கண்ணான கண்ணே பாடிய பீகார் பெண் MLA



சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மிகக் குறைந்த வயதிலேயே MLAவான பாஜக இளம் பெண் வேட்பாளர் மைதிலி தாக்கூர் ஒரு நாட்டுப்புற பாடகி. 
தன் கலைத் திறமையை தன் இணையப் பக்கங்களில் வெளிப்படுத்தி, இளம் வயதில் MLA ஆனதற்கு, மைதிலி தாக்கூருக்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் இவர் தமிழில் பாடி பதிவேற்றிய “கண்ணான கண்ணே” பாடல் இணையத்தில்  வைரலானது.

நடிகர் அஜீத் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’ படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இசையில், கவிஞர் தாமரையின் பாடல் வரிகளுக்கு, சித் ராம் 
மிக உருக்கமாக அர்ப்பணித்த பாடல் “கண்ணான கண்ணே...” இந்தப் பாடல் படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக இருந்தது. பீகார் MLA மைதிலி தாக்கூர், இந்தப் பாடலைத்தான் தனது குரலில், அழகான தமிழ் மொழியில், மிகத் தெளிவாகப் பாடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

மைதிலியின் குரல், உச்சரிப்பு, தமிழ் மீது கொண்ட அவரின் அன்பு ஆகியவை தமிழக மக்களைக் கவரவே, “தமிழுக்கு மரியாதை கொடுத்ததற்கும், தங்களின் தேர்தல் சாதனைக்கும் பாராட்டுகள்!” என்று வாழ்த்துகளை தமிழ் ரசிகர்கள் ஏகமனதாக அள்ளிவீசி வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இசைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மைதிலி தாக்கூர், பீகார் சட்டசபைக்கு 25 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அலிநகர் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரான வினோத் மிஸ்ராவை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

ஜூன் மாதம் 25 வயதை நிறைவு செய்த மைதிலி தாக்கூர், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தேர்தலில் தான் வெற்றியடைந்தால் தனது தொகுதியை ‘சீதாநகர்’ என பெயர் மாற்றுவேன் என இவர் பிரச்சாரம் செய்தது பெரும் சர்ச்சையையும் கிளப்பியிருந்த நிலையில், ‘‘எனக்கு இந்த வெற்றி ஒரு கனவு போல இருக்கிறது. மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது. நான் ஒரு மகள் போல மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

பீகாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டி என்ற ஊரில் 2000ம்  ஆண்டில் பிறந்த மைதிலி தாக்கூரின் குடும்பம் பாரம்பரியமான கலைக்குடும்பம். நாட்டுப்புற இசையை தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து கற்றவர், தனது பள்ளிப் படிப்பை டில்லியில் முடித்து,  டில்லி பல்கலைக்கு உட்பட்ட ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்திருக்கிறார்.முகநூல், யூடியூப், இன்ஸ்டா வழியாக தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி 100க்கும் மேற்பட்ட பாடல் வீடியோக்களை பதிவேற்றியிருக்கும் மைதிலி தாக்கூருக்கு ஃபாலோவர்ஸ் அதிகம்.

2017ல் ரைஸிங் ஸ்டார் இந்தியா என்ற இசை தொடர்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது குரலால் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர், 2021ம் 
ஆண்டில் சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார்.

மணிமகள்