அதிசயத்தின் அதிசயம்!



தடம் பதித்த தாரகைகள்
எமிலி வாரென் ரோப்லிங்

‘மக்கள் வெவ்வேறு விதங்களில் தங்களின் அழகை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் நன்றாகப் பேசும் கலையைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போற்றுதலுக்குரிய காரியங்களை  தைரியமாக செய்கிறார்கள்.  நானோ ஒரு முட்டாளாக இருக்கிறேன்’ என்று தன் சகோதரிக்குக் கடிதம் எழுதிய எமிலி வாரென் ரோப்லிங், சில ஆண்டுகளில் என்னவாக மாறினார் என்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது!

1843ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார் எமிலி. அவர் பெற்றோருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் கடைசிக் குழந்தை. அந்தக் காலத்திலேயே குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்பினார் அவரது தந்தை. மூத்த அண்ணன் கோவெர்னியர் கெம்பிள் வாரென் கட்டிடப் பொறியியலாளர். உள்நாட்டுப் போரின்போது ராணுவத்தில் பணிபுரிந்தார். திரும்பி வந்தவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்தார். அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். சகோதர, சகோதரிகளைக் காக்கும் பொறுப்பு கோவெர்னியருக்கு வந்தது.  

இலக்கணம், வரலாறு, புவியியல், அல்ஜிப்ரா, பிரெஞ்சு, வீட்டு நிர்வாகம், பியானோ என்று பல்வேறு விஷயங்களைக் கற்றார் எமிலி. மீண்டும் கோவெர்னியர் ராணுவத்தில் சேர்ந்தார். அண்ணனைப் பார்ப்பதற்காக எமிலி ராணுவ முகாமுக்குச் சென்றார். அங்கே வாஷிங்டன் ரோப்லிங் உடன் அறிமுகம் கிடைத்தது. பார்த்த உடனேயே எமிலிக்கு அவரைப் பிடித்துப் போனது. சந்திப்பு நிகழ்ந்த ஆறாவது வாரம் வாஷிங்டன் ஒரு வைர மோதிரத்தைப் பரிசளித்தார். 11 மாதங்கள் கடிதங்கள் மூலம் காதல் வளர்ந்தது. 1865ம் ஆண்டு இருவருக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.



வாஷிங்டனின் அப்பா ஜான் ரோப்லிங் மிகவும் பிரபலமான பொறியியலாளர். அமெரிக்காவில் உள்ள சில முக்கியமான பாலங்களை உருவாக்கியவர். வாஷிங்டனும் பொறியியல் படித்தார். பிறகு அப்பாவுடன் சேர்ந்து வேலை செய்தார்.  கட்டுமானத் துறையின் நவீனங்களைத் தெரிந்துகொள்வதற்காக ஐரோப்பாவுக்கு வாஷிங்டன் சென்றார். அங்கே எமிலி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். மிக மோசமான உடல்நிலை... பிரசவத்தின் போது மரணத்தைத் தொட்டுத் திரும்பினார். ஜான் ரோப்லிங் தனது கனவு புராஜெக்டில் ஈடுபட்டிருந்தார். நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் பாலத்தைக் கட்டும் பணியை ஆரம்பித்திருந்தார். அவருடன் வாஷிங்டனும் இணைந்து கொண்டார்.  பல கோடி டாலர்கள் செலவில் அந்தப் பாலம் உருவாக இருந்தது. வேலை ஆரம்பித்த சில நாட்களில் ஜான் ரோப்லிங் கால் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இரண்டு வாரங்களில் டெட்டனஸ் நோய்க்குப் பலியானார். முழுப் பணியும் வாஷிங்டனுக்கு வந்து சேர்ந்தது. அவரே முதன்மைப்
பொறியியலாளராக வேலை செய்தார்.

ஆற்றின் மீது கட்டும் பாலம். பலருக்கும் அந்தச் சூழ்நிலை ஒத்துக்கொள்வதில்லை. வாஷிங்டனும் காற்றழுத்த நோயால் பாதிக்கப்பட்டார். அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. சிகிச்சைக்காக அவரை ஜெர்மனி அழைத்துச் சென்றார் எமிலி. 6 மாதங்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை.  நியூயார்க் திரும்பினர். தலைவலி, நரம்புத் தளர்ச்சி, பார்வைக் குறைபாடு என்று அடுத்தடுத்து மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, படுத்த படுக்கையானார் வாஷிங்டன். ப்ரூக்ளின் பாலம் அருகே  உள்ள வீட்டுக்குக் குடிபுகுந்தார் எமிலி. வாஷிங்டனின் அறை ஜன்னல் வழியே பாலம் தெரியும்படி அமைத்தார். ‘தான் செய்து வந்த வேலையை தன் மனைவி எமிலி திறம்படச் செய்வார், அவரை முதன்மைப் பொறியியலாளராக நியமிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினார் வாஷிங்டன். என்ன ஆச்சரியம், அந்த நிறுவனம் எமிலியை ஏற்றுக்கொண்டது.

