பொற்கோயில்



பொற்கூரை பொற்சிலை
ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம்

அமிர்தசரஸ் பொற்கோயில்

உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான சீக்கிய மக்களின் புனிதத்தலம் ஹர் மந்திர் சாஹிப் (பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ளது). உலகப் புகழ்பெற்ற இந்தத் தங்கக் கோயில் தினமும் ஒரு லட்சம் நபர்களால் வழிபடப்படுகிறது. இந்தப் பெருமை, ஸ்ரீகுரு அர்ஜன் என்பவரால் சீக்கிய புனித நூலான ஆதிகிரந்தம் குருத்வராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தங்கக் கோயில் அமைந்துள்ள அந்த இடம் மன்னர் அக்பரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டு, 1574ல் ஆரம்பிக்கப்பட்டு, 1601ல் முடிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் 100 கிலோ கிராம் தங்கத்தில் தாமரை மலரை உட்பக்கமாக திருப்பினாற்போலத் தோற்றமளிக்கும் இந்தத் தங்க கோபுரம் முழுவதுமாக தங்கத்தினால் கூரை வேயப்பட்டுள்ளது. தினமும் 35 ஆயிரம் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிற இந்தக் கோயிலின் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? உலகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் அல்லது தலங்களுக்கு சான்று அளித்துப் பராமரிக்கிற யுனெஸ்கோ அமைப்பு, இதற்கும் அந்த அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதுதான்!

யுனெஸ்கோ நிறுவனம் சான்று கொடுக்கும் எந்த இடத்தையும் உரிமை கொண்டாடுவதில்லை. நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அதன் அதிகாரத்தில் பங்கேற்பதில்லை. கவுரவமான ஒரு அத்தாட்சியை மட்டுமே கொடுக்கிறது. அந்த இடத்தின் முக்கியத்துவம், மனித இனத்துக்கான வரையரையில்லாத மதிப்பு போன்ற 10 கட்டளைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அது கவுரவமான அந்த அத்தாட்சியைக் கொடுக்கிறது. ஆனால், உலகப் பாரம்பரிய இடங்கள், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்று அது எந்த நாட்டில் இருந்தாலும் அப்படித்தான் என்கிற விதியை வைத்திருப்பதால், சீக்கிய மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘யுனெஸ்கோ தங்கக் கோயிலை பாரம்பரியச் சின்னமாகக் கருத வேண்டாம், எந்தத் தலையீடும் வேண்டாம். பராமரிப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. சுயமாகவே தாங்களே அதைப் பார்த்துக் கொள்வோம்’ எனப் போராடி வருகின்றனர்.

பெல்ஜியத்தில் இருந்து ஒரு சீக்கிய மாணவர், ‘இந்தத் தங்கக் கோயிலை யுனெஸ்கோவின் கீழ் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கூடாது’  என்று மனு தாக்கல் செய்திருக்கிறார். ஷிரோமணி குருத்வாரா பர்வந்த கமிட்டியும் (SGBC) இதற்கு உடன்பட்டு தங்களுடைய இந்தத் தங்கக் கோயில் சம்பந்தமாக வேறு மக்களுக்கோ, நாடுகளுக்கோ எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என நினைக்கிறது. என்னதான் சீக்கிய பாரம்பரிய மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், எந்த சாதி, மத மக்களும் உள்ளே சென்று அமைதியாக வழிபடுவதற்கு அவர்கள் முழு மனதுடன் ஒத்துழைக்கிறார்கள். 100 கிலோகிராம் தங்கத்தினால் பொற்கூரை வேயப்பட்ட அந்தத் தங்கக் கோயில், சீக்கிய மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது.



ஸ்ரீபுரம் தங்கக் கோயில்

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கொடி என்ற ஊரில் ஸ்ரீநாராயணியாகிய மகாலட்சுமிக்குக் கட்டப்பட்ட தங்கக் கோயில் சமீப காலமாக வழிபாட்டுத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் பிரபலமாகி வருகிறது. 100 ஏக்கரில் ஸ்ரீபுரத்தில் 2007ல் கட்டப்பட்ட இக்
கோயில், நட்சத்திர வடிவில் - அதாவது, ஸ்ரீ சக்கரத்தை ஒப்பிட்டு, அதன் ஒவ்வொரு சாராம்சமும் இதில் பொருந்துமாறு சிறந்த வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் கோயில் 100 கிலோ தங்க வேலைப்பாட்டுக்குப் பெயர் போனது என்றால், ஸ்ரீபுரம் ேகாயில் ஆயிரத்து 500 கிலோ தங்கத்தினால் 10 அடுக்கு தங்கத் தகடுகள் ஒட்டப்பட்டு, இடம், கட்டிடம், தங்கம் என எல்லாம் சேர்த்து 600 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக விளங்குகிறது.

அபுதாபி மசூதி

அபுதாபியில் உள்ள The Sheikh Zayed Grand Mosque, இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி, மலேசியா, ஈரான், சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கிரீஸ் போன்ற உலக நாடுகளில் இருந்து மிகச்சிறந்த வல்லுனர்கள் 3 ஆயிரம் பேர்களைக் கொண்டும், உலக நாடுகளில் இருந்து தங்கம், செமி பிரீசியஸ் ஸ்டோன்கள், மார்பிள், சர விளக்குகளைக் கொண்டும் 38 நிறுவனங்களால் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மசூதி உலகிலேயே மிகப்பெரிய டூம் கொண்டது. 7 மிகப்பெரிய கோல்டு பிளேட்டால்  செய்யப்பட்ட சர விளக்குகளைக் கொண்டதும், இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தினரையும் பார்வையிட அனுமதிக்கப்படுவதும் இதன் சிறப்பம்சங்கள்.

