குளிர் பரவும் மழை இரவில்!
ட்விட்டர் ஸ்பெஷல்
குழலி (சோழ தேசம்) @itzkuzhali
* நாம் எதிர்பார்க்காதபோது குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் முத்தம் தித்திப்பு. * குழந்தை மனமிருந்தால் முத்துகள் வேண்டாம், கிளிஞ்சல்களே போதும் மகிழ்ந்திருக்க. * குழந்தைகள் போல சண்டையிட்டு சிறிது நேரத்தில் நன்குணர்ந்த முதியவர்கள்போல் விட்டுக் கொடுத்து செல்லும் உறவுகள் வாழ்வின் அழகியல். * நான் படித்த பள்ளியின் சீருடையை அணிந்து செல்லும் சிறுமிகளின் மீது இனம் புரியாத பாசம் உருவாகிவிடுகிறது. * மழைத்துளிகளைப்போல் கண்ணீர்த்துளிகளுக்கும் ஓசையிருந்தால் எப்படி இருக்கும்? * மழைக்காலத்தில் குளிரைப் போல மற்றொரு அழகு, பன்னீர்ப்பூ தூவும் மரங்கள்! * ஜன்னல் கம்பிகளுடன் போரிட்டு வென்று,என் கன்னத்தில் முத்தமிட்ட மழைத்துளியே என் முதல் காதலன். * மழைச் சத்தத்தை கேட்டுக்கொண்டே கண் விழிக்கும் காலைப்பொழுதுகள் வரம். * போர்வைக்குள்ளும் குளிர் பரவும் மழை இரவில் சட்டென இளவெயில் அடித்தால் நன்றாயிருக்கும்.

* மிக ரசித்த விஷயங்களையே அதீத வெறுப்பிற்குரிய விஷயங்களாய் மாற்றிக் காட்டி, யோசிக்க வைக்கும் காலம் என்றுமே ஆச்சரியக்குறிதான். * மனதிற்கு எப்போதும் தூரப் பார்வையே. அருகிலிருப்பதை அது அதிகம் கவனிக்காது. * செடிகளில் பூக்கள் அதிகமாகவும், இலைகள் ஒன்றிரண்டும் துளிர்ப்பதுபோல இருந்திருந்தால் நாம் இலைகளையே அழகென்று சொல்லியிருப்போம். * சந்தோஷங்கள் சாலையோரப் பூக்களாக நம் வழியெங்கும் மலர்ந்திருக்கின்றன. நாம்தான் கடிவாளம் கட்டியது போல் கண்டுகொள்ளாமல் கடந்து போகிறோம். * கோபம், வெறுப்பு, வருத்தம், சந்தேகம், குழப்பங்கள் அனைத்தையும் கடந்து மீண்டும் மீண்டும் தாயையே நாடும் சிசு போன்றது உண்மை அன்பு. * மிகப் பிடித்தவர்கள் மீது ஐந்து நிமிடத்திற்குமேல் கோபமாய் இருக்க முடிவதில்லை என்பதே என் பலமும் பலவீனமும். * எதிர்பார்ப்புகளை மட்டும் குறைத்துக் கொள்... உன்னோடு நட்பாய் இருப்பேன் என்கிறது வாழ்க்கை. * என்னைவிட்டு விலக என்னிடமே வழி கேட்டால் அதையும் சொல்லுமளவிற்கு அன்போடிருக்கிறேன். * நகைகளை தெருவில் வீசி நகைப் பெட்டியில் கற்களை பாதுகாப்பது போன்றது மகிழ்ச்சியை அப்போதே மறந்துவிட்டு வருத்தங்களை மட்டும் மனதில் சேர்த்து வைப்பது. * ஈர்ப்பு எதிர்ப்பு விசைகள் போட்டியிட, பூமியை சுற்றும் நிலவாக நம்மைச் சுற்றி வருகிறது ஒரு நேசப்பந்து. * ஒப்பனையற்ற நேசமும், ஒப்பனை மிக்க கற்பனைகளும் அழகு. * உள நலமில்லாத பொழுதுகளில் வாசிக்கும் கதைகளுக்குள் ஒளிந்து கொள்வது வழக்கம். * சிறு வயதில் பண்டிகை நெருங்கி வருகையில் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி கூடுவது போலிருக்கும். இப்போது பார்த்தால் கவலைகள் கூடுவது போல தோன்றுகிறது.
|