ப்ரியங்களுடன்.......



முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான  முயற்சி! தோழி வழங்கியுள்ள `மாத்தியோசி ஸ்பெஷல்’ இதழில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளுமே வெகு அருமை!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

கணவரின் சித்ரவதைகளிலிருந்து விடுபட்டு, 40 வயதில் வழக்கறிஞராகி, வன்கொடுமை, பாலியல் தொந்தரவு போன்றவற்றிற்காக வழக்காடி வெற்றி பெற்ற பிலாவியா அக்னஸ் முன்னேறும் பெண்களுக்கு வழிகாட்டி என்பதில் சந்தேகமேயில்லை.
- ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91 (மின்னஞ்சலில்...).

ஏ.ஆர்.சி. கீதாசுப்ரமணியம் வழங்கியிருந்த தங்கம் குறித்த கட்டுரையில் நல்ல பல சுவையான தகவல்களை திரட்டித் தந்திருந்த விதம், தங்கத்தின் மீதுள்ள மோகத்தினை அதிகரிக்கச் செய்வதாக இருந்தது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மரவள்ளிக்கிழங்கு பற்றிய தகவல்கள் எல்லாமே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - கே.ராஜேஸ்வரி, மணப்பாறை. சோர்ந்து போயிருந்த  எனக்கு, `களம் இறங்கினால் கவலைகள் மறையும்’ கீர்த்தனாவின் வெற்றிக் கதையைப் படித்ததும், புதியதோர் உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.

நடிகை என்ற அடையாளத்தைத் தள்ளி வைத்துவிட்டவர். அப்போதே க்விஸ் புரோகிராம்களில் ஜொலித்தவர் கஸ்தூரி. இந்தப் புகைப்படத்தில் ஒப்பனையில்லாத சாதாரணமான தாய்மையில் அசாதாரணமாக அல்லவா ஒளிர்கிறார்!.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.

நேரில் பேசும் தெய்வம் அம்மா எனக் கருதும் எழுத்தாளர் மருதனின் வாழ்வியல் சுவையான, உணர்வுப்பூர்வமான நவீனத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தியது எங்களுக்கு.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.



மண்ணே இல்லாமல் மலரும் செடிகளா? பிளாட்டில் வாழ்ந்துகொண்டு செடி வைக்க முடியவில்லையே என்று வருந்துபவர்களுக்கு அரிய ஆலோசனை தந்துள்ளார் தோட்டக்கலை நிபுணர் சூர்ய நர்மதா. மோர்மிளகா.காம் தாம்பரத்திற்கு எப்போது வருமோ என்று என்னைப் போன்ற பல வயதான தம்பதியர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- திருமதி.சுகந்தாராம், சென்னை-59.

கொசுவை விரட்ட, போர்வை மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் சகோதரிகள் கஸ்தூரி மற்றும் ஷ்ரேயா. பயனுள்ள கண்டுபிடிப்பு.
- சி.கார்த்திகேயன், சாத்தூர் மற்றும் ஆர்.புவனா, நாகப்பட்டினம்.

`மாத்தியோசி’ ஸ்பெஷலில் இடம் பெற்றிருந்த டாட்டூ குறித்த 10 விஷயங்களும் சுவாரஸ்யமாகவும் முழுமையாகவும் இருந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18 மற்றும் ஏழாயிரம் பண்ணை, எம்.செல்லையா, சாத்தூர்.

கொட்டாங்குச்சியில் தோட்டமா? மாத்தி யோசிச்சு, செயல்படுத்தி, வெற்றிகண்ட மாலினி கல்யாணத்துக்கு சூப்பர் சபாஷ்!
- தி.பார்வதி, திருச்சி-7 மற்றும் கே.செல்லப்பா, வாழப்பாடி (மின்னஞ்சலில்...).

தடைகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் `ஆயிஷா நூரி’ன் லட்சியம் ஈடேற வாழ்த்துகள்! வனம்தான் ஆதாரம், அதற்கும் போராட்டம். அதுவும் 29 ஆண்டுகளாகப் போராடி வருகிற `லீலாவதி’ உதாரணப் பெண்மணிதான்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி.

பெண்களது முன்னேற்றம் என்பது தங்களது ஆளுமைத் திறனையும் வெளிக்கொண்டு வருவதுதான் என்பதை  தனது வளர்ச்சியின் மூலம் காட்டியிருக்கிறார் கர்லின் மேரி. அவரது அனுபவம், படித்தவுடன் வெளிநாட்டிற்கு செல்லத் துடிப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசிய பாடமாகும்.
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில் (மின்னஞ்சலில்...).