ஜப்பான் தங்க இலைகள்

1220ல் ஆரம்பிக்கப்பட்டு, 1987ல் மறுசீரமைக்கப்பட்ட ஜப்பானின் புகழ்பெற்ற Deer Garden Temple என்று அழைக்கப்படுகிற Golden Pavilion எனும் கோயில் Kyotaல் உள்ளது. 3 அடுக்குகளைக் கொண்டு, உலக கலாசார மையத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் மேல் 2 அடுக்குகளும் சுத்தத் தங்க இலைகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. நன்கு பராமரிக்கப்பட்டு, மக்களால் பாதுகாக்கப்பட்டு வரும் இவ்விடம், ஜப்பானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

தாய்லாந்து தங்க புத்தர்

தாய்லாந்தில், பாங்காக்கில் புகழ்பெற்ற தங்க புத்தர் சிலை அமையப்பெற்ற தங்கக் கோயிலின் வரலாறு சுவாரஸ்யமானது. 5 ஆயிரத்து 500 கிலோ கிராம், அதாவது, ஐந்தரை டன் எடையுள்ள ப்ரபுத்த மகாசுவான் பட்டிமக்கான் என்ற புத்தர் சிலை சுகோதை என்ற இடத்தில் இருந்து அயோத்தியாவுக்கு 1403ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அப்படிக் கொண்டுவரும்போதே பசையினால் ஒட்டி, மூடப்பட்டே இருந்ததாம். அதாவது, அப்போதே அந்தச் சிலை பிற நாட்டினராலோ, போரினாலோ திருடு போகாமல் இருக்க சிலை முழுவதுமாக மூடப்பட்டிருந்ததாம். பர்மா மக்களின் ஆதிக்கத்துக்கு முன், அயோத்தியா அழிவுக்கு முன், முதலாம் ராம அரசர் என்பவரால், 1767ல் தாய்லாந்து பகுதியில் இருந்த அனைத்து புத்த சிலைகளும் ஒரு இடத்துக்கு ஒருங்கே கொண்டுவரப்பட்டன. இந்தச் சிலை மட்டும் அதன் எடை மற்றும் உயரத்தினாலும் வைக்க சரியான இடம் அமையாததாலும் 1824 முதல் 1851 வரை 27 வருடங்கள் ஒரு தகரக் கொட்டகையிலேயே இருத்தி வைக்கப்பட்டிருந்தது.

பிறகொரு நாள், அந்தச் சிலை சற்று கீழே சரிந்ததில் ஒட்டியிருந்த பசை விலகி, உள்ளே இருந்த தங்கம் பளபளத்தது. இதைக் கண்ட மன்னர் உடனே பசையை நீக்கி, அதை சுத்தப்படுத்திப் பார்த்ததில், உள்ளே இருந்த தங்கச் சிலை அவரையும் மக்களையும் கண் குளிரச் செய்தது. அந்தச் சிலையை வைக்கவே, 2010 பிப்ரவரி 14ல் அழகான ஆலயம் ஒன்றை நிர்மாணித்தார். அந்தச் சிலை பல பாகங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பாகமும் வேறு வேறு நாடுகளில் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு முக்கியமான பாகம் இந்தியாவில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது! முகவாய் முதல் நெற்றி வரை 80 சதவிகிதம் சுத்த தங்கத்தினாலும், முடியிலிருந்து கொண்டை வரை 45 கிலோ கிராம் சுத்தத் தங்கத்தினால், அதாவது, 999 தங்கத்தினாலும் செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தர் சிலை 25 கோடி டாலர், ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பு பெற்றது.

சிதம்பரம் பொற்கூரை

உலகப் புகழ் பெற்ற சிதம்பர ரகசியத்தைத் தன்னுள்ளே கொண்ட தில்லை நடராஜர் கோயில், சோழ அரசன் பராந்தகனால் கட்டி முடிக்கப்பட்டு பொற்கூரை வேயப்பட்டது. அதனால் தில்லை அம்பலத்துக்கு பொற்கூரை வேய்ந்த மன்னன் பராந்தகன் என்று பட்டம் சூட்டப்பட்டது. மன்னர் ராஜ ராஜ சோழன், குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், குந்தவை இவர்களால் இறைப்பணி செய்யப்பட்டது. 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் வேயப்பட்டு 72 ஆயிரம் தங்க ஆணிகள் அடிக்கப்பட்டு அந்தப் பொற்கூரை வேயப்பட்டது.

கியூபா தங்கத் தூண்

கரீபியன் கடலில் வட அமெரிக்காவில் மெக்சிகோவின் முகத்துவாரமாக அமைந்துள்ள அழகிய தீவு  கியூபா. அங்குள்ள 500 ஆண்டு பழமையான San Juan Bautista de los Remedios என்கிற கத்தோலிக்க சர்ச், அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய 13 தங்கத் தூண்களால் ஆனது. அந்த சர்ச் முழுவதும் ஒரு வெள்ளைப் பூச்சினால் மறைக்கப்பட்டிருந்தது. அதிலுள்ள தங்கவேலைப்பாடுகள், 1940ல் நடந்த சீரமைப்புப் பணிகளின் போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. திருடர்களிடம் இருந்து காப்பாற்றவே வெள்ளைப் பூச்சினால் மூடப்பட்டிருந்ததாம்!