என் ஜன்னல்




புத்தகம் : மண் வாசனை

எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல, ஒரு கல்வெட்டைப் போல, தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைகையில், எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்படுவதையெல்லாமும் தாண்டி, வருங்காலமும் வியந்து போற்றுவதாக உயர்ந்து விடும். ‘சொல்வனம்’ இணைய இதழில் தொடராக எழுதப்பட்டதன் தொகுப்பே ‘தாயார் சன்னதி’. என் பிறந்த மண்ணைப் பற்றிய பகிர்வு என்பது கூடுதல் ஈர்ப்பு என்பதை மறுப்பதற்கில்லை. இந்நூலை நேசிக்கவும் ரசிக்கவும் நெல்லை மண்ணில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியமேயில்லை. நெல்லையப்பரும் காந்திமதியும் எம்மண்ணுக்கு அப்பனும் அம்மையும் என்றால், அவரவர் ஊருக்கு அருள் பாலித்திருக்கும் அம்மை அப்பனை இவரது வரிகளில் தரிசிப்பீர்கள். நெல்லை வீதிகளில் ஆசிரியர் நடக்கும்போது, தியேட்டர்களில் படம் பார்க்கும்போது, தன் சமூகத்தின் வழக்கங்களைப் பகிரும்போது, சந்தித்த மக்களைக் கொண்டாடும்போது தன்னிச்சையாக உங்கள் நினைவுகளும் உங்கள் ஊரைச் சுற்றிவரும் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்திரவாதம் தர முடிகிறது. கட்டுரையில் நடமாடும் மாந்தர்கள் வேறு பெயர்களில், வேறு உருவங்களில் ஒவ்வொருவர் ஊரிலும் உலவியிருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் நேரில் பார்க்கிற உணர்வைத் தோற்றுவிக்கிற எழுத்து. ஹாஸ்யம் என்பது வெகு இயல்பாக எழுத்தோடு ஒன்றித் தொகுப்பு நெடுக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள். எப்போது நாம் அதில் காலை வைப்போமென்றே தெரியாது!

தொடரைத் தாங்கி நிற்கும் தூணாக வட்டார வழக்கு. மண்ணின் பழக்க வழக்கங்களையும் சிறப்பாகப் பதிந்திருக்கிறார் நூலெங்கிலும். குறிப்பாக இவர் பரிமாறி இருக்கும் ‘பந்தி’யைப் பற்றிச் சொன்னால் சுவைக்காது. வாசித்தாலே ருசிக்கும். ஓவியர் வள்ளிநாயகத்தின் தத்ரூபமான கோட்டோவியங்களும், காலஞ்சென்ற ஒளிப்படக் கலைஞரும் ஓவியருமான இசக்கியின் புகைப்படங்களும் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இளம் பிராயத்து வாழ்வின் நேர்மையான, முழுமையான பதிவாக அமைந்திருக்கும் ‘தாயார் சன்னதி’ மண் மணத்தோடு தாமிரபரணியின் பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து, நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. (ஆசிரியர்: சுகா. வெளியீடு: சொல்வனம் (solvanam.com). Rs.180) நூல் பெற: 94459 01234, 04428158171, 9940446650

இணையம் : என் மன வானில்...
‘ஒரு கனவு போல் மிதந்து செல்கிறது சிறகு; காலம் போல் அலைக்கழிக்கிறது காற்று; ஆங்காங்கே ஓய்ந்தாலும் காற்றோடு அலைந்து கொண்டே இருக்கிறது சிறகு’ என யதார்த்த வாழ்வை அழகாகச் சொல்லி விரிந்து நிற்கிறது, அமுதாவின் ‘என் வானம்’.

கணினித் துறையில் வேலையாக இருக்கும் பொறியியல் பட்டதாரியான இவரது வானின் இரு நிலவுகளாக மகள்கள் நந்தினி, யாழினி. தாய்மையின் பூரிப்புடன் அவர்களுடனான தருணங்களைக் ‘குழலினிது யாழினிது’ எனும் பகுப்பின் கீழ் பகிர்ந்து வருகிறார். அவர்களில் தன்னையே கண்டெடுக்கும் சந்தோஷத்தை உணர்த்துகிறார் நமக்கும் அற்புதமாக.
‘குழந்தைகளும் ஒரு கவளம் சோறும் கதைகளும்’ பதிவில்...
‘கோபமும் பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில், உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள்தானே?
ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும் குருவியும் அணிலும் பூனையும் நாயும் (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவும் இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது...’
பத்தி எழுத்துகளாக இவர் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்களும் சரி, வாழ்க்கையின் வலிகளையும் மனிதரின் மறுபக்கங்களையும் எளிய வரிகளில் சொல்லிக் கடந்து விடுகிற கவிதைகளும் சரி, வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.  http://nandhuyazh.blogspot.in

ராமலக்ஷ்மி
கவிஞர் / புகைப்படக்கலைஞர்

(tamilamudam.blogspot.com/ www.flickr.com/photos/ramalakshmi_rajan/)

உணர்வுகளின் உன்னதம்
குழந்தைகள் இந்த உலகை அழகாக்க வந்த நட்சத்திரங்கள். ஒவ்வொரு குழந்தையிடத்திலும் மிளிரும் தனித்திறமையைக் கவனிக்காது விடுகிறோம். அல்லது ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டுபிடிக்கத் தவறுகிறோம். போட்டிகள் நிறைந்த உலகில் வாழ்க்கையைப் பந்தயமாக்கி, அதில் ஓடவைக்க ஒன்றரை வயதிலிருந்தே குழந்தைகளைத் தயார் செய்கிற அவல நிலையில் பெற்றோரும், மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகிக் குறைகளைக் களைந்து அன்புடன் கையாளும் பொறுமையற்ற ஆசிரியர்களும், பரீட்சை முடிவுகளை நோக்கி மட்டுமே நகரும் நாட்டின் கல்வித்திட்டமும் மாற வேண்டியதன் அவசியத்தை உணர்வுபூர்வமாக உள்ளத்தை உலுக்கும் விதமாகச் சொல்லும் படம் ‘தாரே ஜமீன் பர்’.

