வரலாறு சொல்லும் 3 கோயில்கள்



ஷர்மிளா ராஜசேகர்

1. காளையார்கோவில்

வரலாறு கேட்கும்போதே இந்தக் கோயிலை பார்த்து வரலாம் என்கிற எண்ணம் எல்லோருக்குமே தோன்றும். இந்த சிவன் கோயில் சிவகங்கையில் இருந்து  17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மருது சகோதரர்களால் கட்டப்பட்ட இரண்டு ராஜ கோபுரங்களை உடைய கோயில். இந்தக் கோயிலுக்குத் தேவைப்படும் செங்கல்கள் மானாமதுரை அருகிலுள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி கைமாற்றி, செங்கோட்டை, மானாமதுரை, முடிக்கரை வழியாக காளையார் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டதாம்.

மருது சகோதரர்கள் இந்த கோபுரங்களின் உச்சியிலிருந்து மதுரையை நேரடியாகப் பார்வையிடுவார்களாம். கோயில் கோபுரங்களை பீரங்கி மூலம் இடித்து விடுவதாக மிரட்டியே மருது சகோதரர்களை வெளியில் வரச் செய்து தூக்கிலிட்டு இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாலேயே இவர்களுடன் சேர்ந்த 500 பேரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டிருக்கிறார்கள்.

பழங்கால தமிழகக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவே இன்றும் திகழ்கிறது இக்கோயில். 18 அடியில் கோயிலை சுற்றி பெரிய மதில் சுவரும், கோயிலின் தென்புறம் பெரிய தெப்பக்குளமும் இருக்கிறது. மருது சகோதரர்களின் நினைவுச்சின்னமாக கோயிலின் உள்ளே கற்சிலைகளும், கோயிலின் எதிர்புறத்தில் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தியைத் தாண்டி, விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மருது சகோதரர்களுக்காகவே இந்தக் கோயிலை பார்வையிடலாம்.



2. உண்டவள்ளி குகை

ஆனந்த பத்மநாப சுவாமி ஆலயம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது இந்த குகைவரை கோயில். ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விஷ்ணு கோயில். சீனப்பயணி யுவான்சுவாங் இங்கே வந்து சென்றதாகவும், முதலில் இங்கே புத்த விகாரங்கள் இருந்ததாகவும், பிறகு வந்த மன்னர்களால் இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான 5 அடுக்குகள் உடைய குகைவரை கோயில்... கீழ் இருந்து பார்க்கும் போதே அவ்வளவு பெரிய மலை பிரமிப்பூட்டும். மேலே ஏற ஏற அந்த பசுமையான சுற்றுச்சூழலும் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட  தூண்கள் ஒவ்வொரு அறையாகச் செல்லச் செல்ல கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும். முதலாம் அடுக்கில் முழுமையடையாத தூண்களும், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகளும். இரண்டாம் அடுக்கில் ஒரே கிரானைட் கல்லால் அமைக்கப்பட்ட பெரிய விஷ்ணு சிலை கிடைவாக்கில் அமைக்கப்பட்டு உள்ளது. மலையின் வெளிப்பகுதி முழுதும் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. புத்த துறவிகள் ஓய்வு எடுப்பதற்காக இந்த இடத்தை பயன்படுத்தினார்களாம். மலைக்கோயிலின் கீழே பச்சைப்பசேல் புல்வெளி, மரங்கள், குரங்குகள், பறவைகள் என குடும்பத்துடன் சென்று ரசிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஏற்ற வரலாற்றுத் தலம் இது!

3. ஏலக்குறிச்சி

தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி மற்றும் பூண்டி மாதா கோயில்கள் பிரபலமானவை.  ஏலக்குறிச்சியில் மாதா கோயில் இருப்பதும், இது இத்தாலி  நாட்டில்  பிறந்த வீரமாமுனிவர் அரியலூர் அருகே கட்டிய மாதா கோயில் என்பதும் பலர் அறியாதவை. பூண்டி மாதா கோயிலில் இருந்து திருவையாறு, திருமானூர் தாண்டினால் ஏலக்குறிச்சியை அடையலாம். இங்குள்ள மாதா குளத்தில் 53 அடி அடைக்கல மாதா சிலை உள்ளது. இச்சிலை பக்தர்கள் உதவியுடன் 25 ஆயிரம் கிலோ வெண்கலம் மற்றும்  500 கிராம் தங்கத்தகடு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.