உயிருக்குள் உயிர் சுமப்பதைவிட ஒரு பெண்ணுக்கு வேறு பேரானந்தம் இருக்க முடியுமா?
அயர்லாந்தில் வசித்த இந்தியப் பெண்ணான டாக்டர் சவிதாவும் அப்படித்தான் பேரானந்தத்திலும் பெரிய எதிர்பார்ப்பிலும் நிமிடங்களைக் கடத்தியிருப்பார்.
அந்தக் கருவே அவருக்கு எமனாகப் போகிறது என பாவம், அவர் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை...
அயர்லாந்தில் கணவருடன் வசித்து வந்த மருத்துவர் சவிதா ஹலப்பனவர், 17 வார கர்ப்பிணி. திடீரென அவருக்குக் கடும் முதுகுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது தெரிந்திருக்கிறது. உடனே கருக்கலைப்பு செய்தாக வேண்டிய கட்டாயம். ஆனால், கருக்கலைப்பு செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. காரணம், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லையாம்! குழந்தை கருவில் உயிருடன் இருக்கும் போது கருக்கலைப்பு செய்யக்கூடாது என்கிறது அந்நாட்டுச் சட்டம். குழந்தையின் இதயத்துடிப்பு நின்ற பிறகே சவிதாவுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குள் ரத்தம் விஷமாகி, உடலெங்கும் பரவி, இறந்தே போனார் சவிதா...
‘‘நான்கு மாதக் கருவைக் காப்பாற்ற, எங்கள் 30 வயது மகளைக் கொன்று விட்டார்களே...’’ என்கிற சவிதாவின் பெற்றோரின் கதறல், உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
‘‘அநியாய சட்டம் உடனடியாக மாற்றப்பட்டாலாவது எங்கள் மகளின் அகால மரணத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்’’ என்பதே மகளை இழந்து தவிக்கிற அந்தப் பெற்றோரின்
கண்ணீர் கோரிக்கை.
சவிதாவை காவு வாங்கிய சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘பிறப்பதும் பெற்றெடுப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை’ என்பதையும் இங்கே வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், அதற்கு அவளது கணவனின் ஒப்புதல் கையெழுத்து அவசியம் இங்கே. சுமக்கவும், சுமையை இறக்கி வைக்கவும் அவளுக்குத் தனிப்பட்ட உரிமை கிடையாது!
‘‘எந்த மருத்துவருக்கும், உயிரைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும். அந்த அடிப்படை தர்மமே இந்த விஷயத்தில் காணாமல் போயிருக்கிறது.
கருக்கலைப்பு அந்த நாட்டில் சட்ட விரோதமானது என்பது தனிப்பிரச்னை. ஆனால், அந்த சட்டத்துக்குப் பயந்து கொண்டு, கண்ணுக்கு எதிரே ஒரு உயிர் சிறுகச் சிறுக சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்னிக்கவே முடியாத தவறு. ஒரு உயிரைக் காப்பாற்ற விடாமல் சட்டம் தடுத்தால், அதை உடனடியாக மாற்றுவதுதானே நியாயம்? சட்டத்துக்கு பயந்த மருத்துவர்களின் கோழைத்தனத்தால் நடந்த இந்தச் சம்பவம் என்னைப் பொறுத்த வரை ஒரு கொலைதான். ஒரு உயிரிழப்புடனாவது இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் சரி...’’ - ஆவேசமாகப் பேசுகிறார் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான வத்சலா.
‘குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்கிற முடிவு முழுக்க முழுக்க பெண்ணின் தனிப்பட்ட உரிமை’ என்பதையும் இங்கே அழுத்திச் சொல்கிறார் அவர்.
‘‘கருவைச் சுமந்து, பெற்றெடுப்பவள் பெண். கரு உருவாவதில் கணவருக்கும் பங்கிருக்கலாம். பொறுப்பிருக்கலாம். ‘குழந்தை வளர்ப்பில் கணவரும் பங்கெடுத்துக் கொள்ளத் தயாரா’ என்பதை மனைவி முதலிலேயே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமண பந்தமே நிலையற்றதாக இருக்கலாம். கணவருடனான உறவு சுமுகமாக இல்லாமல், பிரிவுதான் தீர்வாக இருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்கிற முடிவை அந்தப் பெண்தான் எடுக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நான் பார்த்த அவலத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ரொம்பவும் அன்யோன்யமான தம்பதிதான். மனைவி கருவுற்றாள். கருவுற்றிருக்கும் போது எக்ஸ்-ரே எடுக்கக் கூடாது என்று தெரியாமல், எடுத்திருக்கிறாள். மருத்துவத்துறையில் வேலையில் இருந்த கணவனுக்கு அது தெரிந்து, மனைவியிடம் சொல்லியிருக்கிறான். ‘குழந்தை ஊனமாகவோ, மனநிலை சரியில்லாமலோ பிறக்கலாம்’ என்கிற பயத்தில், மனைவி, டெஸ்ட் செய்து பார்க்க விரும்பினாள். கணவன் அதற்கு சம்மதிக்கவில்லை. கர்ப்ப காலம் முழுக்க அந்தப் பெண் ஒவ்வொரு நொடியும் அழுகையிலும் வேதனையிலும் துடித்தே, குழந்தையைப் பெற்றெடுத்தாள். நல்லவேளையாக, குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தது. ஒருவேளை குறையுடன் பிறந்திருந்தால்? காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டியவள் அந்தப் பெண்தானே? குழந்தை என்கிற விஷயத்தில் ஆணைவிட, பெண்ணுக்கே உரிமைகள் அதிகம் என்பதையும் இந்த நேரத்தில் நாம் இன்னொரு முறை நினைத்துப் பார்த்தால் நல்லது...’’ செப்டிசீமியா...
