பள்ளிச் செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு





வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. முன்னோட்டமாக நீலம் புயல் வந்து சென்னையை குலைத்துப் போட்டுவிட்டு போய்விட்டது. ஓரிரு நாள் பெய்த மழைக்கே சென்னை சாலைகள் பளீரென பல்லிளித்து விட்டன. நீர் இறங்க முடியாத வகையில் எல்லா இடத்திலும் காங்கிரீட் காடுகள்... கண்படும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள். மழை ஓய்ந்து ஒரு மாதம் ஆன பிறகும் கூட பல பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. காலை, மாலை வேளைகளில் மோசமான சாலைகள் அனைத்தும் மஞ்சள் வாகனங்களால் நிரம்பி விடுகின்றன.

சென்னை முகப்பேரைச் சேர்ந்த குங்குமம் தோழி வாசகி கிருஷ்ணகுமாரி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
“என் இளைய மகன் 6வது படிக்கிறான். காலையில என் கணவர் பைக்ல கொண்டு போய் விட்டுவார். மாலை, நான் ஷேர் ஆட்டோவில அழைச்சுக்கிட்டு வருவேன். அதுல வர்றது மாதிரி ஒரு கொடுமை எதுவுமே இல்லை. சிசேரியன் செஞ்சுக்கிட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில வந்தா உயிரே போயிடும். அந்த மாதிரி ஓட்டுறாங்க. குழந்தைங்க ரொம்ப சிரமப்படுவாங்க. மழைக்காலத்துல எங்கே பள்ளம் இருக்கு, எங்கே மேடு இருக்குன்னே தெரியாது. நடந்து வர்றதும் சிக்கல். பல பிள்ளைகள் பள்ளத்துல விழுந்து, புத்தகங்கள்லாம் நனைஞ்சு, ரத்தக்காயத்தோட வீட்டுக்குப் போறதை பாத்திருக்கேன். பிளாட்பார்ம்ல பல இடங்கள்ல மேன்ஹோல் திறந்தே கிடக்கு. ஒருநாள் என் கண் முன்னாடியே ஒரு குழந்தை மேன்ஹோல்ல விழுந்துடுச்சு. எல்லாரும் சேர்ந்து தூக்கினோம். பல இடங்கள்ல மின்சாரப் பெட்டி திறந்தே கிடக்கு. நம்ம சாலைகள்ல பெரியவங்களே நடந்து போறது சிரமம். ஆட்டோவில அனுப்பலாம்னா அளவில்லாம பசங்களை ஏத்திக்கிட்டுப் போறாங்க... டிரைவருக்குப் பக்கத்துல ரெண்டு பக்கமும் ரெண்டு பேரை உக்கார வைக்கிறாங்க... பக்க கம்பியில கூட குழந்தைங்க தொங்கிக்கிட்டு இருக்காங்க. காலையில ஸ்கூலுக்குப் போற குழந்தைங்க சாயங்காலம் வீட்டுக்கு வந்தாதான் நிம்மதியா இருக்கு... என்கிறார் கிருஷ்ணகுமாரி.

மேலைநாடுகளில் வாகனங்களுக்கு தனியாகவும், சைக்கிளுக்கு தனியாகவும், நடப்பதற்கு தனியாகவும் சாலைகள் போடப்படுகின்றன. மரங்கள் அடர்ந்த, கரியமில வாயு படராத அந்தப் பாதையில் நடப்பதே இனிய அனுபவம். தமிழகத்திலோ நடப்பதற்கான பிளாட்பாரங்களையே வணிக மயமாக்கி விட்டார்கள். பிளாட்பாரங்களைக் குறிவைத்தே அமைக்கப்பட்ட மேன்ஹோல்கள் உரிய பராமரிப்பின்றி பல இடங்களில் திறந்தே கிடக்கின்றன. அல்லது, மூடி கழன்றோ, பெயர்ந்தோ கிடக்கிறது. சாதாரண நாட்களிலேயே தடுமாறி இதில் விழுந்து விடும் ஆபத்து உண்டு. மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பெரியவர்களுக்கே இந்த கதி என்றால் குழந்தைகளின் நிலை..? சில இடங்களில் சாலைக்கு நடுவிலேயே பாதாளச் சாக்கடை குழிகள் திறந்த நிலையில் கிடக்கின்றன. சற்று அசந்தால் உள்ளே போக வேண்டியதுதான். மழைக்காலங்களில் மரக்கிளைகளை ஒடித்து அதில் ஊன்றி வைத்திருக்கிறார்கள். அது என்ன வென்று பார்க்கிற ஆர்வத்திலேயே குழந்தைகள் அதன் அருகில் சென்று அதற்குள் விழுந்து விடுகின்றன.