எமிலி உடனடியாக ஒரு கட்டுமானப் படிப்பில் சேர்ந்து, அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். வாஷிங்டன் உதவியுடன் பாலம் கட்டும் பணியை ஆரம்பித்தார்.  ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்த பணி, போகப் போக எளிதில் கைவசமானது. நோயுற்ற கணவர், குழந்தை, பாலம் கட்டும் பணி என்று எமிலி அளவுக்கு அதிகமான உழைப்பைச் செலுத்தி வந்தார். புராஜெக்டை திட்டமிடுவார். அதைச் செயல்படுத்துவார். ரிப்போர்ட் எழுதி நிறுவனத்திடம் சமர்ப்பிப்பார். இப்படி 11 ஆண்டுகள் முதன்மை பொறியியலாளர் பணியை மிகச் சிறப்பாகச் செய்தார். 600 பணியாளர்களை வேலை வாங்கினார். ப்ரூக்ளின் பாலம் நிறைவுற்றது. உலக அதிசயங்களில் எட்டாவது அதிசயமாகத் திகழ்ந்தது.

கட்டுமான நிறுவனம் எமிலியின் உழைப்பை அங்கீகரித்தது. கணவருக்கு முதன்மைச் செவிலியராக இருந்த ஒரு பெண், பெரிய நிறுவனத்தின் முதன்மைப் பொறியியலாளராக மாறினார் என்று கொண்டாடியது. ஒரு பெண் பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை மீது பொதுமக்களுக்குச் சந்தேகம் இருந்தது. திறப்பு விழாவுக்குப் பிறகு பாலத்தின் மீது செல்ல பலரும் பயந்தனர். அதற்காக யானைகளை பாலத்தின் மீது நடக்க வைத்து, பலத்தை உறுதிப்படுத்தினார்கள்.

ஆனாலும், ‘எமிலியின் கண்கள், கால்கள், கைகள் வேண்டுமானால் பாலம் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கலாம். அவரது மூளை ஈடுபட்டிருக்காது. அவரது கணவர் வாஷிங்டனின் மூளைதான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்’ என்றனர். உண்மையில், ஆரம்பத்தில் கணவரிடம் விஷயங்களைக் கற்றுக்கொண்ட எமிலி, பிறகு தானே அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுவிட்டார். ‘ப்ரூக்ளின் பாலத்தின் மொத்த பெருமைக்கும் சொந்தக்காரர் எமிலியே ’ என்று கட்டுமான நிறுவனம் கூறியது. ப்ரூக்ளின் பாலத்துக்கு உழைப்பையும் அறிவையும் செலுத்திய பெண்ணை அங்கீகரிக்கும் விதத்தில், ‘எமிலி வாரென் ரோப்லிங்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்காவின் கட்டிடவியல் பொறியியலாளர்கள் அமைப்பில் சேர்ந்து, உரையாற்றிய முதல் பெண் எமிலி என்ற பெருமையும் கிடைத்தது.  காலப்போக்கில் கட்டுமானத் துறையில் இருந்து விலகிய எமிலி, பெண் உரிமை இயக்கங்கள், சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். போரில் காயமடைந்த வீரர்களுக்குச் செவிலியராக இருந்து மருத்துவ உதவி அளித்தார். வாஷிங்டனின் உடல் நிலையும் ஓரளவு முன்னேற்றம் கண்டது. இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் எமிலியும் வாஷிங்டனும் சென்று வந்தனர். 

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பெண்கள் சட்டம் குறித்துப் படிக்க ஆரம்பித்தார் எமிலி. ஆனால், தன்னுடைய வெற்றிப் பயணத்தை அவரால் தொடர முடியவில்லை. வயிற்றுப் புற்றுநோயால் 60 வயதில் மரணம் அடைந்தார். இன்று ப்ரூக்ளின் பாலம் 125 ஆண்டுகளைக் கடந்து, நியூயார்க்கின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது. 1596 அடி நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் இன்று 1 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கட்டிடப் பொறியியலாளர்களில் ஒருவராகவும் உலகிலேயே முதல் பெண் கட்டிடப் பொறியியலாளராகவும் போற்றப்படுகிறார் எமிலி வாரென் ரோப்லிங். ஒரு சாதாரணப் பெண், சாதனைப் பெண்ணாக மாறிய வரலாறு, பிறகு வந்த பெண்களுக்கு ஒரு பாதையாக அமைந்தது!

"ஒரு பெண் இன்ஜினியரால் உருவாக்கப்பட்ட பாலத்தின் உறுதித்தன்மை மீது  பொதுமக்களுக்குச் சந்தேகம் இருந்தது. திறப்பு விழாவுக்குப் பிறகும் பாலத்தின்  மீது செல்ல பலரும் பயந்தனர். அதற்காக யானைகளை பாலத்தின் மீது நடக்க  வைத்து, பலத்தை உறுதிப்படுத்தினார்கள்!"

சஹானா