புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணத்தில், 1886 ஜூலை 22ல் பிறந்தவர் முத்துலட்சுமி. அப்பா நாராயணசாமி, அம்மா சந்திரம்மாள். சிறுவயதில் இருந்தே படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார் முத்துலட்சுமி. பள்ளிக்கல்வி முடித்தவுடன் கல்லூரி செல்ல விரும்பினார். அந்தக் காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே உயர்கல்வி கற்க சமூகம் அனுமதித்திருந்தது. முத்துலட்சுமியைச் சேர்த்துக்கொள்ள அந்தக் கல்லூரியின் முதல்வர்கூட மறுத்தார். புதுக்கோட்டை மகாராஜா இந்த எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் முத்துலட்சுமிக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததோடு, அவர் படிக்க ஊக்கத்தொகையும் அளித்தார். கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் மகளை ஆசிரியராக உருவாக்க வேண்டும் என்று முத்துலட்சுமியின் தந்தை விரும்பினார். முத்துலட்சுமிக்கோ மருத்துவராக எண்ணம்.
1907ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நுழைந்த முதல் பெண் முத்துலட்சுமிதான். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் நிறைய தங்கப் பதக்கங்கள், விருதுகளைத் தட்டிச் சென்று கல்லூரியின் முக்கிய மாணவியாகத் திகழ்ந்தார். 1912ல் மருத்துவராக வெளிவந்தார் முத்துலட்சுமி. அப்போது இந்தியாவில் இருந்த ஒரு சில பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
மருத்துவம் மட்டுமின்றி, சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக இருந்தார் முத்துலட்சுமி. அன்னிபெசன்ட், காந்தி என்று அவருடைய ஆர்வம் விரிந்தது. அன்னிபெசன்ட்டின் பிரம்மஞான சபையில் தீவிரமாக ஈடுபாடுகொண்ட டி.சுந்தரரெட்டியிடம், தன்னைச் சமமாக மதிக்கவேண்டும் என்றும் தன்னுடைய லட்சியங்களுக்கு குறுக்கே நிற்கக்கூடாது என்றும் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, திருமணம் செய்துகொண்டார்.
சமூகப் போராட்டங்களில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றார். தமிழ் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டார். அரசியலிலும் கவனம் செலுத்தினார். அன்றைய சென்னை மாகாண சட்டபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலேயே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் முத்துலட்சுமி. 1925ம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவரானார். அடுத்த 5 ஆண்டுகளில் தேவதாசி முறை ஒழிப்பு, இரு தார மணம் தடை, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குதல், குழந்தைத் திருமண ஒழிப்பு போன்ற முற்போக்கான சட்டங்களை இயற்றி, அவற்றை நிறைவேற்றவும் செய்தார்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் முன்னேற வேண்டும் என்றும் பெண்களை அடிமையாக நடத்தும் அவலம் ஒழிய வேண்டும் என்றும் தீவிரமாக வேலை செய்தார் முத்துலட்சுமி. ‘ஸ்த்ரீ தர்மம்’ என்ற பெண்கள் மாத இதழின் ஆசிரியராக இருந்தார். 1926ல் பாரிஸில் நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பெண்கள் உரிமைகளை வலியுறுத்தினார்.
1930ம் ஆண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்காக, ‘அவ்வை இல்லம்’ ஆரம்பித்தார். குழந்தைகளை படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வருவது இந்த இல்லத்தின் முக்கிய நோக்கம். புற்றுநோய்க்கான மருத்துவமனை அமைய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, நிதி திரட்டிக் கொடுத்தார் முத்துலட்சுமி. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் 1952ல் ஜவஹர்லால் நேரு மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது.
முத்துலட்சுமியின் பல்துறை சேவைகளைப் பாராட்டி, 1956ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் வழங்கப்பட்டது.
1968 ஜூலை 22 அன்று, 81 வயதில் மரணம் அடைந்தார் முத்துலட்சுமி. அவர் வாழ்ந்த காலத்தில் படிப்பிலும், சமூக அக்கறையிலும், மருத்துவத்திலும், அரசியலிலும் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்ட பெண்கள் யாரும் இல்லை!
- சஹானா