24 மணி நேரம் : பிரபலங்களின் நேர நிர்வாக ரகசியம்!





‘‘பிள்ளைகளுக்கு பெத்தவங்கதான் முன்மாதிரி. அவங்க எந்தப் பாதையில நடக்கிறாங்களோ, பிள்ளைகளும் அந்தப் பாதையிலதான் நடப்பாங்க. எங்க அப்பா திட்டமிட்டு வாழக்கூடியவர். அவரைப் பார்த்தே நாங்க வாழ்க்கையை கத்துக்கிட்டோம்...- ஒரே குரலில் உணர்வாக பேசுகிறார்கள் சண்முகப்ரியாவும் ஹரிப்ரியாவும். பிரித்தறிய முடியாத அளவுக்கு இணைந்த குரலுக்குச் சொந்தக்காரர்களான ப்ரியா சிஸ்டர்ஸ், சாஸ்திரிய சங்கீத சகோதர பரம்பரையில் பிரதானமானவர்கள்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரமே ப்ரியா சகோதரிகளின் பூர்வீகம். அப்பா வி.வி.சுப்பாராம் எம்.ஏ. இசைப் பயின்றவர். சித்தூர் அரசு கலைக்கல்லூரியில் இசைப் பேராசிரியர்.
‘‘அம்மா லலிதாவும் பிரமாதமா பாடுவாங்க. அக்கா எப்பவுமே மியூசிக்னே இருப்பா. எனக்கும் அவளுக்கும் ஒன்றரை வயது வித்தியாசம். எனக்கும் மியூசிக் பிடிக்கும்னாலும் அதைவிட கிரிக்கெட்தான் உயிர்!

அப்பா எந்த முடிவையும் எங்களுக்குள்ள திணிக்க மாட்டார். ஆனா, அவருக்குள்ள ஒரு பெரிய கனவு இருந்துச்சு. சூலமங்கலம் சகோதரிகள், ராதா-ஜெயலட்சுமி, பிருந்தா-முக்தா, ஆலந்தூர் பிரதர்ஸ் மாதிரி நாங்களும் இணைஞ்சு பாடி பேரு வாங்கணும்கிறது அவரோட கனவு. அதுக்கு சித்தூர் சரியான களமில்லை. அதனாலதான் தனியா கஷ்டப்பட்டாலும் பரவாயில்லைன்னு, மயிலாப்பூர்ல வீடு பாத்து, எங்களை சென்னைக்கு அனுப்பிட்டார். ஜி.என்.பாலசுப்ரமணியத்தோட சிஷ்யைகள் ராதா-ஜெயலட்சுமி சகோதரிகள்கிட்ட பாட்டுக் கத்துக்கிற பெரும் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சுது - நெகிழ்வாகப் பேசுகிறார் ஹரிப்ரியா.



தமிழக அண்டர் 19 கிரிக்கெட் அணியில் தேர்வாகி, நேஷனல் செலக்ஷன் வரை போனவர் ஹரிப்ரியா.
‘‘நான் ஃபாஸ்ட் பவுலர். காலையில கிரிக்கெட் பிராக்டீஸ். ஈவ்னிங் இசை. அதோடு கிடாரும் கத்துக்கிட்டேன். கிரிக்கெட்டுக்கு உடல் பலம் வேணும். இசைக்கோ  மனசும் மென்மையா இருக்கணும். கிரிக்கெட் ஆடிட்டு, இசைப் பயிற்சிக்குப் போகும்போது, குரல் இடறத் தொடங்குச்சு. அப்பாவோட தியாகம், அவரோட கனவு இதெல்லாம், ‘கிரிக்கெட்டை விட இசைதான் பிரதானம்’னு வலியுறுத்த, கிரிக்கெட்டை விட்டுட்டேன். ஸ்கூல்ல படிக்கும்போதே ஒரு கல்யாணத்துல கச்சேரி பண்ற வாய்ப்பு. குரு ஜெயலட்சுமி அம்மா, Ôரெண்டு பேரும் சேந்து பாடுங்கÕன்னு சொன்னாங்க. இறைவனோட அருளால, ரெண்டு குரலும் ஒரே குரலா ஒலிச்சுச்சு. பாராட்டு கிடைச்சுது.

