மழைக்கால குறிப்புகள்



மழையை ரசிப்போர் ஒருபுறம் இருக்க, மழை வந்தாலே பிழைப்பு கெட்டுப்போவோருக்கு மழை ரசனைக்குரிய ஒன்றாக இருப்பதில்லை. ஆனால், மழைக்காலத்தில் எல்லோருமே எச்சரிக்கையாக இல்லையென்றால் உடல்நலம் கெட்டுப்போய்விடும் அபாயம் உள்ளது.

மழையில் நனைந்த தலையை துவட்டாமல் விட்டால் சளி, காய்ச்சல் என படுத்தி எடுக்கும். இந்த காலத்தில் பெருகும் வைரஸ், நோய் பரப்பும் கொசுக்கள் என இம்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் இனி வரும் மழை நாட்களை இனிதே கடக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விளக்குகிறார் டாக்டர் தமிழரசி, ‘‘மழைக்காலம் துவங்கும் போதே பல தொற்று நோய்களும் அழையா விருந்தாளிகளாக வந்து விடுகின்றன. சளி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் ஆகியவை வைரஸ் மூலம் பரவுகிறது.

உணவுத் தொற்றில் வாந்தி, பேதி வரலாம். சுகாதாரமற்ற தண்ணீரில் காலரா பரவுகிறது. மழைக்காலத்தில் தோல் நோயாக காலில் பூஞ்சை நோய் ஏற்பட்டு புண் மற்றும் எரிச்சல் ஏற்படும். கண் சார்ந்த தொற்று நோய்களும் வரலாம். பெரும்பாலான நோய்கள் மழைக்காலத்தில் தண்ணீரின் மூலம் பரவுகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே பருக வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது சுகாதாரமற்ற முறையில் கிடைக்கும் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்கலாம்.

திறந்த வெளியில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதாலும் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவையும் அவ்வப்பொழுது சமைத்து சூடாக உட்கொள்ளலாம். சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம். சூடாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் சமைத்த உணவுகள் மழைக்காலத்துக்கு ஏற்றது. பழம் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் அஜீரணக் ேகாளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பச்சையாக காய்கறி சாலட் சாப்பிடு வதற்கு பதிலாக வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். பேலன்ஸ்டு டயட்டாக எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற வயிற்று உபாதைகளில்இருந்து தப்பிக்கலாம். வைட்டமின் சி சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், தீயில் நேரடியாக வேக வைக்கும் தந்தூரி வகை உணவுகளுக்கு மழைக்காலத்தில் தடை போடலாம்.

மழை மற்றும் குளிர் காலத்தில் அதிகளவில் தாகம் எடுக்காது. இதனால் குறைந்தளவே தண்ணீர் குடிக்கின்றனர். ஆனாலும் உடலுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சர்க்கரை, ஆஸ்துமா நோயாளிகள் மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குளிர் காலத்தில் உடலை வெப்பமாக வைத்துக் கொள்வதற்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டும். மழையில் அதிகம் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை ஈரம் உள்ள சுவர்களில் பூஞ்சை நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அது போன்ற இடங்களில் சாய்ந்து நிற்கக் கூடாது.

மழைக்காலங்களில் கொசுக்களினால் நோய் பரவ வாய்ப்புள்ளது. வீட்டில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தி கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு குளிர் காலங்களில் காது தொடர்பான உபாதைகள் தாக்க வாய்ப்புள்ளது. காதுகளில் குளிர் பரவாமல் தடுக்க ஸ்கார்ப் போன்றவற்றை அணிந்து பாதுகாக்கலாம். தற்பொழுது வரும் காய்ச்சல் வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் சளி காய்ச்சல் தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். மழைக்காலத்தில் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் நோய் தீவிரம் அடையும். சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும். உடல் நலத்தை பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் தான் மழையை ரசிக்க முடியும்,’’ என்கிறார் தமிழரசி.

- யாழ் ஸ்ரீதேவி