சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அந்த வீட்டை நெருங்கும்போதே தெய்வீக இசை கேட்கிறது. சலங்கை ஒலி, நட்டுவாங்க சத்தம், ‘தகதிமி தகதிமி’ ஜதி குரல்... இவை எல்லாம் காற்றில் மிதந்து நம்மை வரவேற்கின்றன. யாரும் கை காட்டாமலேயே பரதநாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் வீடு அதுதான் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
வெளிப்புறத் தோற்றமே எடுப்பாக இருக்கிறது. அதை வைத்தே ஒட்டுமொத்த வீட்டின் அழகை கணித்துவிடலாம். வாசலில் ‘நெடுநெடு’வென வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள். துணை நிற்கும் வாழைகள். காம்பவுண்டு தாண்டி எட்டிப் பார்க்கும் செம்பருத்தி. முகப்பிலேயே சின்னஞ்சிறு பித்தளை சிற்பங்கள், விதவிதமான பொம்மைகள், விநாயகர், சுடுமண் சிற்பங்கள், மூங்கில் நாற்காலி... இப்படி ஒவ்வொன்றும் அந்த வீட்டின் இன்டீரியர் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்குகின்றன.
‘‘இந்த வீடு கட்டி நாற்பது வருஷம் ஆச்சு. வாழப் போற வீடு எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு கனவு எல்லாருக்கும் இருக்கும் இல்லியா? என்னோட கனவு கொஞ்சம் பெருசு. மத்தவங்க மாதிரி மாடர்னா கட்டுறதுல எனக்கு விருப்பமில்லை. செட்டிநாட்டு ஸ்டைல்ல ஆன்டிக் பொருள்கள், மரச்சாமான்கள் நிறைஞ்சிருக்கும் வீடா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதோட வெளிப்பாடுதான் இந்த வீடு. என்னதான் நாட்டியம், கிளாஸ்னு வெளியில போனாலும், வீட்டுக்குள்ள வந்து தரையில உட்கார்ந்துட்டா எல்லா பிரச்னைகளும் தூசு மாதிரி ஆயிடும். என்னோட சந்தோஷம், துக்கம், ஏக்கம்னு எல்லாத்துக்கும் இந்த வீடுதானே சாட்சி? இப்பவும் உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் எனக்கு வீட்டு ஞாபகம்தான் மனசு முழுக்க நிரம்பியிருக்கும்...’’ என்கிறார் சித்ரா விஸ்வேஸ்வரன்.
வரவேற்பறை‘‘இங்க இருக்குற ஒவ்வொரு பொருளும் ஹைக்கூ கவிதை மாதிரி. ரொம்பச் சின்னதா இருந்தாலும் எல்லாருக்கும் பிடிக்கும்’’ என்று ஹாலுக்கு அழைத்துப் போனார் சித்ரா. ஐந்து நட்சத்திர ஹோட்டல் லாபியில் நிற்பது போன்ற உணர்வு நமக்கு. ‘‘மரவேலைப்பாடு உள்ள பொருள்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும். சோபா, சேர், சுவரை அலங்கரிக்கிற பொருட்கள், வண்ணம்னு ஒவ்வொரு பொருளையும் ரொம்ப கவனம் எடுத்துகிட்டு தேடித் தேடி வாங்கினேன். இந்த ஹாலுக்கு வர்றவங்களை வசீகரிக்கிறது இந்த டீப்பாய்தான். கோயில் தூண் வடிவத்துல இருக்கறதால ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினேன். எங்க வீட்டுல அந்தக் கால செட்டிநாட்டு கதவு ஒண்ணு இருந்தது. அதை வெட்டி நாலு துண்டாக்கி, ஹால்ல ஒரு அலங்காரப் பொருள் மாதிரி மாட்டிட்டேன். கதவில் இருக்கும் சின்னச் சின்ன மாடங்கள்ல கண்ணாடிகள் பதிச்சுட்டேன். பார்க்கறதுக்கு ரொம்ப ரம்மியமா இருக்கும். அதோட நடுப்பகுதியில தஞ்சாவூர் பாணி ஓவியத்தை வச்சிட்டேன். சேர், சோபாவுக்கெல்லாம் தனியா கவர் வாங்கி போடமாட்டேன். என்னோட சேலைகள், துப்பட்டாக்களை அழகா தைச்சு அதுக்குப் பயன்படுத்துவேன். பாந்தினி, பட்டு, டஸர்னு எல்லா துணிகள்லயும் ஸ்கிரீனை எங்க வீட்டுல பார்க்கலாம். எனக்கு சுவாமி சிலைகள் மேல தனி ஈர்ப்பு. வெளியே போறப்போ சின்னச் சின்ன பித்தளை சிலைகள், குத்து விளக்குகளைப் பார்த்தா வாங்கிட்டு வந்துடுவேன். வீட்டில் பொருத்தமான, அழகான இடத்தில் வச்சிடுவேன்...’’
