குருவியின் காதலி



பிரசன்ன வதனி

ஓர் இன்ஜினியரிங் மாணவியின் சாதாரண போட்டோ ஆர்வம் இன்று போட்டோகிராபியில் கலக்க வைத்திருக்கும் ஆச்சரிய விஷயம்! எல்லையில்லா வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளை தன் கேமரா கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார் பிரசன்ன வதனி. மனிதர்களையும் விலங்குகளையும் படம் பிடிப்பதை விட தனக்கு நிகரில்லை என்ற கர்வத்தில் படபடவென்று சிறகடிக்கும் குருவிகள்தான் இவரது ஆல் டைம் ஃபேவரைட். தனக்குப் பிடித்த சிட்டுக்குருவியைப் போலவே தன் இமைகளை படபடத்தபடி போட்டோகிராபி ஆர்வம் பற்றி பேசுகிறார்...

“நான் பிறந்தது புதுச்சேரியில்.  வளர்ந்தது நெய்வேலியில். ஸ்கூல் முடிச்சதும் சென்னைல இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். நாலு வருஷம் காற்று மாறி ஓடிடுச்சு. அதுக்கப்புறம் என்ன பண்றதுனு புரியலை. வீட்டில் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்போதுதான் எனக்குப் பிடித்த கேமராவை கையில எடுத்தேன். முதல்ல சாதாரண பாய்ன்ட்  அண்ட் ஷூட் கேமராலதான் ஆரம்பிச்சேன். மோசமாகத்தான் படம் எடுப்பேன். அப்போ அதுவே என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சது.



அந்த போட்டோக்களை எல்லாம் இப்போ பார்த்தா சிரிப்பா வருது. ஃபேஸ்புக்ல போட்டோகிராபி பேஜஸ்லாம் நிறைய லைக் பண்ணேன். அதிலிருந்து எப்படி எல்லாம் எடுக்குறாங்க... எந்த ஆங்கிள்ல எடுத்தால் நல்லா இருக்கும் என்று பார்த்து ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் பிரசன்ன வதனி தான் வாங்கிய முதல் புரொஃபஷனல் கேமராவை பற்றிய ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கிறார்.

“ஒரு புரொஃபஷனல் கேமரா வாங்கலாம்னு யோசிச்சு அப்பாகிட்ட கேட்டப்போ, அவர் எனக்கு அட்வான்ஸ்டு பாய்ன்ட் ஷூட் கேமராதான் வாங்கித் தந்தார். `முதல்ல இதுல நல்லா போட்டோ எடுக்க கத்துக்கோ... நான் அப்புறமா உனக்கு DSLR வாங்கித் தரேன்’னு சொன்னார். அதிலிருந்து என்னுடைய கேமரா இன்னொரு கையாவே மாறிடுச்சு. நான் எங்க போனாலும் கேமராவோடதான் போனேன். எங்க வீட்டில எல்லாரும் மொதல்ல கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் என்னோட ஆர்வத்ைத புரிஞ்சிக்கிட்டு ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க. என் தம்பி தினேஷ் எனக்கு ரொம்ப உதவியா இருக்கான். கேமராவுக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் வாங்கித் தருவான்.



போட்டோ எடுக்குறப்பலாம் நான் அவனைத்தான் கூட்டிட்டு போவேன். கொஞ்சம்கூட முகம் சுளிக்க மாட்டான். என் போட்டோஸ்ல எதுவும் குறை இருந்தா சொல்வான். என் அம்மா இந்துமதியும் ரொம்ப பொறுமையா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. நான் போட்டோ எடுக்குறப்ப அவங்க வேற பேர்ட்ஸ் ஏதும் வருதான்னு பார்த்திட்டிருப்பாங்க. இதுபோல என் குடும்பத்துல ஒவ்வொருத்தரும் எனக்கு ஹெல்ப் பண்ணிட்டிருக்காங்க.

போகப் போக போட்டோகிராபியில இருந்த என் ஆர்வத்தைப் பார்த்து அப்பாவே எனக்கு புரொஃபஷனல் கேமரா வாங்கித் தந்தார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. போட்டோ எடுக்கப் போணும்னு சொன்னா, என் அப்பா துரைராஜ் உடனே கூட்டிட்டு போயிடுவார். வீட்டுல யாராவது எங்கயாச்சும் ஒரு சின்ன பூச்சிய பார்த்தாகூட என்னிடம் வந்து சொல்லுவாங்க. இல்லனா புடிச்சிட்டு வந்துடுவாங்க. எனக்கு ரொம்பப் புடிச்சது பறவைகள். அதிலும் குருவிகள். அதனால போற வழியில எங்கயாச்சும் குருவிச் சத்தம் கேட்டாலே வண்டிய நிறுத்திட்டு இறங்கி ஓடிடுவேன். அந்தக் குருவிய பார்க்காம வண்டில ஏற மாட்டேன்... அந்த அளவுக்கு ஆர்வம் எனக்கு. ஒரு தடவை கேமரா எடுக்க மறந்துட்டேன். அன்னைக்குன்னு பார்த்து மெரினா பீச்சுக்கு போனேன். ரொம்ப கஷ்டமா போச்சு. நிறைய நல்ல ஷாட்ஸ்லாம் மிஸ் பண்ணிட்டேன். கேமரா இல்லாம எங்கயும் போகக்கூடாதுன்னு அன்னைக்கு முடிவு பண்ணினேன்.