டாக்டர் சவிதாவின் மரணத்துக்கு இதைத் தான் காரணமாகச் சொல்கிறது மருத்துவம். அதென்ன செப்டிசீமியா? அதில் என்ன நடக்கும்? உயிர் பலி வாங்கும் அளவுக்கு அது அத்தனை ஆபத்தானதா?
பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜிடம் கேட்டோம்... ‘‘பொதுவா 7வது வாரத்துலதான் கருவோட இதயத்துடிப்பு டெவலப் ஆகும். இதயத்துடிப்பு இருந்தாதான் குழந்தையோட வளர்ச்சி நல்லபடியா இருக்கும். டாக்டர் சவிதாவோட விஷயத்துல, 7வது வாரத்துல குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்திருக்கலாம். அதுக்கப்புறம் அந்தக் கரு, கர்ப்பப்பைக்குள்ளேயே கசிஞ்சு, கலைஞ்சிருக்கலாம். அவங்க ஒண்ணும், ‘குழந்தை வேணாம்’னு அபார்ஷன் பண்ணச் சொல்லலையே... வயித்துக்குள்ளேயே குழந்தை இறந்து போனது தெரிஞ்சுதான் கேட்டிருக்காங்க. அந்தக் கருவை உடனடியா வெளியே எடுத்திருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமா உள்ள ஒரு கருவால இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பில்லை. அது கருப்பைக்குள்ளேயே இறந்து, இன்ஃபெக்ஷனாகி, அதன் விளைவா உண்டான நச்சு கலந்த ரசாயனங்கள், ரத்தத்துல கலந்து அந்தக் கர்ப்பிணியோட ஒவ்வொரு உடல் உறுப்பையும் அடுத்தடுத்து பாதிக்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்துல பாதிப்பு தீவிரமாகி, மரணமும் நிகழலாம். செப்டிசீமியா (septicemia) னு சொல்ற இதுதான் டாக்டர் சவிதா விஷயத்துலயும் நடந்திருக்கு.
இதையெல்லாம் வச்சுதான் கர்ப்பிணிகளுக்கு 7வது வாரம் ஸ்கேன் எடுக்கணும்னு டாக்டர்ஸ் அறிவுறுத்தறாங்க. அடுத்து 12வது வாரத்துல இன்னொரு ஸ்கேன். 7வது வாரத்துல தெரியற இதயத்துடிப்பு, 12வது வாரத்துல நின்னு போகலாம். ‘டவுன் சின்ட்ரோம்’னு சொல்லக்கூடிய மனவளர்ச்சிக் குறைபாடு இருக்கான்னு கண்டுபிடிக்கவும் இந்த ஸ்கேன் அவசியம். ஆனா, ஏன் இவ்ளோ ஸ்கேன் எடுக்கச் சொல்றாங்கன்னு மக்கள் வருத்தப்படறாங்க.
கருவுல உள்ள குழந்தையால அம்மாவோட உடல்நலத்துக்கு பாதிப்புன்னு தெரிஞ்சா, அந்தக் கர்ப்பத்தைத் தொடர விடறதுல அர்த்தமில்லை. 3வது மாசமே அதைக் கலைச்சிடலாம். கருக்கலைப்புன்னு சொன்னதும், ‘டி அன்ட் சி’தான் பண்ணணும்னு இல்லை. இப்ப உள்ள மருத்துவ முன்னேற்றத்துல மாத்திரைகள் மூலமாகவும், கர்ப்பப்பை வாயை சுலபமா திறக்க வச்சும் அந்தக் கருவை வெளியே எடுத்துட முடியும். கண்ணுக்குத் தெரியாத கருவைக் காப்பாத்தறதைவிட, கண்ணுக்கெதிரே உயிருக்குப் போராடற அந்தத் தாயோட உயிரைக் காப்பாத்தறதுதானே நியாயம்?’’ என்கிறார் மாலா ராஜ்.
- ஆர்.வைதேகி
படம்: கிருஷ்ணமூர்த்தி