எழுத்து என்றும் திகட்டாது



-விமலா ரமணி

முந்தைய தலைமுறை பெண்களின் மனதில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் அனுராதா ரமணன், லஷ்மி, ஆர்.சூடாமணி போன்ற பெண் எழுத்தாளர்கள்தான். அந்த வரிசையில் முக்கிய இடம் விமலா ரமணிக்கு உண்டு. திரைத்துறையில் ஆயிரம் படங்களை தாண்டிய ஆச்சி மனோரமா போல எழுத்துத்துறையில் 1000 கதைகளை தாண்டிய பெண் எழுத்தாளர் என்ற பெருமை இவருக்குண்டு. அந்த காலத்து பி.ஏ. பட்டதாரி. பத்திரிகையாளர். கடந்த 40 ஆண்டு காலமாக எழுதி வருகிறார். படைப்புத்துறையில் ஆழமாக தடம் பதித்த இந்த பிரபலம் நமக்களித்த பேட்டி...

எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்?
நான் கையில் பேனாவுடன் பிறந்தவளா என்ன? திருமணமானபின்தான் எழுத ஆரம்பித்தேன்.
 
எழுத ஆரம்பித்த புதிதில் எதிர்கொண்ட சவால்கள்?
நிறைய உண்டு. சுவற்றில் அடிபட்ட பந்து போல் திரும்பி வந்த கதைகளை வைத்துக் கட்டிடம் எழுப்பி அவற்றை வெற்றிப் படிக்கட்டுகளாக்கி பிடிவாதமாக முன்னேறியவள் நான். எனக்கு யாரையும் தெரியாது. சிபாரிசும் பிடிக்காது.
 
எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் பின்னணி?
அந்தக் காலத்திலேயே கல்கி, விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை பைண்ட் பண்ணி வைத்திருப்பார் என் அம்மா. இப்போது போல அப்போதெல்லாம் உடனுக்குடன் புத்தகங்கள் வெளிவராது. விடுமுறை நாட்களில் அந்த பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள்தான் என் தோழிகள். கல்கியையும் லஷ்மி அம்மாவையும் நான் சந்தித்த நாட்கள் அவை.
 
குடும்பம்...
கணவர், ஒரே மகள். என் மகள் ரூபா பெங்களூரில் தன் கணவர், இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறாள். பெரியவள் பெயர் திவ்யா ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறாள். இளையவன் பெயர் ஆதர்ஷ். இன்ஜினியர். (நான் பாட்டி ஆகி விட்டேன் தெரியுமா?)
 
இது வரை வெளிவந்துள்ள உங்கள் படைப்புகள்?
1000க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 600 நாவல்கள். எண்ணற்ற வானொலி நாடகங்கள். அகில பாரத நாடகமாக ஒலிபரப்பான வானொலி நாடகவிழா நாடகங்கள். பல தொலைக்காட்சி நாடகங்கள் என பல உண்டு.
 
குடும்பம் சார்ந்த நாவல்களையே அதிகம் எழுதியுள்ளீர்கள். அதில் எந்த அளவு பெண்களின் பிரச்னைகளைப் பற்றி பேசி இருக்கிறீர்கள்?
எனக்குத் தெரிந்த, நான் அறிந்த என்னைச் சார்ந்த உறவுகளின் மூலம் குடும்பப் பிரச்னைகள் மற்றும் சில சுய அனுபவங்களின் மூலம் நான் பெற்ற பாடங்கள் கதைகளாகின்றன. நான் நகரத்தைச் சார்ந்தவள் என்பதால் என் கதாபாத்திரங்களில் அந்தப் பாதிப்பு இருக்கலாம்.
 
காதல் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் காரணம்?
காதல்தான் என்றும் நிரந்தரமானது. காதல் கதைகளைத் தற்கால இளைஞன் படிக்கும்போது அதில் தன்னைப் பொருத்திப் பார்க்கிறான். வயதானவர்கள் தன் பழைய நினைவுகளை மலரும் நினைவுகளாக்கி அதில் ஆறுதல் பெறுகின்றனர். அதனால்தான் காதல் படங்கள் வெற்றி பெறுகின்றன. சன்னியாசிகளும் பிரம்மச்சாரிகளும் விதிவிலக்கு.
 