எனக்கு போட்டோ எடுக்கறதுல ஏதும் சந்தேகம்னா ஃபேஸ்புக்ல நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்கக்கிட்ட கேட்டுப்பேன்.  யுடியூப்ல வீடியோ பார்த்து கத்துப்பேன். நான் எடுக்குற போட்டோஸ்லாம் ஒரு பேஜ் கிரியேட் பண்ணி அதுல போடுவேன். ஃப்ரெண்ட்ஸ்லாம் அதுல ஏதாவது தப்பு இருந்தா சொல்லுவாங்க. அதெல்லாம் கத்துக்கிட்டு எல்லாத்தையும் சரி பண்ணுவேன். என் ஃபேஸ்புக் பக்கத்துல இருக்கற போட்டோஸ் பார்த்துட்டு நிறையபேர் திருமண போட்டோ எடுப்பீங்களானு கேட்டுருக்காங்க. என்னோட ஆர்வமெல்லாம் பறவைகளும் விலங்குகளும்தான்” என்று சொல்லும் வதனி பறவைகளை தன் கேமராவில் படம் பிடிப்பதோடு, தான் விரும்பிய நேரத்தில் அவற்றை படம் பிடிப்பதற்காக தன் வீட்டில் நிறைய குருவிகளை வளர்த்து வருகிறார்.

“எங்க ஊரு சின்ன டவுன்தான். அதனால நிறைய குருவிங்க வரும். ஆனா, 4 வருஷத்துக்கு முன்னாடி வந்த புயல்ல நிறைய குருவிங்க அழிஞ்சிடுச்சு. அதனால குருவிங்க சத்தமே கம்மியாயிடுச்சு. இப்போதான் குருவிலாம் நிறைய வருது. அதுக்காகவே மரம் நிறைய வளர்க்குறோம். மாடில குருவிக்காக கூடு கட்ட சின்னதா  வீடு செஞ்சி வச்சிருக்கோம். அதுல குருவி கூடு கட்டி தங்கியிருக்கு.  அதெல்லாம்  பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். தினமும் சாப்பாடு, தண்ணீர் வைக்கிறோம். குருவிங்க தினமும் வீட்டுக்கு வந்துட்டுபோறதைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கும். அதுங்க வயிறு நிறைஞ்சுதுன்ற மனநிம்மதியும் கிடைக்கும். வீட்டுக்கு வர குருவியை எல்லாம் போட்டோ எடுப்பேன்.

நான் இதுவரை அதிகமா எடுத்தது குருவிகள்தான். இருந்தாலும் நான் இன்னும் பார்க்க வேண்டிய குருவிகள் நிறைய இருக்கு...”  வீடு நிறைய எங்கு பார்த்தாலும் குருவிகளின் படங்கள். அவற்றைப் பார்த்த நமக்கும் குதூகலம் ஒட்டிக்கொண்டது. தன் குருவிகளைப் பற்றி கூறும் பிரசன்ன வதனியின் கனவு இறக்கைகள் மேலும் விரிகின்றன. “என்னோட ஆசையெல்லாம் மிருகங்களை லைவ்வா எடுக்கணும். முடிஞ்ச வரைக்கும் உலகத்துல இருக்குற பறவைகள்ல பாதியாச்சும் எடுக்கணும். முக்கியமா ஒரு `ஹம்மிங் பேர்ட்’ எடுக்கணும். பெரிய வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆகணும். அதான் என் லட்சியமே. என் ஃபேமிலி சப்போர்ட்ல கண்டிப்பாக என் லட்சியம் நிறைவேறும்கிற நம்பிக்கை இருக்கு...” - சிறகடிக்கும் ஆசைகளை நம்மோடு பகிர்கிறார். குருவிக் காதலி.

"எங்க வீட்டு மாடில குருவிக்காக கூடு கட்ட சின்னதா  வீடு செஞ்சி வச்சிருக்கோம். அதுல குருவி கூடு கட்டி தங்கியிருக்கு. அதெல்லாம்  பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். தினமும் சாப்பாடு, தண்ணீர் வைக்கிறோம். குருவிங்க தினமும் வீட்டுக்கு வந்துட்டுபோறதைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கும். அதுங்க வயிறு நிறைஞ்சுதுன்ற மனநிம்மதியும் கிடைக்கும்."
Www.facebook.com/vathanifotography