மண்ணுக்காக... மக்களுக்காக...




இயற்கை வளத் தைச் சுரண்டுவ தற்காக மக்களை அழிக்கும் பெருமுதலாளிகள், அரசு இயந்திரங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார் தயாமணி பர்லா. இவர் இன்றும் இயற்கையோடு இணைந்து வாழும் ஜார்கண்ட் பழங்குடிப் பெண்மணி. தயாமணியின் வாழ்க்கையை சுருக்கமும் தெளிவுமாக Ballad of Resistance (எதிர்ப்பென்ற தொல்குடி பாடல்) என்ற பெயரில் ஆவணப் படமாக்கி இருக்கிறார் லீனா மணிமேகலை. படத்தின் காட்சிகளில் இருந்து அறியப்பட்ட தயாமணி அம்மாவின் கதை இது...

ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்களின் போராட்டங்களை மீடியா வேறு விதமாகச் சித்தரிப்பதை உணர்ந்தார் தயாமணி. வெளியில் இருந்து பார்ப்பவர்களால் தங்கள் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்பதால், தானே பத்திரிகையாளராகவும் மாறினார். மிட்டல் இரும்பு ஆலைக்காக 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். தொடர்ந்து, கோயல் கரோ அணை திட்டத்துக்கு எதிரான போராட்டம், நகரி கிராமத்து மக்களை அப்புறப்படுத்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பட்டியல் நீள்கிறது.


ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடு ஒன்றில் தயாமணி கணவருடன் வசிக்கிறார். தேநீர் கடையில்  மக்களைச் சந்தித்து சமூக விஷயங்களை விவாதிக்கிறார். காட்டு வேலை, வீட்டு வேலை, மக்களைத் திரட்டி கூட்டம் போடுதல், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வழக்கு என்று தயாமணி ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கிறார். 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.

“நான் முன்னேற்றங்களின் எதிரி அல்ல. இயற்கையைக் காப்பதும் பழங்குடிகளின் இடப்பெயர்வைத் தடுப்பதும்தான் என் நோக்கம். ‘பழங்குடிகள் முட்டாள்கள்; படிப்பறிவு இல்லாதவர்கள்’ என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. என் போராட்டம் எங்கள் மக்களுக்கான போராட்டம் மட்டுமில்லை... இந்திய நாட்டு மக்களுக்கான போராட்டம். போராட்ட உணர்வு எங்கள் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. காந்திக்கு முன்பே, எங்கள் மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்...” என்கிற தயாமணி, இப்போதும் சிறையில்தான் இருக்கிறார். பல முறை சிறை வாசம். நூற்றுக்கணக்கான வழக்குகள். அரசு மற்றும் ஆதிக்க சக்திகளின் கொலை மிரட்டல். எதுவும் தயாமணி அம்மாவின் போராட்டத்தைத் தடுக்காது!

படத்தைக் காண: www.ndtv.com/video/player/documentary24x7/balladofresistance/254090 ‘பெண்ணாடி’ (My Mirror is the Door) - லீனா மணிமேகலை இயக்கியுள்ள வீடியோ கவிதை இது. தமிழ்மொழியின் பொக்கிஷமான சங்க இலக்கியத்தில் பெண் கவிஞர்கள் மகத்தான பங்கு ஆற்றியுள்ளதை நவீனத்தோடு கலந்து காட்டுகிறது இப்படம். அவ்வையார் முதல் பாரி மகளிர் வரை பலரது கவிதைகளை, அதற்கான திணைகளில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார், கவிஞருமான லீனா. வாழும் மண்ணும் பெண்ணின் உடலும் ஒன்றென உணர வைக்கும் காட்சிகள்... மறைந்த ஈழப்பெண் கவிஞர் சிவரமணியின் கவிதையும், இலங்கை போர், இரோம் ஷர்மிளா போராட்டம் ஆகிய சமகால நிகழ்வுகளும், இப்படத்தை அழகியலைத் தாண்டிய சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது. (டிவிடி / திரைக்கதை நூலுக்கு: 9444272500)
  - விஜயா ஆனந்த்