போர் விமானங்களிலும் பெண்கள்!



விமானப்படை போர் விமானங்களை இயக்க இப்போது பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும்,  ‘முன்பு விமானப்படையில் பணிபுரிவதே எங்களுக்கு போராட்டமாக இருந்தது’ என்கின்றனர் ஓய்வு பெற்ற சக பெண் விமானிகளான பமீலா பெரைராவும் அர்ச்சனா கபூரும்!

“போராட்டமாக இருந்த காலகட்டம்் அது. 20 ஆண்டுகளுக்கு முன் விமானப் படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 1994ம் ஆண்டு விமானப்படையில் முதன்முதலில் போரில் ஈடுபடாத விமானங்களை இயக்கும் பணிக்காக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். முதல் பேட்சில் பணிபுரிந்த நான் விங் கமாண்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்று, இப்போது போயிங் 737 விமானியாக பணிபுரிந்து வருகிறேன்.

ஆணாதிக்கம் நிறைந்த விமானப்படையில் விமானிகளாக பெண்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை. முதல் குழுவாக பணியில் சேர்ந்த நாங்கள் ஒவ்வொரு போர் விமானத்திலும், ஒவ்வொரு அதிகாரியிடத்திலும் எங்களை நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்திய விமானப்படையின் ஆண் அதிகாரிகள் எங்கள் திறமைகளை ஏற்றுக் கொள்ளும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது” என்கிறார் பெரைரா.



பெரைராவோடு பணிபுரிந்த அர்ச்சனா கபூர், “எங்கள் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் விமானத்தில் என்னுடன் பயணிப்பதையே தவிர்த்து வந்தார். நேரிடையாக என்னிடம் தனது மறுப்பை தெரிவிக்கா விட்டாலும், குறிப்பிட்ட அந்த அதிகாரி எங்கள் குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் என்றால், அன்று எனக்கு விமானம் ஓட்ட அனுமதி கிடைக்காது. பின்னர் ஒரு நாள், அதே அதிகாரி பயிற்சியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டபோது என்னை பாராட்டியது நினைவிருக்கிறது. 2017 ஜூன் மாதம் முதல் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். விமானப்படையின் இந்த முடிவு 20 ஆண்டுகளுக்குப் பின் மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. என்னால் அடைய முடியாத என் கனவை என்னுடைய மகள் போர் விமானியாக இணைந்து நிறைவு செய்யப் போகிறாள். இது நீண்டநாள் போராட்டத்துக்குப் பின் கிடைத்த வெற்றி” என்கிறார்.

இன்றும் ‘ஆரம்பத்தில் MIG மற்றும் ஜாக்குவார் விமானங்களை மட்டுமே பெண்கள் இயக்கக்கூடும் என்றும், வான் பாதுகாப்பில் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் பெண்களை ஈடுபடுத்துவது சரியில்லை’ என்பது போன்ற எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இதுபற்றி விமானப்படையின் முதன்மை அதிகாரியான மார்ஷல்ரஹா, “முதல் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பெண் விமானிகளுக்கு போர் விமானங்களுக்கான பயிற்சிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இவர்களின் பங்கு, சக ஆண்களுக்கு இணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார். “போரின் முனையில் உள்ள ஒரு பெண் போராளியால் எந்த சவாலையும் சந்திக்க முடியும்” என்று குரல் எழுப்புகின்றனர் முன்னாள் விமானப்படை விமானிகளான பமீலா பெரைராவும் அர்ச்சனா கபூரும்!

- உஷா