நீங்கதான் முதலாளியம்மா



ஹெல்த் மிக்ஸ்
சத்யா

ஆரோக்கியமாகவும் சாப்பிட வேண்டும்... அவசரமாக சமைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்கிறவர்களுக்கான ஒரே சாய்ஸ் ஹெல்த் மிக்ஸ் எனப்படுகிற கஞ்சி. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு அது. வயது, உடல்நிலை மற்றும் வேலை செய்கிற தன்மை ஆகியவற்றைப் பொறுத்து கஞ்சியிலேயே பல வகைகள் தயாரிக்கலாம்.

வேலூர், திருப்பத்தூரைச் சேர்ந்த சத்யா, 3 வகையான ஹெல்த் மிக்ஸ் தயாரித்து விற்பனை செய்கிறார். ``டிப்ளமா இன் ஃபார்மசி படிச்சிருக்கேன். உடல்நலம் சம்பந்தப்பட்ட துறையில இருக்கிறதால, ஆரோக்கியமான உணவு பத்தின அக்கறை இயல்பிலேயே எனக்கு கொஞ்சம் அதிகம். கடைகள்ல ஹெல்த் மிக்ஸ் என்ற பேர்ல விற்கற பலதுலயும் நாம எதிர்பார்க்கிற தானியங்களைச் சேர்க்கிறதில்லை. சுவையும் கம்மியா இருக்கு. எங்க வீட்ல உள்ள பெரியவங்க வீட்லயே கஞ்சி மாவு தயாரிச்சு உபயோகிக்கிறதை சின்ன வயசுலேருந்தே பார்த்திருக்கேன்.  அந்த அனுபவத்தை வச்சு நானும் வீட்லயே கஞ்சி மிக்ஸ் தயாரிச்சேன். முதல்ல 42 வகையான பொருட்கள் சேர்த்து ஒரு கிலோ மட்டும் தயாரிச்சேன். அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு சாம்பிள் கொடுத்ததுல எல்லாரும் ரொம்பப் பிரமாதமா இருக்கிறதா சொன்னாங்க.

ஆர்டரும் கொடுத்தாங்க. அந்த உற்சாகத்துல மறுபடி தயாரிச்சேன்.  42 வகையான பொருட்கள் சேர்த்து செய்யறது குழந்தைங்களுக்கு ஏற்றதா இருக்கும். அதுல 9 வகையான தானியங்களை முளைகட்டித் தயாரிக்கிறேன். அடுத்து 16 வகையான பொருட்களை வச்சு, 5 வகை தானியங்களை முளைகட்டி, இன்னொரு மிக்ஸ் தயாரிக்கிறேன். இது வேலைக்குப் போறவங்க, நடுத்தர வயதுக்காரங்களுக்கானது. மூணாவது வகை, நீரிழிவுக்காரங்களுக்கானது.

4 வகையான பொருட்களை முளைகட்டி, வெந்தயம், கேழ்வரகெல்லாம் சேர்த்து செய்யறது இது. மூன்றுக்குமே நல்ல வரவேற்பு கிடைச்சதை அடுத்து, இப்போ கடைகளுக்கும் சப்ளை பண்றேன். சரியான முறையில முளைகட்டறதையும், பக்குவமா கலந்து அரைக்கிறதையும் கத்துக்கிட்டா, இது யார் வேணா செய்யக்கூடிய லாபகரமான பிசினஸா இருக்கும்’’ என்கிற சத்யா, 5 ஆயிரம் முதலீட்டில் ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் இறங்கலாம் என நம்பிக்கை தருகிறார். 50 சதவிகிதம் லாபம் தரக்கூடிய இந்த 3 வகையான கஞ்சி மிக்ஸ் தயாரிப்பை சத்யாவிடம் ஒரே நாள் பயிற்சியில் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் கற்றுக் கொள்ளலாம்.
படம் : கணேஷ்



மிதக்கும் ரங்கோலி
சுதா செல்வக்குமார்

வீட்டின் நடுவே போடப்படுகிற ஒற்றைக் கோலம் ஒட்டுமொத்த வீட்டையே அழகாக்கி விடும். ஆனாலும், இன்றைய அவசர வாழ்க்கைச் சூழலில் வீட்டு வாசலில் கோலம் போடவே பலருக்கும் நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. ரெடிமேட் கோல ஸ்டிக்கரை வாங்கி ஒட்டுகிறார்கள். அது சில நாட்களில் ஓரங்கள் கிழிந்து அழகை இழக்கும். முழுக்க பிய்த்து எறியவும் முடியாமல், அப்படியே விடவும் முடியாமல் கோலம், அலங்கோலமாக மாறும்.

சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சுதா செல்வக்குமாரின் கைவண்ணத்தில் உருவாகும் மிதக்கும் ரங்கோலிகள் மேலே சொன்ன பிரச்னைக்கு தீர்வளிப்பவை. மிதக்கும் ரங்கோலி என்றதும் தண்ணீரில் மிதக்க மட்டும்தான் விட முடியும் என நினைக்க வேண்டாம். தரைகளில் ேதவைப்பட்ட இடங்களில் ஒட்டலாம். ஒட்டாமல் அவ்வப்போது வைத்திருந்து எடுத்து வைக்கலாம்.

