யதார்த்த முகம்-செம்மலர் அன்னம்

பாலுமகேந்திராவின் திரைப்பட நாயகிகளுக்கே உரித்தான முகச்சாயல் கொண்டிருக்கிறார் செம்மலர் அன்னம். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘அம்மணி’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ‘அமுதா’ என்கிற கதாப்பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். நாடகம் மற்றும் குறும்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள இவர் முறையாக நடிப்பு கற்றுக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்...

‘‘நடிப்பு என் இயல்பிலேயே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என் பள்ளி நாட்களிலிருந்தே நான் நாடகங்களில் நடிக்கவும், இயக்கவும் செய்திருக்கிறேன். அடிப்படையிலேயே இருந்த இந்த ஆர்வம் காரணமாகத்தான் விஷுவல் கம்யூனிகேசன் தேர்ந்தெடுத்துப் படித்தேன். படிக்கிற காலங்களில் ப்ராஜெக்டுக்காக சில குறும்படங்களை இயக்கினேன். ‘மலர்மதி’ என் முதல் குறும்படம்.

பெற்றோரை இழந்த பெண் தனது உறவினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் அது. பாதிப்புக்குள்ளாகும் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாரும் முன்வராததால் அக்கதாப்பாத்திரத்தில் நானே நடித்தேன். சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் சிறந்த குறும்படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை என அக்குறும்படம் மூன்று விருதுகளைப் பெற்றது. எடிட்டர் லெனின் சார்தான் அவ்விருதுகளுக்கான நடுவர்.

கிராமப்புறங்களில் விதவை மறுமணத்தின் மீதான பார்வையை அடிப்படையாக வைத்து ‘கோணங்கள்’ எனும் குறும்படத்தை அடுத்ததாக இயக்கினேன். மூன்று தலைமுறைகளின் பதிவை உள்ளடக்கியிருக்கும் அக்குறும்படம் சுயமரியாதை பண்பாட்டுக்கழகத்தின் சிறந்த குறும்படம் என்கிற விருதைப் பெற்றது. தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவுக்காக எடுத்த குறும்படம் ‘மது’. கோவையில் ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் கொண்டு அப்படத்தை இயக்கினேன்.

குறும்படங்களை இயக்கி வந்தாலும் எனக்கு நடிப்பின் மீதுதான் ஆர்வம் அதிகம் இருந்தது. நாடக இயக்குனர் ‘ராம்ராஜ்’ இயக்கத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகங்களில் நடித்தேன். நடிகையாக வேண்டும் என்கிற எண்ணமும், நம்பிக்கையும் அப்போதுதான் பிறந்தது’’ என்கிறார். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான அருண்மொழி நடத்தி வரும் ‘ஸ்தனிஸ்லாவ்ஷ்கி’ திரைப்படப்பள்ளியில் நடிப்பு கற்றுக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாமல் அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு பயிற்சியும் தருகிறார்.

‘‘நடிப்பு என்பது முறையான பயிற்சியின் மூலம் மேலும் வளப்படும். லட்சுமி சரவணக்குமார் இயக்கத்தில் ‘மயானத்தங்கம்’ என்கிற குறும்படத்தில் நடித்தேன். அந்தக் குறும்படம் எனக்கு மேலும் பல குறும்பட வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தது’’ என்றவர் அம்மணி படத்தில் தான் இணைந்ததைப் பற்றிக் கூறினார். ‘‘லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் ‘அம்மணி’ படத்துக்காக நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்.

அருண்மொழி சார் மூலம் எனது புகைப்படத்தைப் பார்த்தவர் என்னை ஆடிசனுக்குக் கூப்பிட்டார். அப்போது 25 வயது எனக்கு. ‘அமுதா’ என்கிற கதாப்பாத்திரம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 35 வயதுப் பெண். நான் அதற்கு பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று பலரும் கூறினார்கள். இருந்தும் நம்பிக்கையோடு அக்கதாப்பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தார். படம் பார்த்தவர்கள் எனது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது என்று சொன்னது ஊக்கமாக இருந்தது’’ என்கிறவர் ‘மருதன்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

அப்படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது. ‘குற்றம் கடிதல்’ திரைப்பட இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் தயாராகி வரும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்திலும் நடிக்கிறார். அதே நேரம் மேடை நாடகங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

- கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.கோபால்