‘‘கல்யாண வாழ்க்கையைப் பத்தின கனவுகள் எதுவும் எனக்கு இருந்ததில்லை. எனக்கு அப்பா கிடையாது. அம்மாவும் தங்கச்சியும் மட்டும்தான். அவங்களோட பாசத்தைத் தவிர வேற எதுவும் தெரியாது. ஒவ்வொரு முறை கல்யாணப் பேச்சு வரும்போதும், எனக்குள்ளே ஒரு கேள்வி எழும். ‘யாரோ முகம் தெரியாத, பழக்கமில்லாத ஒரு பொண்ணால, நம்மகிட்ட எப்படி அன்பைக் காட்ட முடியும்’னு தோணும். ‘அது சாத்தியமே இல்லை’ன்னு எனக்கு நானே பதிலும் சொல்லிக்குவேன். மனசு நிறைய அன்பிருந்தாலும், அதை எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியாது எனக்கு. யாருக்காவது பிறந்த நாள்னா, கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்னுகூட தெரியாது. அப்படிப்பட்ட என்னை யாராவது காதலிப்பாங்களா? ‘காதலிக்கவோ, காதலிக்கப்படவோ லாயக்கில்லாதவன்’கிறது என்னைப் பத்தின என்னோட சுய மதிப்பீடு.’’ சற்றும் எதிர்பார்க்காத டெரர் ஓபனிங்கோடு ‘என் மனைவி’க்காக தன் காதல் மனைவி ஃபாத்திமா பற்றி பேசத் தொடங்குகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. ‘நான்’ படத்துக்குப் பிறகு கதாநாயக நடிகர் என்பதும் இவரது உப அடையாளம்!
சரி... யாரந்த ஃபாத்திமா? நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்தான். சொல்லப்போனால் திருமதி விஜய் ஆண்டனி ஆவதற்கு முன்பே! சின்னத்திரை மூலம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஃபாத்திமா ஹனிடியூதான் அவர்!
அழகு தேவதையான ஃபாத்திமா ஹனிடியூவை, விஜய் ஆண்டனி எப்படிக் காதலித்தார்? கைப்பிடித்தார்?

‘‘நான் இசையமைச்ச முதல் படமான ‘சுக்ரன்’ ரிலீசாகியிருந்த நேரம்... எனக்கு ஒரு போன் வந்தது. அந்தப் பக்கம் ஒரு இனிமையான பெண் குரல். ‘சுக்ரன்’ பாட்டு கேட்டேன். பிரமாதமா பண்ணியிருந்தீங்கன்னு ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் பேசினாங்க. அந்தப் பேச்சு வாழ்நாள் முழுக்க தொடரப்போகுதுன்னு சத்தியமா அப்போ நினைக்கலை. இது நடந்தது ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு. ரெண்டு பேர் வீடுகளும் ஒரே ஏரியாங்கிறது தெரிஞ்சதும், அன்னிக்கு நைட் எட்டரை மணிக்கு நாங்க நேர்ல சந்திச்சோம். அவங்கதான் ஃபாத்திமா ஹனிடியூ. முதல் சந்திப்புலேயே பல வருஷம் பழகின மாதிரி ஒரு அன்யோன்யத்தை உணர்ந்தேன். எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்கம்மாவுக்கும் அவங்களைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. கையைப் பிடிச்சுக்கிட்டாங்க. காபி போட அம்மா கிச்சனுக்கு போக, ஃபாத்திமா ‘நானே போடறேன் ஆன்ட்டி’ன்னு ரொம்ப உரிமையா கூடவே போனாங்க.