காலம் மாற மாற உங்கள் கதாநாயகி கதாபாத்திரங்களை புதுப்பித்தீர்களா?
நிச்சயமாக! இத்துறையில் நான் நீடிப்பதற்கு அதுதான் காரணம். நதி ஓடிக் கொண்டு இருந்தால்தான் அது ஜீவ நதி. நான் சுவாசம்போல் என் துறையை நேசிக்கிறேன்.
 
உங்கள் கால பெண் எழுத்தாளர்களுடனான நட்பு குறித்து...
சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, உஷா சுப்ரமணியம் அனைவரையும் சந்தித்திருக்கிறேன். எங்கள் இல்லம் வந்துள்ளார்கள். உஷா கோவையில் இருந்தபோது பல நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்றுள்ளோம். அது ஒரு கனாக் காலம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் இந்த நண்பிகளை சந்தித்தது ஓர் இனிய அனுபவம். லஷ்மி அம்மாவை சென்னையில் சி. ஐ. டி காலனியில் உள்ள அவர்கள் இல்லத்தில் மறைந்த ‘கதிர்’ ஆசிரியர் திரு. வாசுதேவன் அவர்களுடன் சந்தித்துள்ளேன்.

அப்போது தினமணிக்கதிரில் என் தொடர்கதை வெளிவந்துகொண்டிருந்தது. அனுராதா ரமணனை அவர் எழுத்தாளர் ஆவதற்கு முன்பே் தெரியும். அப்போது மேட்டூரில் இருந்தார். ஒரு விழாவிற்காக அங்கு சென்றிருந்தபோது அவர் இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். என் மகள் ரூபா திருமணத்திற்கு வந்திருந்த அவர் தன் குரு சாந்தா நாராயணனுடன் மணமக்களின் உருவத்தை ரங்கோலியாக வரைந்தது மறக்கமுடியாத இனிய நினைவு. ஒரு நல்ல நட்பு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

மனதுக்கு நெருக்கமான பெண்...
என் தாய்தான் என் வழிகாட்டி, ஆசான், ஞானகுரு. அவர் இப்போது இல்லை. அன்பையும் பண்பையும் எனக்குக் கற்றுத் தந்த குடும்பத் தலைவி. என் தாயின் ஆளுமை என்னைப் பிரமிக்க வைக்கும். அதிக படிப்பில்லாத அவரின் சாதனைகள் ஆச்சரியப்பட வைக்கும். இசை ஞானம், வடமொழிப் புலமை, கலை அறிவு - இப்படி பல அற்புதங்கள் அவருள் புதைந்திருந்தன. அவருடன் ஒப்பிட்டால் நான் அஞ்ஞானி.
 
உங்கள் படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
எல்லாமே பிடிக்கும். ஒரு சிற்பிக்கு, தான் வடித்த சிலையைத் தொழத் தோன்ற வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அதைத் தெய்வமென்று வணங்குவார்கள். என் படைப்புகளை நானே ரசிக்காவிட்டால் எப்படி? திருப்தி இல்லா எதையும் நான் பிரசுரத்திற்கு அனுப்புவதில்லை.
 
பெண்மை சார்ந்த தலைப்புகளையே அதிகமாக உங்கள் நாவல்களுக்கு வைத்திருக்கிறீர்கள்? எதன் அடிப்படையில் இந்த தலைப்புகளை தேர்வு செய்தீர்கள்?
நீங்களே சொல்லிவிட்டீர்கள் ‘பெண்மை சார்ந்த’ என்று.  அந்தப் பெண்மைதான் காரணம். ‘மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ?’ என்றான் பாரதி. பாரதிதான் என் ஆசான்.
 
