உன்னத உறவுகள்-கடைசி வரை உறவு



உறவுகள் புடைசூழ வாழ்வதுதான் வாழ்க்கை. வாழும் காலத்தில் முடிந்த வரை அன்பு, பாசம், பரிவு, ஆதங்கம், ஆதரவு போன்ற உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து உறவுகளை சம்பாதித்தாலும், அதனை கட்டிக்காத்து அடுத்த சந்ததியினரும் அவர்களுடன் வாழ வழிவகுத்து தரவேண்டும். 
பணம், சொத்து, நகை போன்றவற்றை சந்ததிகளுக்கு பங்கு போட்டுத் தருகிறோம். அது போல் உறவுகளையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றால், அவர்கள் வாழ்க்கையும் செழிப்பாக அமையும். 

மனிதனாக வாழ்வது ஒருமுறைதான். பிரபஞ்சம் நமக்கு பல விஷயங்களை கற்றுத் தருகிறது. அதனை உறவுகளோடு அனுபவிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவில்லை. ‘‘நீங்கள் சிரிக்காத ஒருநாள், நீங்கள் வீணாக்கிய நாள்” என்று நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் கூறியுள்ளார். கனிந்த பழங்கள் போன்று நம்மைச் சுற்றி உறவுகள் இருக்கும் பொழுது இல்லாததை நினைத்து நாம் ஏன் வருந்த வேண்டும். 

அன்பும், கருணையும் மனதில் இருந்துவிட்டால் பொல்லாதவர்களைக் கூட நல்ல உறவுகள் என நம்முடன் வைத்துக் கொள்ள முடியும். சிரிப்பும், மலர்ந்த முகமும் அனைவரையும் பாசத்தில் கட்டிப் போடும். 

நம் சிரிப்பு யாருக்கும் வலிமையை ஏற்படுத்தாது. நல்ல எண்ணங்களோடு நம்மை நாமே நேசிப்பதன் மூலம், பிறரையும் நேசிக்க முடியும். இந்தக் குணங்களே நல் உறவுகளை ஏற்படுத்தித் தரும். தனிமை பயத்தை உண்டாக்கும். நம்மைப் பற்றி குறை பேசுபவர்களும் நம்மிடம் இருக்கும் குண நலன்களை பற்றி மட்டுமே பேசுவார்கள். இதுதான் மனித வாழ்க்கையின் இயல்பு. 

நம் தாத்தா, பாட்டி அவர்கள் அனுபவித்த வாழ்க்கை இன்று பலருக்கும் தெரிவதில்லை. ஆனால், அனைத்தையும் விஞ்ஞானம், மருத்துவம் என்ற நோக்கில் ஆராய்கிறோம். விறகு அடுப்பு சமையல், அந்த உணவிற்கு மேலும் சுவையை அள்ளித் தந்தது அம்மியும், ஆட்டுக்கல்லும். சாணம் வைத்து துடைப்பதால், தரையில் ஒரு ஈ. கொசு கூட இருக்காது. 

இன்று அனைத்தும் இயந்திரமயம் ஆனாலும் தொற்று என்ற பெயரில் வியாதிகளை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். பாட்டி உணவினை கையால் பிள்ளைகளுக்கு ஊட்டும் போது அதில் அன்பும் கலந்திருந்தது. இன்று நாகரீகமாக ‘ஸ்பூன்’ கொண்டு சாப்பிடுகிறோம், அதில் பாசத்தை ஊட்ட முடியுமா? 

வெயிலில் தண்ணீரை வைத்து, அதில் வேப்பிலைகளை போட்டு குளிப்பாட்டுவார்கள். குழந்தைகள் நோயின்றி வளர்ந்தார்கள். மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பிள்ளைகளும் தெரிந்த உறவினர் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஒட்டி உறவாடினார்கள். அனைத்து நல்ல பழக்கங்களையும் நடைமுறையில் சொல்லித் தந்தார்கள். உதாரணத்திற்கு, ‘சாப்பிட வாங்க’ என்று அழைத்தால் போதும், அனைவரும் வரிசையாக கை கழுவ சென்றுவிடுவார்கள். 

அதே போல் தெருவில் விளையாடி விட்டு வந்தால், கை, கால்களை கழுவாமல் வீட்டுக்குள் நுழைய முடியாது. வீட்டில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் தூங்குவார்கள். ஒரு பெரிய ஜமக்காளத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என்று நிம்மதியாக படுத்துறங்கினார்கள். அம்மா அருகில் தான் படுக்க வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடிக்க மாட்டார்கள். 

எந்த உறவினராக இருந்தாலும், துணைக்கு ஆள் இருந்தால் போதும். உத்தியோக நிமித்தமாக பெற்றோர் வெளியூரில் இருந்தால், பிள்ளைகள் உறவினரிடம் வளர்ந்தார்கள். இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு அறை என்று ஒதுக்கிய பிறகு, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே பேசுவது குறைந்துவிட்டது. மனம் திறந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. 