படுக்கையறைஎளிமையாக இருந்தாலும் வசீகரம் நிறைந்ததாக இருக்கிறது சித்ராவின் படுக்கையறை. ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் பியானோ, அதன் மேல் கலையழகு சொட்டும் தம்புரா, தபேலா, ஆர்மோனிய இசைக் கருவி பொம்மைகள் போதும் பெட்ரூமின் வனப்பைச் சொல்ல. பக்கவாட்டுச் சுவரின் பெரும் பகுதியை அடைத்தது போல மிகப் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஃபர்னிச்சர்கள் மட்டுமே அறைக்குள். சுற்றிலும் மரச் சிற்பங்கள், சுவர்களிலுள்ள சுவாமி படங்கள், ஓவியங்கள் எல்லாமே தனிக்களையைத் தருகின்றன. மிதமான விளக்கொளியில் கொள்ளை அழகைத் தேக்கி வைத்திருக்கிறது படுக்கையறை.
சமையலறை சுவரும் அதில் பதிக்கப்பட்டிருக்கும் டைல்ஸும் வெண்மையாக இருந்தாலும் கப்போர்டுகளிலும், சுவர் ஓரங்களிலும் அடிக்கப்பட்டிருக்கும் பச்சையும் கருப்பும் கவனத்தை ஈர்க்கின்றன. பாத்திரங்கள், கரண்டிகள், மளிகைச் சாமான்கள் எல்லாம் மிக நேர்த்தியாக, அவற்றுக்கான இடங்களில் இருக்கின்றன. சமையலறைக்குள்ளும் கலைநயம் மிக்க பொருட்களை விதவிதமாக அடுக்கி வைத்திருக்கிறார் சித்ரா. ‘‘நான் அதிகமா நேரத்தை செலவு செய்யற இடம் கிச்சன். கண்ணாடி, பீங்கான், சில்வர்னு எல்லா வகைப் பாத்திரங்களும் இங்கே இருக்கு. வெளிநாடு போகும் போதெல்லாம் அந்தந்த ஊர்களுக்கேயான ஸ்பெஷல் பொருள்களை வாங்கிட்டு வந்துடுவேன். ஒரு தடவை இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போனபோது எனக்குப் பரிசா மசாலா பொருள்கள் அடங்கிய கிஃப்ட் குடுத்தாங்க. அது இன்னும் இந்த கிச்சன்ல இருக்கு. தனியா ஸ்டோர் ரூம் வைக்காம, கிச்சனுக்குள்ளேயே பெரிய ஷெல்ப் செஞ்சு, அதுக்குள்ளே பொருள்களை வச்சிருக்கேன். அம்மி இருக்கறதால மிக்ஸி பக்கம் போறதே இல்லை. அம்மி இருக்கும் இந்த சமையல் ரூம்ல தான் பிரட் டோஸ்டர், கிரில் டைப் அடுப்புகளும் இருக்கு. கிச்சன்ல பயன்படுத்துற முறத்தை அப்படியே சுவர்ல மாட்டி, அதுக்குள்ளே சாமி போட்டோவை வச்சு புது மாதிரியான பொருளா மாத்திட்டேன். வீட்டுக்கு வர்றவங்க இப்படி ஒரு ஐடியா இருக்கான்னு ஆச்சரியமா பார்த்துப்பாங்க!’’
சமையலறையை ஒட்டியிருக்கும் டைனிங் ஹாலில் ஒவ்வொரு அங்குலத்திலும் மனதைக் கொள்ளை கொள்ளும் வேலைப்பாடுகள். டைனிங் டேபிளின் மேலே மரப்பொம்மை வடிவ பேனாக்கள், மரப்பாச்சி பொம்மைகள், திபெத்திய பொம்மைகள், வெளிநாட்டு பீங்கான் பொருள்கள், டெரகோட்டா சிற்பங்கள்... இப்படி ஏதோ கண்காட்சிக் கூடத்துக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஜன்னல் தடுப்பு, மேசை விரிப்புக் கூட மரத்தால் செய்யப்பட்டிருக்கின்றன!