உங்கள் படைப்புகளில் புதுக்கவிதையை மேற்கோள் காட்டும் வழக்கத்திற்கு குறிப்பிடத்தகுந்த காரணம் உண்டா?
புதுக்கவிதைகள் நிறைய படிப்பேன். அவை சட்டென்று புரியும். அர்த்தம் தேடி அலைய வேண்டாம். ‘இரவில் வாங்கினோம் சுதந்திரம் இன்னும் விடியவில்லை’ என்ற புதுக்கவிதையைத்தான் நாம் இன்னமும் உதாரணம் காட்டுகிறோம். “படுத்துக் கிடப்பவனுக்கு ஏணி கூட எதிரிதான். எழுந்து நின்றால் இமயம் இடுப்பளவுதான்” என்று எங்கள் ஊர் கவிஞர் திரு. கவிதாசன் அவரின் கவிதை வரிகளை என் நாவல்களில் பல இடங்களில் அவரின் அனுமதியோடு புகுத்தி இருக்கிறேன்.
 
உள்ளத்தில் இருக்கும் அக்னிதான் எழுத்து என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த அக்னி எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?
அது தீமையை சுட்டெரிக்க வேண்டும். தண்ணீரில் கைகழுவினால் நம் கையின் அழுக்கு, தண்ணீரில் கலந்து தண்ணீரும் அழுக்காகும். ஆனால் நெருப்பிலே போடப்பட்ட அழுக்கை நெருப்பு சுட்டெரிக்கிறது. அதனால் நெருப்பு அழுக்காவதில்லை.
 
எழுத்து உங்களுக்கு சலித்துவிட்டதா?
எழுத்தாளர்களை எழுத்துலக பிரம்மாக்கள் என்கிறோம். தன் படைப்பில் பிரம்மனுக்கு சலிப்பு ஏற்படுமா? உலகமே ஸ்தம்பித்து விடாதா? எழுத்தாளரை இயக்குவதே இந்த எழுத்துதான். எப்படி சலிப்பு வரும்? இனிப்பு சாப்பிட்டால் திகட்டும். ஆனால், இதயத்திற்கு இதமளிக்கும் இனிய நல் எண்ணங்களை எத்தனை சுவைத்தாலும் திகட்டாது. இலக்கியதாகம்தான் ஏற்படும்.
 
எதிர்கொண்ட பாராட்டுகள்... விருதுகள்...
‘குங்குமம்’ - டாலர் பரிசு - முதல் பரிசு (78), ‘தினமணிக்கதிர்’ - சிறுகதைப் போட்டி முதல் பரிசு (77), ‘கலைமகள்’ - குறுநாவல் போட்டி முதல் பரிசு (79), ‘கல்கி’ - சிறுகதைப் போட்டி - பரிசு, ‘சுஜாதா’ - குறுநாவல் போட்டி - முதல் பரிசு மற்றும் பல. சமூக நலத்திலகம், வி.ஐ.பி. விருது, எழுத்துச்சுடர், சாதனைப் பெண்மணி, முத்தமிழ் வித்தகி, சாதனையாளர் விருது, மனிதநேய மாண்பாளர், நாவலரசி என பல பட்டங்களும் உண்டு.

நவீன எழுத்துகளை வாசிப்பதுண்டா?
எல்லா எழுத்துக்களையும படிப்பேன். போஸ்ட் கார்ட் கதை உள்பட. ஆனால், கருத்து சொல்வதில்லை.

தற்போதைய பெண் எழுத்தாளர்கள் குறித்து...
நிறைய எழுதுகிறார்கள் தைரியமாக எழுதுகிறார்கள் யதார்த்தமாக எழுதுகிறார்கள். எதையும் எழுதுகிறார்கள். எப்படியெல்லாமோ
எழுதுகிறார்கள். பாராட்டுகள்.
 
வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது?
என்றும் தோழமை நல்லது. இலக்கியத்தில் தோழி என்றால் தலைவியோடு உடன் இருப்பவள். நம் வழிகாட்டியாக ஆலோசனை வழங்கும் ஆசானாக உதவிக்கரம் நீட்டும் உத்தமியாக இடுக்கண் களையும் நண்பியாக இருத்தல் அவசியம்.
 

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்

படங்கள்: மூர்த்தி

 
‘நவரத்தினா’ என்கிற இவரது நாடகக் குழு மூலமாக இவர் எழுதிய 10 மேடை நாடகங்கள் 100 முறை அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகளில் ஆய்வுசெய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பலர் விரும்பி பார்த்த பிரபலமான ‘கண்ணே கனியமுதே’ படம் இவரது கதைதான். உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று பெண்ணியம் பற்றிய கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார்.