும்போது சேஃப்டி முக்கியம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்ஃபிக்கும் பொருந்தும்.
- யாழ் ஸ்ரீதேவி
|