அடுத்த நாள், நான், என் அம்மாகூட அவங்க வீட்டுக்கு டின்னருக்கு போனேன். எங்கம்மாவும் அவங்கம்மாவும் பேசிக்கிட்டிருந்தப்ப, ஃபாத்திமாவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்கிற விஷயத்தை அவங்கம்மா சொன்னாங்க. கிளம்பும் போது, ஃபாத்திமாகிட்ட போய், ‘உங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா உங்கம்மா சொன்னாங்க. அந்த லிஸ்ட்டுல என் பேரையும் சேர்த்துக்கோங்க’ன்னு சொன்னேன். என்னைப் பொறுத்த வரை அதுதான் புரபோசல். எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோன்னு பயந்தப்ப, அவங்களோட சிரிப்பு எனக்கு சம்மதம்னு சொல்லாம சொல்லுச்சு. அடுத்த நாள் எஸ்.எம்.எஸ்ல நிறைய பேசிக்கிட்டோம். நாலாவது நாள் அவங்க மறுபடி எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்போ என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட அவங்களை ‘என் ஒயிஃப்’னு அறிமுகமே படுத்திட்டேன். வெறும் நாலே நாள்ல எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. ‘அட... என் வாழ்க்கையிலேயும் காதல்... என்னை நேசிக்கவும் ஒருத்தி’ங்கிற அந்த ஃபீலிங் ரொம்ப வித்தியாசமா இருந்தது...’’
ஹைகூ கவிதையைவிட குட்டியாக இருக்கிறது விஜய் ஆண்டனியின் காதல் கதை... இன்ட்ரஸ்ட்டிங்... மேலே சொல்லுங்க ஸார்!
‘‘அந்த டைம்ல நான் இவ்ளோ பிரபலம் இல்லை. நிறைய படங்கள் பண்ணலை. என் பேரையோ, புகழையோ வச்சு அவங்க என்னை நேசிக்கலை. இவன் நாளைக்கு எப்படி வருவான், அதனால நம்ம வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும்னு எந்தக் கணக்கும் போடலை. ‘நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பரவாயில்லை. உன்னை நான் நேசிக்கிறேன்’னு என் வாழ்க்கைக்குள்ளே வந்தவங்க அவங்க. 2005 டிசம்பர் 30ம் தேதி கல்யாணம். ஒரு படத்துக்கு மியூசிக் போடுறப்ப, குறிப்பிட்ட சில பாடல்கள், அந்த வருஷம் சூப்பர் ஹிட் ஆகும்னு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை வரும். ஃபாத்திமாவை கைப் பிடிச்ச அந்தத் தருணம் அப்படித் தான் இருந்தது எனக்கு. ‘இவங்க தான் நமக்கேத்த லைஃப் பார்ட்னர். இனி எல்லாம் சுகம்’னு அந்தக் கணம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ் டக்காரன். மனசு சொன்னதைக் கேட்டேன். அது இன்னிக்கி வரைக்கும் தப்பாகலை...’’
சந்தோஷம்!
‘‘அன்பு, பாசம், காதல்னு வாழ்க்கையை ரசனையோட வாழக் கத்துக் கொடுத்தவங்க என் ஒயிஃப்தான். நமக்குப் பிடிச்ச ஒரு ஃபிரெண்ட், எப்போதும் நம்ம கூடவே... ஒண்ணா சாப்பிட்டு, ஒண்ணா தூங்கி நம்ம நிழல் போல இருந்தா எப்படி யிருக்கும்? ஃபாத்திமா எனக்கு அப்படித்தான். எங்கேயோ பிறந்து, வளர்ந்த யாரோ ஒரு மூணாவது மனுஷிக்கு நம்ம மேல எப்படி அன்பு வரும்னு யோசிச்ச எனக்கு, அந்த அன்பை திகட்டத் திகட்ட காட்டி, திக்கு முக்காட வச்சவங்க என் ஒயிஃப். தினம் கண்ணாடி பார்க்கறோம். அதுல நம்ம முகமும் உருவமும் மட்டும்தான் தெரியுது. நமக்குள்ள இருக்கிற ஒரு ஆளுமையை, நமக்கே தெரியாத அந்த இன்னொரு முகத்தைப் பார்க்கவும் உணரவும் வாழ்க்கையில ஒரு கம்பேனியன் அவசியம் வேணும். என்னை எனக்கே அறிமுகப்படுத்தின அந்த அற்புத மனுஷி என் ஒயிஃப்.’’
