ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் 65 சதவிகிதம் பேர் பெண்கள்! கடைநிலை ஊழியர் முதல் மேலதிகாரிகள் வரை பெண்கள் இல்லாத துறையே இல்லை என்கிற அளவுக்கு பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிற அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மனம் குளிர்கிறது. இது ஆண் வேலை, அது பெண் வேலை என எந்த இடத்திலும் எந்தப் பாரபட்சமும் இல்லாத ஆரோக்கிய சூழல் நிலவுவது ஆச்சரியம்...
நோக்கமுள்ள நோக்கியாவின் ஆச்சரியங்கள் அது மட்டுமல்ல!
நோக்கியா செல்போன்களை ‘யூசர் ஃபிரண்ட்லி’ என்று சொல்வார்கள். நோக்கியா தொழிற்சாலையோ லேபர் ஃபிரண்ட்லி!
தன்னிடம் வேலைக்கு சேர்கிற ஊழியர்கள், ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கேட்காமல், வேறு நிறுவனத்துக்கும் செல்லாமல், காலாகாலத்துக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே நிறுவனங்களின் ஏகோபித்த விருப்பமாக இருக்கும். இந்த விஷயத்தில் நோக்கியா விதிவிலக்கு மட்டுமல்ல, அனைத்து நிறுவனங்களும் பின்பற்றத்தக்க முன் உதாரணமாகவும் திகழ்கிறது! எப்படி?
‘‘எத்தனையோ பேர் குடும்ப சூழலுக்காக படிப்பைப் பாதியோட விட்டுட்டு வேலைக்கு வந்துடறாங்க. அவங்க விருப்பப்படி டிகிரியோ, போஸ்ட் கிராஜுவேஷனோ என்ன வேணா படிக்க நாங்க அனுமதிக்கிறோம். அதுக்காக ‘எஜுகேஷன் அசிஸ்டென்ஸ் புரோகிராம்’ ஸ்கீம் வச்சிருக்கோம். அவங்க படிப்புக்கான செலவுல 80 சதவிகிதம் வரை கம்பெனி ஏத்துக்கும். படிச்சு முடிச்சதும், ‘இன்டர்னல் ஜாப் மார்க்கெட்டிங்’ திட்டம் மூலமா அடுத்தடுத்த பதவிகளுக்காக அவங்க அப்ளை பண்ணலாம். அது மட்டுமில்லாம, கம்பெனியே திறமைசாலிகளைக் கண்டுபிடிச்சு ஊக்கப்படுத்தற வகையில பிரமோஷன் கொடுக்கறதும் உண்டு.
அடுத்து ‘லைஃப் ஸ்கில்’னு ஒரு திட்டம். வெறுமனே வேலைக்கு வந்தோமா, போனோமான்னு அவங்க வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்ள சுருக்க விரும்பலை. ஒருவேளை பிற்காலத்துல இந்த வேலையில தொடர முடியாத நிலை அவங்களுக்கு வந்தா என்ன பண்றதுன்னு யோசிச்சப்பதான், அவங்களுக்குன்னு ஒரு சுயதொழிலைக் கத்துக்கொடுக்கிற திட்டம் வந்தது. புடவை, சுடிதார்னு உடைகள்ல பிரின்ட்டிங் பண்றது, பியூட்டிஷியன் கோர்ஸ், பேப்பர் பை தயாரிக்கிறது, நகை டிசைனிங்னு நிறைய பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து, நிறைய பேர் இன்னிக்குக் கத்துக்கிட்ட தொழிலை வச்சு பார்ட் டைமா சம்பாதிச்சிட்டிருக்காங்க.
‘உமன் ஆஃப் ஒர்த்’னு இன்னொரு திட்டம். கைவினைக்கலை கத்துக்கிட்டு, அவங்க தயாரிக்கிற பொருள்களை ஃபேக்டரியே நடத்தற கண்காட்சியில வச்சு விற்பனை பண்ணலாம். கம்பெனியே அவங்கக்கிட்டேருந்து காசு கொடுத்து கைவினைப் பொருள்களை வாங்கிக்கும். அதுல வரக்கூடிய வருமானம் அவங்களுக்கு பெரிய உதவியா இருக்கும். அதுல ஒரு தொகையை தன்னோட ஏரியாவுல உள்ள பெண்களோட முன்னேற்றத்துக்கும் நலன்களுக்கும் செலவு செய்ய ஒதுக்கறாங்க. இங்க வேலைக்கு வர்றவங்க வெறும் போன் தயாரிக்க மட்டும் கத்துக்கறதில்லை. வாழ்க்கைக் கலையைக் கத்துக்கறாங்கன்னுதான் சொல்லணும்...’’ என்கிறார் நோக்கியா நிறுவனத்தின் சென்னை ஃபேக்டரி இயக்குநர் பிரகாஷ் கட்டாமா.

இவர் சொல்வதெல்லாம் உண்மைதானா?
நம் சந்தேக வினாவுக்கு விடையாக கண்முன் நிற்கிறார்கள் நோக்கியா பெண்கள்.
