உலகின் டாப் 10 அழகிய சாலைகள்



10 Most Beautiful Drives In The World

முடிவற்ற சாலையில் இனிமைப் பயணம் செய்வது போன்ற கனவு நம் ஒவ்வொருவருக்கும் வந்ததுண்டு. உண்மையில் முடிவற்ற சாலை இருக்கிறதோ இல்லையோ, பயணிக்கும் ஆவலைத் தூண்டும் சாலைகள் உள்ளன. ஜன்னல் ஓரம் காற்று முகத்தில் அடிக்க வெயிலையும் மழையையும் பனியையும் குளிரையும் அனுபவித்துப் பயணிப்பது ஒரு சுகம், லாங் ட்ரைவ் எனப்படும் தொலைதூர இலக்கில்லா பயணத்தை, மன அழுத்தத்திலிருந்து விடுபட சிறந்த மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி ஒரு நெடும் பயணத்தை அனுபவிக்க இதோ உலகின் மிகச் சிறந்த சாலைகள்...

1.California State Route 1 (California,  United States)

உலகின் மிகப் பிரபலமான சாலை... சான்ஃபிரான்ஸிஸுக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் இடையில் அமைந்துள்ள கடற்புறப் பாதை. ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் எடுத்துச் செல்ல ஆசைப்படும் அளவு அழகில் அள்ளும் கடலைக் கொண்டது!

2.Seven Mile Bridge (Florida, United States)

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சாலையில் ஒரு தொலைதூர பயணம் எப்படி இருக்கும்? நினைவே உற்சாகம் அளிக்கிறதல்லவா? இதோ அப்படி ஒரு பாதை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடலில் கட்டப்பட்டுள்ளது. வெகுதொலைவுக்கு கடலின் நீளத்தையும் நீலத்தையும் தவிர வேறு ஒன்றும் இல்லை!



3.Queen Charlotte Drive (New Zealand)

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இரு இடங்களை இணைக்கும் இந்தக் கடல்புறப் பயணம் உலகின் மிக அழகிய பயணத்தடங்களில் முக்கியமானது. நீல வானம், பச்சைக் கடல் என்று மாறி மாறி வர்ணஜாலம் காட்டும்.

4.Great Ocean Road (Australia)

240 கிலோ மீட்டர் தொலைவுக்கு தென்-வட கடல் பகுதிகளை இணைக்கும் இந்தச் சாலை ஆஸ்திரேலியாவின் அழகுகளில் ஒன்று. கடலோரத்தில் இயற்கையாக அமைந்த பாறைக்குன்றுகளை ரசித்தவாறே செல்லலாம். ஒருபுறம் மலையின் பசுமை, இன்னொரு புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் என அலாதியான பயண அனுபவம் தரும்.

5.Stelvio Pass (Italy)

வட இத்தாலியில் கிழக்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் அடிக்கும் அதிக உயரத்தில் அமைந்துள்ள இந்த வளைந்த பாதை, அழகான சுற்றுச்சூழலுக்காகவே பயணிகளைக் கவர்கிறது. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அத்தனை அழகையும் தன்னிடம் கொண்ட இந்தப் பாதை இத்தாலியின் சிறப்புகளில் ஒன்று!



6.Tianmen Mountain Road (China)

தேசியப்பூங்கா ஒன்றில் அமைந்திருக்கும் இந்த மலை உச்சியை அடைய இரண்டு வழிகள்... ஒன்று கேபிள் கார், இன்னொன்று இந்த 11 கிலோ மீட்டர் நீள அழகிய மலைப்பாதை.

7.Furka Pass (Switzerland)

ஆல்ப்ஸ் மலைத்தொடரில், சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தப் பாதை ஜேம்ஸ்பாண்ட் பட சாகசங்களில் நிறையவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரம் வரை செல்லும் அழகிய வழித்தடம்!

8.Ruta 40 (Argentina)

20 தேசியப்பூங்காக்கள், 18 பெரிய நதிகள், 27 மலைப்பாதைகளோடு, அர்ஜென்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரைத் தொடர்ந்து செல்லும் இப்பாதை 5 ஆயிரம் கிலோ மீட்டர்களையும் தாண்டி நீண்டது. சாகச சுற்றுலா விரும்பிகளின் விருப்பத் தேர்வு!

9.The Atlantic Ocean Road (Norway)

நார்வேயில் கடலுக்கு நடுவில் வளைந்து நெளிந்து 8.5 கிலோ மீட்டர் நீளும் இந்தப் பாதை, இதன் வித்தியாச அழகுக்காகவே புகழ்பெற்றது.

10.Chapman’s Peak Drive (South Africa)

சாலையின் ஒரு புறம் மலைத்தொடர், இன்னொரு புறம் அட்லாண்டிக் கடல் என்று 15 கிலோ மீட்டர் வரை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் தென் ஆப்ரிக்காவின் இந்த மலைப்பாதை 1912ல் அமைக்கப்பட்டது.