விஜய் ஆண்டனியிடமிருந்து வந்தது பேட்டிக்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகளாகத் தோன்றவில்லை. தன் மனைவி பற்றி விவரிக்கும்போது அவரது கண்களில் தெரிவது சத்தியமான உண்மைகள். ‘‘ஆணோட வெற்றிக்குப் பின்னால ஒரு பெண் இருப்பாள்னு சொல்றது என் விஷயத்துல நூத்துக்கு இருநூறு சதவிகித நிஜம். என் மனைவிக்குப் பெரிய இசைப் பின்னணியோ, ஞானமோ கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, கல்யாணத்துக்குப் பிறகும் சரி, என்னோட பாடல்கள் எதையும் நான் அவங்களுக்குப் போட்டுக் காட்டி, அபிப்ராயம் கேட்டதில்லை. என்னைப் பொறுத்த வரை தொழில் வேறு. குடும்பம் வேறு. அதை அவங்க ரொம்பத் தெளிவா புரிஞ்சுக்கிட்டதாலதான், என்னால இத்தனை தூரம் வர முடிஞ்சது.

நான் ஒரு டெக்னீஷியன். சரியான நேரத்துல மியூசிக் கொடுக்க வேண்டியது என் கடமைன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். என் வேலையில உள்ள அழுத்தங்கள், சுமைகள்னு எல்லாம் புரிஞ்சவங்க. சராசரி கணவன் மாதிரி என்னால அவங்களுக்காக நேரம் ஒதுக்க முடியாது. சொன்னா கொஞ்சம் காமெடியா இருக்கும். கல்யாணமாகி இத்தனை வருஷங்களாகியும், இன்னும் நாங்க ஹனிமூன் கூட போகலை. அதுக்காக ஒருநாள்கூட என்கிட்ட சண்டை போட்டதில்லை அவங்க. குடும்ப விஷயங்கள் எதுவுமே என்னை பாதிக்காத அளவுக்கு அத்தனை அழகா வழிநடத்துவாங்க. என் வேலையில எந்த டென்ஷனும் வந்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பாங்க. நான் தூங்கறேன்னா, அந்த இடத்தை அவ்வளவு அமைதியா வச்சிருப்பாங்க. சுருக்கமா சொன்னா, என்னையும் சேர்த்து அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. ஒரு அம்மா, தன் குழந்தையை எப்படியெல்லாம் செல்லமா, அன்பா பார்த்துப்பாங்களோ, அதே மாதிரி என்னையும் கவனிச்சுப்பாங்க.” மனைவியாய் தாயாகப் பார்ப்பது மிகப்பெரிய விஷயம். அப்படிப் பார்க்கும் கணவன் அமைவது அதைவிட மிகப்பெரிய வரம். சந்தேகமில்லை... ஃபாத்திமா ஹனிடியூ வரம் பெற்ற மனைவி!
சரி... இசையமைப்பாளரான இவர் நடிகர் அவதாரம் எடுத்தபோது திருமதி விஜய் ஆண்டனியின் ரியாக்ஷன் என்ன?
‘‘நடிக்கப் போறேங்கிற என் எண்ணத்தைச் சொன்னதும் முதல்ல ரொம்பத் தயங்கினாங்க. நடிப்புங்கிறது சாதாரண விஷயமா, அது அவசியமான்னு நிறைய கேள்வி கேட்டாங்க. ‘இசைங்கிறது கடவுள் கொடுத்த வரம். அது எல்லாருக்கும் கிடைக்காது’ங்கிறது அவங்க எண்ணம். அதுவும் அப்ப நான் பயங்கர பீக்ல இருந்த டைம்... நடிப்பு தேவையான்னு ரொம்ப யோசிச்சாங்க. ஆனா, எனக்கு அந்த விஷயத்துல மறுபரிசீலனையே இல்லை. காலைலேருந்து, ராத்திரி வரைக்கும் நடிப்புக்கான விஷயங்கள்ல பிஸியா இருப்பேன். ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு என் மியூசிக் வேலைகளைப் பார்ப்பேன்.