ஒருமையில் வளரும் பிள்ளைகள் நாளை உடன்பிறப்பின்றி உறவுகளின் பாசத்திற்கு ஏங்கும் நிலைதான் இன்று காணப்படுகிறது. உறவுகளை விட்டுக் கொடுக்காமல் இணைத்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. வேறு ஊரில் நம் ெமாழி பேசினாலே நமக்குள் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். மொழிப் பற்று நம்மை இணைக்கும் போது, குடும்பத்தைச் சார்ந்த நம் உறவுகளை கட்டிக் காப்பாற்றினால் எவ்வளவு அழகாக இருக்கும். 

உறவுகள் நன்றாக இருந்தால்தான்  பந்தங்கள் அறுபடாமல் இருக்கும். காடு வரை பிள்ளை, கடைசி வரை விடை கொடுத்து அனுப்ப உறவினர்களாவது வேண்டுமே! இறப்புக்குக் கூட தெருவே கூடிய காலம் மறைந்துவிட்டது. இன்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட யார் என்று தெரியாமல் இருக்கிறோம். அரவணைத்துப் போக உறவுகளால் மட்டுமே முடியும். அவர்கள் காட்டும் பரிவும், பாசமும் உடல் சோர்வினை நீக்க செய்துவிடும்.

கால முன்னேற்றத்திற்கேற்ப, நம் மனதின் எண்ணங்கள் மாறுபடுகின்றன. அவரவர் வட்டத்திற்குள் வாழும் சூழல் ஏற்பட்டுவிட்டது. எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும், அவர்களை மதிக்க வேண்டும். யாருமே நம்முடன் கடைசி வரை வரப்போவதில்லை. 

உயிருடன் இருக்கும் வரை சுற்றத்துடன் சேர்ந்து வாழ்வோம். ஒருமுறைதானே வாழ்வு. அன்பையும், பாசத்தையும் தந்து, பரிவையும் அக்கறையும் காட்ட வைக்கலாமே! உறவுகள் நம் அருகில் இல்லாததால், நண்பர்களை உறவுகளாக அமைத்துக் கொள்கிறோம். 

நட்பு நீர் போன்றது, உறவு சுவாசம் போன்றது. தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்றால், சுவாசம் இல்லாமலும் மனிதனால் வாழ முடியாதே. உறவு நம் பிறப்புடனே ஏற்படுகிறது. நட்பை உறவாக மாற்றிக்கொள்ள முடியும். நண்பனின் அம்மாவை தாயைப் போல் பாவித்து அவர்களை அம்மா என்றுதான் அழைக்கிறோம். காரணம், உறவு முறை சொல்லி அழைக்கும் போது நெருக்கம் அதிகமாகிறது என்பதுதான் உண்மை. 

கடமை, உரிமை, பொறுப்புணர்வு அத்தனையும் உறவில் காணப்படுகிறது. அதே சமயம்  எதிர்பார்ப்புகளால் கோபமாக மாறி, சண்டையில் உறவினை முறித்துவிடுகிறது. ஆனால், ஆபத்து என்று வந்துவிட்டால், உறவுகள் எங்கிருந்தாலும் தேடி வரும். விட்டுக் கொடுக்க முடியாது. 

நட்பின் மூலம் ஏற்படும் உறவுகள், சில சமயம் பணக் கஷ்டத்தை ஏற்படுத்தினால் நம்மால் அதிலிருந்து விலகிட முடியும். மேலும், நாம் வசிக்கும் இடங்களில் புதிய நட்புகளை வளர்த்துக் கொள்ள முடியும். 

ஆனால், நம் மூதாதையர் காலத்தில் இருந்தே ஆலமரத்தின் விழுதுகளாக உறவினர்கள்தான் நம்மை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேர் சாய்ந்தால் விழுதுகள் என்னவாகும்? ஆணிவேர் போன்று இன்றைய தம்பதிகள் நிறைய விழுதுகளை தரவேண்டும். 

அவைதான் அடுத்த தலைமுறையை காப்பாற்றும். பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், குடும்ப பழக்க வழக்கங்களையும் பிள்ளைகளுக்கு சாப்பாட்டோடு ஊட்ட வேண்டும். இல்லை என்றால், அவர்களுக்கு பெற்றோர் வாழ்ந்த வாழ்க்கை தெரியாமல் போய்விடும். இலக்கியங்களை பிடித்துத் தெரிந்து கொள்ளலாம். நம் குடும்பத்தின் சரித்திரத்தை உறவுகளால் மட்டுமே அறியமுடியும். எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் நம்மை அரவணைத்துச் செல்பவர்கள்தான் உறவினர்கள். 

நம் இரண்டு கைகளும் தாய், தந்தை போலவும், கை விரல்கள் உறவுகள் போலவும் நம்முடனே பயணிப்பவை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மனித ரத்தம் ஒன்றானாலும், மனித மனங்கள் வேறு. உறவை மேம்படுத்தி இன்றைய சந்ததிகளுக்கும் அறிமுகப்படுத்துவோம். 

கடைசி வரை உறவுகள் நம்முடன் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாழ்வோம். அன்பைத் தந்து அரவணைப்போம். இனிய முகம் காட்டி அனைவரிடமும் இனிமையாகப் பேசுவோம். நம் நாடு, நம் ஊர், நான் பிறந்த இடம் என்பது போல் நம் உறவினர்கள் என்றும் பெருமை கொள்வோம்.

சரஸ்வதி ஸ்ரீநிவாசன்