ஒருநாள், எங்க உறவினர் வீட்டுக்குப் போனப்போ, டி.வி.கே.சாஸ்திரி சார் முன்னே சில பாடல்கள்  பாடினோம். ‘உங்க ரெண்டுபேரோட குரலும் ‘யூனிக்’கா இருக்கு. இந்த வருடம் டெல்லியில நடக்கிற ஸ்பிரிட் ஆஃப் யூனிட்டி கான்செர்ட்ல பாடுங்க’’ன்னு சொன்னார். உண்மையிலேயே நம்ப முடியலே. அது அவ்வளவு பெரிய கான்செர்ட். சின்சியரா ஒர்க் பண்ணி அங்கே போய் பாடினோம். அது நேஷனல் சேனல்ல ஒளிபரப்பாச்சு. அதுதான் மிகப்பெரிய பிரேக். அதுக்குப்பிறகு, நிறைய கான்செர்ட். இதுவரைக்கும் 2 ஆயிரத்துக்கும் மேல கச்சேரிகள் பாடிட்டோம்... என்று அழகாக சிரிக்கிறார் ஹரிப்ரியா.



‘‘எல்லாத் துறைக்குமே நேர நிர்வாகம் ரொம்ப முக்கியம். இல்லத்தரசிகளுக்கும் அவசியம். வேலைக்குப் போகாதவங்களை சும்மா இருக்காங்கன்னு சொல்றது தவறு. அவங்கதான் மத்தவங்களை விட கூடுதலா உழைக்கிறாங்க. கணவருக்காக, குழந்தைகளுக்காக, மாமனார், மாமியாருக்காகன்னு நாலைந்து ஆட்களோட வேலையை அவங்க மட்டுமே செய்றாங்க. ஆனா, அவங்களுக்கான வாழ்க்கையை இழந்திடுறாங்க” என்கிறார் சண்முகப்ரியா.

“எங்க அனுபவத்துல இருந்து சொல்றோம்.. எல்லா வேலையையும் ஒரே நேரத்துல இழுத்துப் போட்டுக்கிட்டு செய்றதைவிட ஒரு வேலையை ஈடுபாட்டோட செஞ்சா, சீக்கிரமே முடிச்சிட முடியும். இன்னும் இன்னும்னு தேக்கி வச்சு சுமக்காம, அப்பப்போ, ஆர்வத்தோட வேலைகளை செய்யப் பழகிக்கணும். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். பெண் மட்டுமே உழைக்கப் பிறந்த இயந்திரம் இல்லை. ஆண்களும் வேலைகளைப் பகிர்ந்துக்கணும்... என்று ஒரே குரலில் பேசுகிறார்கள் ப்ரியா சகோதரிகள்.
நேரத்தை திட்டமிட்டு நகரும் இவர்களின் இசைப் பயணம் காலத்தை வெல்லும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஞானவேல்


இசைக்குயில்களின் அன்றாடம்
அதிகாலை 5:00 மணி: எழுந்து ரிலாக்ஸ்
பண்ணினதும் நான் தொடுறது கிடாரைத்தான். முழுப்பொழுதுக்குமான உற்சாகம் கிடைச்சிரும்!
காலை 6:30 மணி: யோகா அல்லது வாக்கிங். எந்த ஊர்ல இருந்தாலும் இதைத் தவற விடுறதில்லை.
காலை 7:30 மணி: குளியல்... பிரார்த்தனை.
காலை 8:00 மணி: எனக்கும் அப்பாவுக்கும் சிம்ப்ளா ஒரு பிரேக்ஃபாஸ்ட்...
காலை 8:30 மணி: டைனிங் டேபிள் டைம்...
காலை 9:00 மணி: பிராக்டீஸ்...
காலை 10:30 மணி: மதிய சமையல். நான் எதைச் செஞ்சாலும் அப்பா சகிச்சுக்கிட்டு சாப்பிடுவார். அப்புறம் டிவி., மேகசின்ஸ்...
நன்பகல் 12:30: லஞ்ச்.
மதியம் 1:00 மணி: இசை தொடர்பான வெப்சைட்களை மேய்வேன். புதிய விஷயங்கள் இருந்தா அக்காவுக்குச் சொல்வேன்.
மதியம் 2:00 மணி: மாசத்துல பத்திருபது நாள் இரவு கச்சேரிகள் இருக்கும். அப்போ
திட்டமிட்ட தூக்கம் இருக்காது. அதனால  இப்போ மதிய தூக்கம்!
மாலை 5:00 - 6:00 மணி: என் வீடு திருவான்மியூர்ல... அக்கா, சாஸ்திரி நகர்ல. அங்கே போயிடுவேன். பசங்க கூட நேரம் போறதே தெரியாது!
மாலை 6:00 - இரவு 9:00 மணி: ரெண்டுபேரும் பிராக்டீஸ்.  
இரவு 9:00 - 10:00 மணி: திரும்பவும் வீடு. சின்னதா ஒரு டின்னர். அப்பாவோட பேசிக்கிட்டிருப்பேன்.
இரவு 11:00 மணி: எனக்கான இரவு... நொடிப்பொழுதுல மறுநாள் விடிஞ்சிடும்!