வாழ்ந்து காட்டலாம் தோழி!





கல்லூரிப்படிப்பு முடித்ததும், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. என் டீம் லீடருக்கும் எனக்கும் ஒரே வயது. அவன் என் மீது அதிக அக்கறை காட்ட ஆரம்பித்தான். டீம் ஹெட்டின் செல்லமாக இருப்பதில் எனக்கும் பெருமை, சந்தோஷம்... திடீரென ஒரு நாள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். ஒரு வாரம் கழித்து சம்மதம் சொன்னேன். ஒரு கட்டத்தில் இருவரும் உடலளவிலும் நெருங்கினோம். ‘இதெல்லாம் தப்பில்லை. அதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோமே’ என்று சொல்லிச் சொல்லியே, அடிக்கடி என்னைப் பயன்படுத்திக் கொண்டான்.
நடக்கக்கூடாது நடந்தது. கர்ப்பமானேன். அந்தத் தகவலை அவனிடம்தான் முதலில் சொன்னேன். ‘கலைச்சிடு... இப்ப வேணாம்... ஒரு வருஷம் போகட்டும்’ என்றவனை நம்பி அபார்ஷன் செய்தேன்.
தனது தவறு அழிக்கப்பட்டுவிட்டது தெரிந்த அந்த நொடியிலிருந்து விலக ஆரம்பித்தான். என்னை வேறு கிளைக்கு மாற்றினான். சந்திப்பதையோ, போனில் பேசுவதையோ தவிர்த்தான். என்னை ஒரு விரோதியைப் போலவே நடத்தினான். கதறினேன்... காலைப் பிடித்துக் கெஞ்சினேன். ‘கல்யாணமெல்லாம் செய்ய முடியாது’ என்று ஷாக் கொடுத்தான். என்னைப் பற்றி, அலுவலகத்தில் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறான்.
என் நிம்மதியைக் கெடுத்தவன், இனி நிம்மதியாக இருக்கக் கூடாது. அவனைக் கொல்வதா? நான் தற்கொலை செய்து கொள்வதா? அவனைப் பழி வாங்க எனக்கு என்ன வழி?
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

இதுதான் சென்ற இதழ் ‘பெண் மனம்’ பகுதியின் சுருக்கம். இதற்கு வல்லுனரும் நம் தோழிகளும் என்ன ஆலோசனை சொல்கிறார்கள்?
தீர்வு சொல்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்...
உங்களுக்கு நிகழ்ந்தது மிகப்பெரிய கொடுமைதான். ‘நடந்ததை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு’ என அட்வைஸ் செய்வது சுலபம். ஆனால், அது முடியாத காரியம். உங்கள் வாழ்க்கையின் இந்தக் காதல் அத்தியாயம், மூளையில் பதிவு செய்யப்பட்டு, காலத்துக்கும் நினைவில் இருக்கும். நாளைக்கு உங்களுக்குத் திருமணமாகி, பேரன், பேத்தி எடுத்த பிறகுகூட, திடீரென ஒரு நாள் கடந்த காலம், ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போல நினைவை முட்டி மோதிக் கடக்கத்தான் செய்யும். நடந்ததை அப்படியே மறக்க முடியாதே தவிர, அந்தச் சம்பவங்கள் தொடர்பான உங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

அநீதி என்பது இந்த உலகத்தில் ஆங்காங்கே, அடிக்கடி, எல்லோருக்கும் நடந்து கொண்டிருக்கிற ஒன்றுதான். நீங்களும் விதிவிலக்கல்ல. கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்திருந்தால், இப்படியொரு அவலத்தை சந்திக்க வேண்டி வந்திருக்காது. ஆனாலும், இனி நடக்க வேண்டியதைப் பற்றி யோசிப்பதுதான் புத்திசாலித்தனம். மறுபடி வாழ்க்கையில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

உங்களை ஏமாற்றியவனைக் கொலை செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கையின் கசப்பெல்லாம் மாறி விடுமா? நீங்கள் ஜெயிலுக்கு போவீர்கள். உங்கள் குடும்பம் அவமானத்தில் தலை குனியும். அழிவுப்பாதையைப் பற்றி சிந்திக்காமல், ஆக்கப்பாதையைப் பற்றி யோசியுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் பாதுகாப்பு பற்றி யோசியுங்கள். எந்தச் சூழ் நிலையிலும் உங்களை விட்டுப் போகாத குணமுள்ள ஒருவரைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். ‘நான் நிச்சயம் ஜெயிப்பேன்... என் வாழ்க்கை நன்றாக இருக்கப் போகிறது’ என நம்புங்கள். இப்போதைக்கு உங்கள் மன அழுத்தம், ஆற்றாமை, கொலைவெறி போன்றவற்றைக் கட்டுப்படுத்த சில மருந்துகள் தேவை. மனநல மருத்துவரை சந்தித்துப் பேசுங்கள்.

‘ஆறின கஞ்சி, பழங்கஞ்சி’ என்று கேள்விப்பட்டதில்லையா? இன்னும் சில வருடங்கள் கழித்து உங்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் அதுவும் பழங்கஞ்சி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு.
‘நன்றாக வாழ்ந்து காட்டுவதை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் முறை இல்லை’ என்பார்கள். அப்படி வாழ்ந்து காட்டுங்கள்!