கல்வித்துறையை மாற்றிய அதிகாரி



-அனிதா கவுல்

‘‘எல்லாரும் ஜீனியஸ்தான் ஆனால், ஒரு மீனின் திறமையை மரமேறுவதில் எடை போட்டால், கடைசி வரை அதனை முட்டாள் என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். 62 வயதான அனிதா கவுல் தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அனுப்பிய கடைசி செய்தி இது. ஒரு ஆவணப்படத்தின் தொடக்கக் காட்சியின் வசனங்கள் இவை. அவர் வாழ்நாள் முழுதும் நமக்கு போதித்ததும் இதைத்தான். காலத்திற்கும் கல்விக்காக பாடுபட்ட அனிதா கவுலின் இறப்பு நாட்டின் கல்வி துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு” என்கிறார் சக ஐ.ஏ.எஸ். அதிகாரியும் எழுத்தாளருமான உமா மகாதேவன் தாஸ்குப்தா.

கர்நாடக மாநிலத்தில் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இந்த அதிகாரி இன்று நம்மிடையே இல்லை. 62 வயதில் காலமானார். புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ(மொழியியல்) படித்தவர். ஜெர்மன் மொழியிலும் புலமை உண்டு. எந்தவொரு குழந்தையும் தோல்வியின் பயமின்றி, அச்சுறுத்தும் சூழலின்றி, மகிழ்ச்சியாக தனது கல்வியை கற்கவேண்டும் என்பது முன்னாள் இந்திய ஆட்சியாளரான அனிதா கவுலின் நோக்கம்.

அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அனிதா. இவரது இந்த கல்விமுறை குழந்தைகளின் சுய சிந்தனைக்கு மதிப்பு அளித்தது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறமை உண்டு என்பதில்லாமல் ஒரே அளவுகோல் எல்லாருக்கும் பொருந்தும் என்ற கொள்கைப்படி எல்லா குழந்தைகளின் திறமைகளையும் ஒரே அளவீட்டால் அளப்பது என்னும் இந்த கல்விமுறையை எதிர்த்துப் போராடியவர் அனிதா. தன் வாழ்வின் பெரும்பாலான நாட்களை அதற்காகவே செலவிட்டவர்.

அவரது கணவர் சஞ்சய் கவுலும் இந்த செயற்பாட்டில் அனிதாவிற்கு உறுதுணையாக இருந்தார். “என்னுடைய வேலையில் ஒரு சமயம் சோர்வு ஏற்பட்ட சமயத்தில் ஒரு சீனியராக அனிதாவிடம் ஆலோசனை கேட்ட போது ‘எல்லா சோர்விலிருந்தும் நீங்கி களத்தில் இறங்கு’ என எனக்கு அறிவுரை தந்தார். பிறகு தான் பிதார் கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கர்நாடக நலிகலி முறையின் செயல்வழிக் கல்விமுறையின் அட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

அவற்றைப் பயன்படுத்தி அந்த வகுப்பறையின் பழைய கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வந்தேன். பல வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நலிகலி முறையை அறிமுகப்படுத்தியவர் அனிதா. ஆரம்பப்பள்ளிகளில் அது முக்கிய அங்கம் வகித்தது. கல்வித்துறை சம்பந்தமான பல்வேறு புதிய கண்ணோட்டங்களை செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியவர் அனிதா கவுல்.
 
அந்த முறையில் பயின்ற ஒரு சிறுமி படிப்பதை ஆசிரியர்கள் பெருமை பொங்க பார்க்கும் ஒரு வீடியோவை அனிதாவிற்கு அனுப்பி இருந்தேன். அவர்களுக்கு இதைவிட திருப்தி வேறு எதுவும் இருந்திருக்காது என நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன், தான் தொடங்கிய கல்வி முறை இன்றும் பயன்பாட்டில் இருப்பது பெருமைக்குரிய விஷயம்தானே.

இது அனிதா கவுலின் உள்ளார்ந்த பார்வைக்கும் கடின உழைப்பிற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்குமான பரிசு” என்கிறார் உமா மகாதேவன் தாஸ்குப்தா. பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அனிதா கவுல் போல ஒவ்வொரு அதிகாரியும் இருந்துவிட்டால் நாட்டில் சீர்திருத்தங்கள் அதிகரித்து சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

- ஸ்ரீதேவி மோகன்