நமது பள்ளிப்பருவ உணர்வுகளான பயம், தயக்கம், கோபம், சொல்லத் தெரியாத வருத்தம், ஏமாற்றம், இயலாமை அனைத்தையும் தட்டியெழுப்பி ஒருமுறை வாழவைத்து விடுகிறான் இஷானாக அற்புதமாக  நடித்திருக்கும் சிறுவன் தர்ஷீத். அவனது டிஸ்லெக்சியா குறைபாடு பற்றி அறியாமல், குறைவான மதிப்பெண்களைக் காரணம் காட்டி பள்ளி கண்டிக்க, பெற்றோர் அவனை விடுதிப்பள்ளியில் சேர்க்கின்றனர். தாயைப் பிரியும் அவன் வேதனையை வெளிப்படுத்துகிற காட்சி அத்தனை உருக்கம். தனித்து விடப்பட்ட உணர்வுடன் எவருடனும் எதிலும் ஒட்டாமல் இருக்கிறான் இஷான். ஓவிய ஆசிரியர் நிகும்ப் ஆக வருகிற அமீர்கான், சிறுவனின் போக்கைக் கவனித்து, பெற்றோரைச் சந்தித்துப் பேசி, குறையை விளக்குவதோடு தனிக்கவனத்துடன் கற்பிக்கிறார். அவனது ஓவியத்திறமையையும் உலகின் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். இதுபோன்ற மனிதாபிமானமிக்க அணுகுமுறையே வருங்காலப் பிரஜைகளின் மனங்களில் மனிதத்தை விதைக்கும்... தன்னம்பிக்கையை வளர்க்கும்.

ஆசிரியர் தீட்டிய ஓவியத்தில், தான் மகிழ்ச்சியாகச் சிரிப்பதைக் காணும்போது, தன்னையும் நேசிக்க ஒருவர் இருப்பதாக நெகிழ்ந்து கலங்கும் இடத்தில் தர்ஷீத், நம் மனதோடு நின்றுவிடுகிறான். தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு குழந்தையின் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்த அவசர உலகம் அதை நிறைவேற்றத் தவறு வதில்தான் மனச்சிக்கல்களுக்கும் அழுத்தங்களுக்கும் குழந்தைகள் ஆளாக நேர்கிறது. கலங்க வைக்கும் காட்சி அமைப்புகளுடனும், மனதை உருக வைக்கும் பாடல்களுடனும் மிக அழுத்தமாக பார்ப்பவர் மனதில் விதைத்திருக்கிற இப்படம் பெற்ற பல அங்கீகாரங்களில் முக்கியமானது 2008ல் வழங்கப்பட்ட தேசிய விருது. ஒரு மிகச் சிறந்த படத்தைத் தயாரித்துச் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் அமீர்கான், தன் முதல் இயக்கத்தில்!

இடம் : போவோமா ஊர்கோலம்!
உலகப்புகழ் வாய்ந்த ‘மைசூர் தசரா’, கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவும் கூட. பலமுறை மைசூர் சென்றிருந்தாலும், இந்த விஜய தசமி நாளில் சென்றதும் 402வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் யானைகளையும் கலைஞர்களையும் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து போனது.

பாரம்பரியம் மிக்க இவ்விழாவின் முக்கிய அம்சம் அரண்மனையில் ஆரம்பித்து மைசூர் நகரின் சாலைகளைச் சுற்றி வருகிற யானைகள் ஊர்வலம். யானைகள் வழிநடத்தக் கலைஞர்கள் ஆடிப்பாடிப் பின் தொடர, பொழுது சாயும் நேரத்தில் தீப்பந்த ஊர்வலத்துடன் நிறைவு பெறுகிறது விழா. அரண்மனை வளாகத்தில் மதியம் நந்தி பூஜை செய்து, தலைமை தாங்கி நின்ற யானை அர்ஜுனாவுக்கு மலர் தூவி, தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனை மக்கள் நல்வாழ்வுக்காக வழிபட்டு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். அங்கிருந்து கிளம்பி வந்த ஊர்வலத்தைக் கலைவிழா நடக்கிற பன்னி மண்டபத்துக்கு வெகு அருகாமையிலிருந்து பார்த்து ரசிக்க முடிந்தது. ஜோடி ஜோடியாக அலங்கரிக்கப்பட்டு முன் நடத்தி வரப்பட்ட யானைகள் அழகாகக் காட்சி தந்தன. பூஜை, பாராம்பரியம், மக்கள் நம்பிக்கை என எத்தனைதான் சொல்லப்பட்டாலும், ‘வனவிலங்குகளுக்கு எத்தனை அவஸ்தை’ என்கிற குறுகுறுப்புடனேயேதான் காண வேண்டியிருந்தது. தொடர்ந்து நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் செல்ல நடுநடுவே புராணங்களைச் சித்தரிக்கும் சிலைகளுடனான வாகனங்களும் இடம் பெற்றிருந்தன.