நாட்டிய அறை‘‘இந்த வீட்டுக்கு ஒரு முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கறது என் நாட்டிய அறைதான்’’ என நம்மை அழைத்துக்கொண்டு முதல் மாடிக்கு சென்றார் சித்ரா. படிக்கட்டு முழுக்க சின்னச் சின்ன பொம்மைகள், வித்தியாசமான புத்தர் சிலைகள், கைவேலைப்பாடுகள் என பார்க்கப் பார்க்க அசரடிக்கிறது வீடு. விசாலமாக, தெய்வீக மணத்தோடு நம்மை ஈர்க்கிறது நாட்டிய அறை.
‘‘இந்த வீட்ல பூஜையறைன்னு தனியா கிடையாது. இதுதான் என்னோட பூஜையறை. இங்கே அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திருந்தா மனசு அப்படியே இளகிடும். தினமும் நாட்டியம் கத்துக்க பிள்ளைகள் வர்றப்போ இந்த அறையே அழகாகிடும். பழங்கால வாத்தியக் கருவிகளை சேகரிச்சு வச்சிருக்கேன். நடனத்துக்குத் தேவையான கேசட்டுகளுக்கு தனி ஷெல்ப். என்னோட சலங்கை, பூஜைப் பொருள்கள் வைக்க தனி அறை எல்லாமே இங்கே இருக்கு. ஸ்டூடன்ட்ஸ் வந்தா டிரெஸ் மாத்த தனித்தனி அறைகளையும் வச்சிருக்கேன். இசையோடயும் நடனத்தோடயும் வாழற வாழ்க்கை தருகிற பூரிப்பைவிட உலகத்துல உன்னதமான விஷயம் வேற என்ன இருக்கு?’’ - நெகிழ்கிறார் சித்ரா.
நாட்டிய அறையில் வெட்டிவேர் விநாயகர், சிறிய குத்து விளக்கு, தோல்பாவை பொம்மைகள், கலம்காரி வேலைப்பாடுகள் நிரம்பிய விநாயகர் என ஒவ்வொரு பொருளும் ரசிக்க வைக்கிறது. நாட்டிய அறையை ஒட்டி ஓய்வெடுக்க தனியறை இருக்கிறது. அங்கேயும் ஊஞ்சல், பொம்மைகள், சிற்பங்கள் என்று கலைப் பொருட்கள் நம்மை வரவேற்கின்றன.
ரெஸ்ட் ரூம் ஜாக்குஸி, பாத்டப் போன்ற ஆடம்பரங்கள் இல்லையென்றாலும் எளிமையான காகிதப் பூக்களை அலங்காரத்துக்காக வைத்திருப்பது அழகு. அறையின் சுவர்களில் டைல்ஸ் கற்கள், தரையில் கருங்கற்கள் என சின்னச் சின்ன விஷயங்களிலும் வித்தியாசம் காட்டுகிறது சித்ரா விஸ்வேஸ்வரனின் இன்டீரியர்.
‘‘இந்த வீட்டில் இருப்பதே தனி சுகம். வீட்டைச் சுற்றி மரங்கள், தோட்டம், வீட்டுக்குள்ளேயே சிற்பங்கள், கலையம்சம் உள்ள பொருள்கள் இருக்கறதால வெளியே போறதுக்கு மனசே வராது. இதை நான் ஒரு கோயில் மாதிரிதான் பார்க்கறேன். வீடு முழுக்க மரச் சாமான்கள் இருக்கறதால ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா வேலைகளைச் செய்வேன். பந்தாவுக்காக பொருள்களை வாங்கிக் குவிக்கறதை விட நமக்குப் பிடிச்ச பொருள்களை வாங்கி அழகுபடுத்தறதுதான் நல்லது. அதனாலதான் என்னைவிட என்னோட வீடு எப்பவும் அழகா இருக்கு’’ என்று புன்னகையோடு சொல்கிறார் சித்ரா விஸ்வேஸ்வரன்.
- எஸ்.பி.வளர்மதி
படங்கள்: மாதவன், ஜெகன்