பாதாளச் சாக்கடை, மின் பராமரிப்பு, டெலிபோன் கேபிள், தண்ணீர் குழாய், மழைநீர் வடிகால் என ஆளுக்கொரு காரணம் சொல்லி சாலைகளை தோண்டுகிறார்கள். அதே பொறுப்புணர்வோடு தோண்டிய சாலையை மூடுவதில்லை. இதுபோன்ற சாலைகள் உயிர்க்கொல்லிகளாக மாறிவிடுகின்றன. மழைக்காலத்தில் இன்னொரு பேரபாயமும் ஏற்படுவதுண்டு. பெருநகரங்களில் மின்கேபிள்கள் பூமிக்கு அடியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மழைநேரத்தில் அந்த கேபிள்கள் மேலே பெயர்ந்து வந்துவிடுகின்றன. வெளியே வரும் கேபிள், தண்ணீரில் மின்சாரத்தைப் பாய்ச்ச, கால் வைத்தவர்கள் கதி அதோகதிதான். அண்மையில் பெய்த மழையில் 3 பேர் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இறந்தது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு 490 பேர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்கள். சென்னையில் மட்டும் 216 பேர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 3,991 உயிர்களை மின்வயர்கள் பலி வாங்கியுள்ளன. சென்னையில், 1,400 உயிர்கள் பறிபோயுள்ளன. பல இடங்களில், அபாயகரமான நிலையில் மின்சாரப் பெட்டிகள் திறந்தே கிடக்கின்றன. நடைபாதையை ஒட்டியே இந்த மின்பெட்டிகள் இருப்பதால் சிறு குழந்தைகள் விவரமறியாமல் கைவைக்கும் ஆபத்து உண்டு. புறநகரங்களில் மின்கம்பங்கள் மீது கைக்கெட்டும் தூரத்தில் தெருவிளக்கு சுவிட்சுகளை பொருத்தியுள்ளார்கள். இவையும் எந்நேரமும் திறந்தே கிடப்பதால் சிறுவர்கள் விளையாட்டு நோக்கில் கை வைத்து விடுகிறார்கள்.



பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பேரிடர் சூழல் மேலாண்மை, முதலுதவி பயிற்சி களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன். குடும்பம், பள்ளி, சமூகம் என்று குழந்தைகளைச் சுற்றி மூன்று வட்டங்கள் இருக்கின்றன. சமூகத்தில் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குடும்பமும் பள்ளியுமே பயிற்றுவிக்க வேண்டும். மழை பெய்யும்போது மரங்களின் அருகில் நிற்கக்கூடாது. இடி இடிக்கும்போது, மின்கம்பங்களுக்கு பக்கத்தில் நிற்கக்கூடாது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். மழைக்காலத்தில் மரங்களின் கீழே நின்றால் கிளைகள் முறிந்து விழ வாய்ப்புண்டு. இடி, மின்னலெல்லாம் ஹைவோல்டேஜ் மின்சாரம். பல்லாயிரம் வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதனால் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு விளக்கமாக அறிவுறுத்த வேண்டும். சாலையில் நடந்து செல்வதற்கான விதிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். சிக்னல்களை அறிந்து நடப்பது, சாலையை கிராஸ் செய்யும் இடங்கள், மேன்ஹோல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். குறிப்பாக மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு வெகு அவசியம். வயர்கள் எதையும் தொடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டும். பெரும்பாலும் தண்ணீரில் நடப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். அவர்கள் மனதில் பாதுகாப்புணர்வை ஆழப் பதியச் செய்துவிட்டால், அவர்களே சரியாக நடந்து கொள்வார்கள்... என்கிறார் தேவநேயன்.

மழைக்காலத்தில் குழந்தைகளை வதைக்கும் இன்னொரு விபரீதம், கழிவுநீர். தமிழகத்தில் உணவுக்கழிவு முதல் மருத்துவக்கழிவு வரை எதையும் முறையாக பராமரிப்பதில்லை. மக்களும், ‘கழிவுகளை அகற்றுவது அரசின் வேலைதானே’ என்று பொறுப்பற்று இருக்கிறார்கள். மழைக்காலத்தில் இந்தக் கழிவுகள் எல்லாம் தண்ணீரில் கலந்து பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. போதிய வடிகால் வசதிகளும் இல்லாததால் சாலைகள் குட்டைகளாகி விடுகின்றன. இம்மழைநீரில் நடந்து செல்லும் குழந்தைகள் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சேற்றுப்புண் உள்ளிட்ட பல மழைக்கால நோய்கள் குழந்தைகளை பீடித்து வதைக்கின்றன. அதோடு, இக்கழிவுகள் குடிநீரிலும் கலந்து, டயரியா, காலரா தாக்குதலுக்கு குழந்தைகளை ஆளாக்குகிறது. இப்போது டெங்குவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அதனால், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.

உலக அளவில் இந்தியக் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக ஐநாவின் குழந்தைகளுக்கான உரிமை அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. போரானாலும் இயற்கைச் சீற்றமானாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். போதாக்குறைக்கு, நம் கனவுகள் அனைத்தையும் குழந்தைகள் மேல் திணித்து அவர்களின் பால்யத்தை சிதைத்து, பொறுப்புகளை சுமத்தி விடுகிறோம். அந்த சுமையைத் தாங்கமுடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் குழந்தைகள். குழந்தைகளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. வழக்கத்தை விட இப்போது குழந்தைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவர்களின் பாதுகாப்பு உங்கள் கண்காணிப்பில்தான் அடங்கியிருக்கிறது.
- வெ.நீலகண்டன்

பள்ளிக்கு அனுப்பும் முன்னே...

*  அருகாமைப் பள்ளியைத் தேர்வு செய்யுங்கள்.

* தூரப்பள்ளி என்றால் வாகனங்களை நன்கு கண்காணியுங்கள்.

*  பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் மின்சாரப் பெட்டிகள் திறந்திருந்தாலோ, மேன்ஹோல் மூடியில்லாமல் இருந்தாலோ, மின் வயர்கள் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட துறைக்கு தாமதிக்காமல் தகவல் தெரிவியுங்கள்.

*  சாலையோரம் இருக்கும் பள்ளிக்கு அருகில் வேகத்தடை இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமும், அப்பகுதி மக்கள் பிரதிநிதியிடமும் பேசுங்கள்.

*  குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் அவசியம் இல்லாத புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துக்கொள்ளலாம்.

*  குழந்தையின் அழுகைக்கு மதிப்பளியுங்கள். காது கொடுத்துக் கேளுங்கள்.

*  அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் பிள்ளைகளை ஏற்றி அனுப்பாதீர்கள்.