``ஃபோம் ஷீட், ஒருவிதமான பிளாஸ்டிக் ஷீட், கார்ட்போர்டு, பிளைவுட், அக்ரிலிக் ஷீட்னு எதுல வேணாலும் இந்த ரங்கோலிகளை பண்ணலாம். கையடக்க கோலத்துலேருந்து, எவ்வளவு பெரிய சைஸ் வரைக்கும் வேண்டுமானாலும் பண்ண முடியும். பூஜை அறை மாதரியான குறிப்பிட்ட ஒரு இடத்துல நிரந்தரமா ஒட்டி வைக்கணும்னா, கோலத்தை தயார் பண்ணிட்டு, பின் பக்கம் டபுள் சைடு ஸ்டிக்கர் ஒட்டினா போதும். நிரந்தரமா ஒட்ட வேண்டாம். தினம் ஒரு கோலம் மாத்தணும்னு நினைச்சா, ஸ்டிக்கர் இல்லாமலும் பண்ணலாம்.

இது ரெண்டையும் தவிர, வீட்ல ஏதோ ஸ்பெஷல் பூஜை, விசேஷம்னா பெரிய பாத்திரத்துல தண்ணீர் விட்டு, அதுக்கு மேல இந்தக் கோலங்களை மிதக்கவும் விடலாம். மரத்துல செய்யறது மூழ்கிடும்கிறதால அதைத் தவிர்த்து மற்றதை மிதக்க விடலாம். எவ்வளவு நாள் வேணா வச்சிருந்து உபயோகிக்கலாம். வெயிட்டே இல்லாததுங்கிறதால வெளியூர் போனாலும் எடுத்துட்டுப் போகறது சுலபம்...’’ என்கிற சுதா, குறைந்தபட்சமாக 200 ரூபாய் முதலீட்டிலேயே இந்த பிசினஸை தொடங்கலாம் என உத்தரவாதம் தருகிறார்.

``நாம உபயோகிக்கிற பொருட்கள், அலங்காரம், டிசைன்களை பொறுத்து ஒரு செட் கோலத்தை 250 ரூபாய்லேருந்து 500 ரூபாய் வரைக்கும்கூட விற்கலாம். 50 சதவிகித லாபம் கிடைக்கும். உழைப்பும் கம்மி...’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 3 மாடல் மிதக்கும் ரங்கோலி கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய்.

பாலிமர் கிளே ஃப்ரிட்ஜ் மேக்னட்
நந்தினி

மேக்னட் ஒட்டப்படாத ஃப்ரிட்ஜ்களை எந்த வீட்டிலும் பார்க்க முடிவதில்லை. சில வீடுகளில் ஃப்ரிட்ஜின் தோற்றமே தெரியாத அளவுக்கு எக்கச்சக்கமான மேக்னட்டுகளை ஒட்டியிருப்பதையும் பார்க்கலாம்.  சிலருக்கு ஃப்ரிட்ஜ் மேக்னட் வாங்குவதும், ஒட்டி அழகு பார்ப்பதும் வித்தியாசமான பொழுதுபோக்கும்கூட. சென்னையைச் சேர்ந்த நந்தினி, கிளே மற்றும் பாலிமர் கிளேயில் வித்தியாசமான ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள் டிசைன் செய்கிறார்.

``பழங்கள், காய்கறி, கரண்டி வடிவங்கள்லதான் பெரும்பாலும் ஃப்ரிட்ஜ் மேக்னட் பார்த்திருப்போம். இப்ப வித்தியாசமா, ஹோட்டல்ல கிடைக்கிற காம்போ மாதிரியான டிசைன்கள்ல மேக்னட் உபயோகிக்கிறது ட்ரெண்டுல இருக்கு. மோல்டோ, மெஷினோ தேவையில்லை. எப்படிப்பட்ட  டிசைனையும் நாமளே கையால உருவாக்கிடலாம்கிறதுதான் இதுல ஸ்பெஷல். ஃப்ரிட்ஜ்ல மேக்னட்டா ஒட்டலாம். சமையலறை அலமாரிகள்லயும் டைல்ஸ்லயும் அழகுக்காக ஒட்டி வைக்கலாம். வீட்ல எங்க வேணாலும் ஒட்டலாம். சாதாரண கிளே மற்றும் பாலிமர் கிளேனு ரெண்டுலயும் செய்யலாம். சாதாரண கிளேயில பண்றதுன்னா, டிசைன் பண்ணிட்டு, கலர் கொடுத்துக் காய வைக்கணும்.

பாலிமர் கிளேன்னா நமக்குத் தேவையான எல்லா கலர்லயும் கிடைக்கும். டிசைன் பண்ணிட்டு, ஓடிஜில வச்சு பேக் பண்ணி எடுத்துட்டா போதும். கலர் கொடுக்கத் தேவையில்லை. பாலிமர் கிளே மேக்னட்டை ஒண்ணு 100 ரூபாய்க்கும், சாதாரண கிளே மேக்னட்டை 30 ரூபாய்க்கும் விற்கலாம். 750 ரூபாய் முதலீடு போட்டா, சுலபமா ஆயிரத்து 500 ரூபாய் திரும்ப எடுத்துடலாம். அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. கடைகளுக்கும் சப்ளை பண்ணலாம். வெறும் கிளே மட்டும் வச்சு செய்தா, சீக்கிரம் உடைய வாய்ப்பிருக்கிறதால, அடியில உட்டன் பேஸ் கொடுத்துப் பண்றது ரொம்ப நாளைக்கு அப்படியே வைக்கும்’’ என்கிறார் நந்தினி. பாலிமரில் இரண்டும், சாதாரண கிளேயில் ஒன்றுமாக மூன்று மாடல் மேக்னட்டுகளை ஒரே நாள் பயிற்சியில் இவரிடம் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 750 ரூபாய்.

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்