5 வருடங்களுக்கு முன் மல்லிகாவின் படிப்பு வெறும் ப்ளஸ் டூதான். இன்று? வங்கி மேலாண்மையில் பட்டம். செக்யூரிட்டி வேலையில் இருந்த அப்பாவால், மல்லிகாவை மேலே படிக்க வைக்க வசதியில்லை. கல்லூரியில் கால் வைக்க வேண்டியவர், வேலை தேடி நோக்கியா தொழிற்சாலைக்குள் நுழைந்தார். வேலை பார்த்துக்கொண்டே, மேற்படிப்பையும் முடித்துவிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அக்காவின் கணவருக்கான மருத்துவச் செலவு, அவர்களது பிள்ளைகளின் படிப்புச் செலவு என எல்லாப் பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார். எம்.பி.ஏ. படிப்பதே இவரது ஒரே லட்சியமாம்.
வேலையில் சேர்வதற்கு முன், வெறும் ப்ளஸ் டூ மட்டுமே முடித்திருந்த சூடாமணி, இன்று பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸில் பட்டம் முடித்திருக்கிறார். வேலையில் சேர்ந்த பிறகு படிப்பைத் தொடர்ந்தது, விபத்துக்குள்ளான அப்பாவின் சிகிச்சை செலவை ஏற்றது, அக்காவுக்குக் கல்யாணம் முடித்து வைத்தது என இவரது சாதனைப் பட்டியல் பெரியது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக ப்ளஸ் டூவுக்கு மேல் தொடர முடியாத நிலை ப்ரியாவுக்கு. கல்லூரிக் கனவைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு வேலைக்கு வந்தவருக்கு, அங்கே காத்திருந்தது அதிசயம். மேற்படிப்பு படிக்க நோக்கியா நிறுவனமே ஊக்கம் மற்றும் உதவியுடன் காத்திருக்க, இன்று ப்ரியா பி.ஏ. பட்டதாரி.
இப்படி பலப்பல உதாரணப் பெண்கள்... அனைவரிடமும் உண்டு வெற்றிக் கதைகள்!
பெண்களின் கைவண்ணத்தில் செல்போன் உருவாகும் விதத்தைப் பார்ப்போமா?
வேலை தேடி நோக்கியா வளாகத்தினுள் கால் வைக்கிற பல பெண்களும், பள்ளி இறுதி மட்டுமே முடித்தவர்களாக இருக்கிறார்கள். படிப்பைத் தகுதியாக நிர்ணயம் செய்யாமல், செல்போன் தயாரிப்பின் அடிச்சுவட்டிலிருந்தே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டப் பயிற்சிக்குப் பிறகு ட்ரெயினி ஆபரேட்டராக பணியமர்த்தப் படுகிறார்கள். அதன் பிறகு ஆபரேட்டராக புரமோஷன். இது தவிர குவாலிட்டி கண்ட்ரோல், மேற்பார்வை, வரவேற்பு, கேன்ட்டீன், இத்யாதி இத்யாதி என திரும்பின பக்கமெல்லாம் பெண்களின் ஆதிக்கம்!
* பணி செய்யும் பெண்களின் கைகளுக்கு வெறும் தகடுகளாகவும் ஸ்க்ரூக்களாகவும் வந்து சேர்கிற உதிரி பாகங்கள், ஒவ்வொரு கட்டமாக உருமாறி, கடைசியில் நம் கைகளில் தவழும் அதிநவீன, ஹைடெக் செல்போன்களாக வடிவம் பெறுவதைப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது.
* போர்டு அசெம்பிளிங் என்பதுதான் முதல் நிலை. இதில் செல்போனுக்கு அடிப்படையான, நுணுக்கமான பகுதிகளை ‘சால்டரிங்’ முறையில் ஒட்டுகிறார்கள்.
றீஅடுத்து செல்போனின் மாடலுக்கேற்றபடி, அதில் சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் நடைபெறுகிறது. ஒவ்வொரு வரிசையில் ஒவ்வொரு மாடல் போனுக்கான சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் அணிவகுப்பு...
* அடுத்தகட்டமாக எல்.சி.டி. மற்றும் ஸ்க்ரூக்களை பொருத்துகிறார்கள்.
* அதற்கடுத்து கலர் மற்றும் மாடலை பொறுத்து, செல்போனின் முன், பின் பக்க கவர்கள் தயாராகி, பொருத்தப்படுகின்றன.
* ஒவ்வொரு போனுக்கும் எடை சரி பார்க்கப்படுகிறது. எடையில் துளி வித்தியாசம் இருந்தாலும், அந்த போன் நிராகரிக்கப்பட்டுவிடுமாம்!
* பேட்டரி, மேனுவல், டேட்டா கார்டு போன்றவை வைக்கப்பட்டு, போனுக்கான அட்டைப்பெட்டி தயாராகிறது.
* கடைசியாக ஷிப்பிங்... வெளிநாடுகளுக்கா, இந்தியாவுக்குள்ளேயா என்பதைப் பொறுத்து, சந்தைக்கு பயணப்பட தயாராகின்றன.
அடுத்த முறை புதிய மொபைல் வாங்கும் போது, அதன் மாடல், அதி நவீன வசதி, பட்ஜெட் எனப் பலதையும் பரிசீலிக்கிற நீங்கள், அதன் தயாரிப்புப் பின்னணியில் இருக்கும் வளையல் கரங்களை வாழ்த்தத் தவறாதீர்கள்!
- ஆர்.வி.
படங்கள்: பாஸ்கர்