கொஞ்ச நாள் இதையெல்லாம் கவனிச்சிட்டிருந்த என் ஒயிஃப், மனசு மாறினாங்க. நடிப்பு வேணாம்னு சொன்ன அவங்கதான், எனக்காக பார்த்துப் பார்த்து டயட் சாப்பாடு சமைச்சுக் கொடுக்கிறதுலேருந்து, என் பட வேலைகளைப் பார்க்கிறது வரை எல்லா பொறுப்புகளையும் விரும்பி ஏத்துக்கிட்டாங்க. ‘நான்’ பட ரிலீஸ் டைம்ல, ராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஏரியாவா நேர்ல போய் பார்த்து, போஸ்டரெல்லாம் சரியா ஒட்டியிருக்காங்களான்னு செக் பண்ணிட்டு, விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வருவாங்க. அவங்களோட அந்த அர்ப்பணிப்பும், என் மேல உள்ள அக்கறையும் பல முறை என்னை நெகிழ வச்சிருக்கு. இப்ப என் படங்களுக்கு ஒரு புரொடியூசரா ஒர்க் பண்ற அளவுக்கு அவங்களுக்கு என் மேல நம்பிக்கை வந்திருக்கு. இன்னிக்கு நான் சோர்ந்து போய் உட்கார்ந்தாகூட, ‘உங்களால முடியும்...’னு சொல்லி, என்னை என்கரேஜ் பண்றதே அவங்கதான். நடிக்கிறதோட என் வேலை முடிஞ்சுடும். பூஜையில தொடங்கி, படம் தியேட்டருக்கு வர்ற வரைக்குமான அத்தனை வேலைகளும் அவங்க பொறுப்புதான்!’’
‘நான்’ படத்தின் வெற்றிக்காக அவரது மனைவி பட்ட கஷ்டங்களை விவரிக்கும்போது நெகிழ்ச்சியில் விஜய் ஆண்டனியின் கண்கள் கலங்குகின்றன.
‘‘எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்தவங்க. கல்யாணத்துக்குப் பிறகு ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்றாங்க. வெளிநாடுகள்ல மியூசிக் ஷோ பண்றது, பிரபல நடிகர், நடிகைகளை வச்சு ஷோ பண்றதுன்னு மேடம், என்னைவிட பிஸி. ஆனாலும், அவங்களோட வேலையோ, பிஸியான பொழுதுகளோ என்னையோ, குழந்தையையோ, எங்க கூடவே இருக்கிற என் அம்மா, அவங்கம்மாவையோ கொஞ்சமும் பாதிக்காதபடி பார்த்துப்பாங்க. அவங்க பார்வையில குடும்பம்தான் ஃபர்ஸ்ட்.
எந்தக் காலகட்டத்துலேயும், எந்த இடத்துலேயும் விஜய் ஆண்டனிங்கிற மியூசிக் டைரக்டரோட மனைவியா தன்னை தனிச்சுக் காட்டிக்கிறதையோ, விளம்பரப்படுத்திக்கிறதையோ விரும்ப மாட்டாங்க. காய்கறிக் கடைக்குப் போறதையும், மீன் மார்க்கெட் போறதையும் விரும்பற சாதாரண இல்லத் தரசியா வாழறதையே விரும்புவாங்க. அப்படியோர் எளிமை விரும்பி அவங்க.
‘வாழ்க்கையில உனக்கென்ன ஆசை’ன்னு கேட்டா, அவங்க எப்போதும் சொல்ற விஷயம் ஒண்ணே ஒண்ணுதான். ‘எப்போதும் உங்க பக்கத்துல நான் இருக்கணும். ஒரு சின்ன ரூம்... ஒரு கப் காபி... விடிய விடிய பேச்சு... அதுதான் சொர்க்கம்’பாங்க. (அடடா!) அவங்களை சந்தோஷப்படுத்த ஃபாரின் டூரோ, காஸ்ட்லியான கிஃப்ட்டோ தேவையே இல்லை. செலவே இல்லாத, சிம்பிளான அந்தக் கோரிக்கையை நிறைவேத்தறதுதான் எனக்கும் பெரிய சவால். வரப்போற வருஷத்துலேருந்து ஒரு சபதம் எடுக்கலாம்னு இருக்கேன். வாரத்துல ஒரு நாள் குடும்பத்துக்காக மட்டும்...’’
வெரிகுட்!
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி