விளையாடினால் பக்கவாதம் குணமாகும்!
40 வயதினைக் கடந்துவிட்டாலே ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் 60 வயதிலும் உற்சாகமாக செயல்பட முடியும். ஆனால், சில சமயம் நாம் எதிர்பார்க்காத நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான தீர்வு மருத்துவங்களில் இருந்தாலும், முறையாக பின்பற்றினால் கண்டிப்பாக உடல் சார்ந்த அனைத்து பிரச்னைகளில் இருந்தும் மீள முடியும். அப்படிப்பட்ட மருத்துவ உதவிகளை கொடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த விஜய் கருணாகரன். இவர் ‘ரீவின் ஹெல்த்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து அதன் மூலம் பலரின் உடல் சார்ந்த பிரச்னைக்கு பாலமாக இருந்து வருகிறார்.  ‘‘நான் இந்த நிறுவனத்தை நான்கு வருடங்களுக்கு முன் துவங்கினேன். அதற்கு முக்கிய காரணம் என் அம்மா. அவங்க சில காலம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாங்க. அதுவரை நான் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தேன்.
அவர்களை பார்த்துக் கொள்வதற்காக சென்னைக்கு வந்தேன். அப்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு வருடம் என் சிந்தனை முதியவர்கள் பற்றி தான் இருந்தது. உடலில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றினால் கண்டிப்பாக மீள முடியும் என்று புரிந்து கொண்டேன்.
என் அம்மாவை நான் கவனமாக பார்த்துக் கொண்டாலும், அவர்களால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை. காரணம், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இங்கு பெரிய அளவில் போஸ்ட் கேர் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். பொதுவாக மருத்துவமனையில் நோயினை குணமாக்குவார்கள். நலமடைந்து பிறகு கவனமாக பார்த்துக் கொள்வது நோயாளிகளின் முக்கிய பொறுப்பு. குறிப்பாக NCD என்று அழைக்கப்படும் Non Communicable Disease அதாவது, இதயம், நரம்பியல் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்கள் தனிப்பட்ட பராமரிப்பு அவசியம். அப்போது தான் அவர்களால் பழைய நிலைக்கு வர முடியும்.
இல்லை என்றால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறு இல்லாமல் இருக்க இயன்முறை மருத்துவம் கை கொடுக்கும். சில ஆண்டுகள் முன்பு வரை இயன்முறை மருத்துவத்தின் பலன்களைப் பற்றி பலருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று மற்றவர்களை சார்ந்து இல்லாமல் தன் வேலைகளை தானே செய்து கொள்ள இயன்முறை மருத்துவம் மிகவும் உதவுகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
மருந்துகள் உயிரை காக்கும்... இயன்முறை மருத்துவம் மட்டுமே உடலை இயங்க வைக்கும். இதற்கான நிபுணர்கள் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள். மல்டிஸ்பாலிட்டி மருத்துவமனைகளில்தான் இதற்கென்று தனிப்பட்ட துறை இயங்கி வருகிறது’’ என்றவர் ரீவின் ஹெல்த் செயல்பாட்டினை குறித்து விவரித்தார்.
‘‘வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்கள் ஒரு இடத்தில் இருந்தால் போதும் என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். தன்னால் முன்பு போல் இயங்க முடியவில்லை என்று முதியவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் இயன்முறை மருத்துவம் மிகவும் அவசியம். அதில் பெரும்பாலானவர்கள் முறையாக சிகிச்சைகளை கடைபிடிப்பதில்லை.
இதனால் ஆரம்பத்தில் குணமானாலும், நாளடைவில் தொடர் பயிற்சியின்மை காரணத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் உள்ள உறுப்புகளில் பிரச்னை ஏற்பட்டால் சிகிச்சைக்குப் பிறகு அவை சரியாக இயங்குகிறதா என்று பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், பக்கவாதம், முதுகுவலி, கைவலி, ப்ரோசன் ஷோல்டர் போன்ற பிரச்னைக்கு இயன்முறை மருத்துவம் மட்டுமே தீர்வு. தற்போது இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உள்ளதால் அதனை தொழில்நுட்பம் மூலமாக செயல்படுத்த திட்டமிட்டோம்.
அதற்கான ஆய்வில் ஈடுபட்டோம். மக்களின் தேவை என்ன? எந்தப் பிரச்னைக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இயன்முறை மருத்துவம் குறித்து தெரிந்து கொண்டோம். அதில் முக்கியமானது எளிதாகவும், பிடித்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
அடுத்து இதில் தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் திட்டமிடலானோம். எல்லாவற்றையும் விட அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சைகளும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்’’ என்றவர் ஒன்றரை வருட ஆய்வுக்குப் பிறகு சிகிச்சை முறைகளை விளையாட்டு மூலமாக செய்ய வெர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
‘‘முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தினை பயன்படுத்திதான் இந்த வெர்சுவல் ரியாலிட்டி கருவியினை அறிமுகம் செய்திருக்கிறோம். கண்களில் மாட்டிக் கொண்டால் அவர்கள் முன் ஒரு திரை வரும். அதில் அவர்களின் சிகிச்சைக்கு ஏற்ப செயல்முறைகள் வரும்.
அதை அவர்கள் செய்ய வேண்டும். முழுக்க முழுக்க விளையாட்டு முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அவர்களும் சிகிச்சை மேற்கொள்கிறோம் என்று நினைப்பு இல்லாமல் சந்தோஷமாக செய்வார்கள். இதனால் அவர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும், மனசும் இளமையாக மாறும். இவை முதியவர்களுக்கு மட்டுமில்லை... பிரச்னையுள்ள அனைவரும் இந்த வெர்சுவல் ரியாலிட்டி சிகிச்சை முறையினை மேற்கொள்ளலாம்’’ என்றவர் சிகிச்சையின் செயல்பாடு குறித்து விவரித்தார்.‘‘இயன்முறை மருத்துவம் பொறுத்தவரை பிரச்னை என்னவென்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்வது.
அதே சமயம் இதனை மக்கள் சரியாக செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். தொடர் சிகிச்சையால் அவர்களிடம் முன்னேற்றம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். மாற்றம் இல்லாத பட்சத்தில் வேறு சிகிச்சை முறைகளை மாற்றி கொடுக்க வேண்டும்.
ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கல், தொடர்ச்சியாக ஒரே சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு அதன் மேல் சலிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் இருக்கதான் இந்த விளையாட்டு முறைகள். உதாரணத்திற்கு பென்க்வினை பிடித்து பனிக்கட்டி மேல் வைக்க வேண்டும்.
அல்லது கோயிலில் ஆரத்தி செய்ய வேண்டும். இதில் ஒருவர் குறிப்பிட்ட தூரம் கையினை நீட்ட வேண்டும் என்றால் அதற்கேற்ப ஆரத்தியினை நீட்டி எடுப்பது போல் அமைத்திருப்போம். அவர்கள் குறிப்பிட்ட தூரம் கைகளை நீட்டினால்தான் ஆரத்தி தட்டினை எடுக்க முடியும். அடுத்து மரத்தில் இருக்கும் பழத்தினை பறித்து பறவைக்கு கொடுக்க வேண்டும். மரத்தில் இருக்கும் பழத்தினை பறிக்க அவர்கள் எவ்வளவு தூரம் கைகளை உயர்த்த வேண்டுமோ அதற்கேற்ப அமைத்திருப்போம். அந்த அளவுக்கு கைகளை உயர்த்தினால்தான் பழத்தினை பறவைக்கு கொடுக்க முடியும். இதற்கு மதிப்பெண் இருப்பதால், அதை பெற டாஸ்கினை செய்து முடிப்பார்கள். இது போல் கை, கால் முதுகுத்தண்டு, நரம்பியல் சார்ந்து 50க்கும் மேற்பட்ட விளையாட்டு சிகிச்சை முறைகள் உள்ளன.
மேலும், உறைந்த தோள்பட்டை பிரச்னை உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பிசிக்கல் மற்றும் காக்னேடிவ் சிகிச்சைகள் இரண்டுமே இருக்கும். ஸ்ட்ரோக் பொறுத்தவரை அவர்களின் மூளையில் சில பகுதி வேலை செய்யாது.
அதனை மீட்டெடுக்க அதற்கேற்ப கொடுக்கிறோம். இதன் மூலம் செயலிழந்த பகுதிகளை மீட்க முடியும். முதலில் பக்கவாதத்திற்கான சிகிச்சை மட்டுமே இதில் அமைத்திருந்தோம். தற்போது பார்கின்சன் மற்றும் அனைத்து நரம்பியல் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வலி சார்ந்த மற்றும் இதயம் சார்ந்த சிகிச்சைகளும் உள்ளன. ஒருவரின் தேவைக்கேற்ப எளிதாக செய்யும் படி அமைத்திருக்கிறோம்.
முதலில் நோயாளியின் பிரச்னைகளை இயன்முறை மருத்துவரிடம் கூறுவோம். அவர் அதற்கான சிகிச்சை முறைகளை விளக்குவார். அதற்கேற்ப நாங்க வெர்சுவல் ரியாலிட்டியில் எவ்வாறு அமைக்கலாம் என்று திட்டமிடுவோம். ஆனால், இதில் மிகப்பெரிய சவால் என்றால் அந்த இயந்திரத்திற்கான விலை.
அதனை எல்லோரும் வாங்க இயலாது. அவர்களுக்கு என தனிப்பட்ட ஆப் வசதியினை அமைத்திருக்கிறோம். அதன் மூலம் அவர்கள் அனைத்து சிகிச்சைகளையும் பெறும் படி வசதி படைத்திருக்கிறோம். மேலும், எங்களின் கருவியினை மருத்துவமனை மட்டுமில்லாமல் தனிப்பட்ட கிளினிக் ஒன்றையும் அமைத்திருப்பதால், அங்கும் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையை தொடர்ந்து விழுப்புரம், பண்ருட்டி, சேலம், தஞ்சாவூர், தேவக்கேட்டை, புதுச்சேரி மற்றும் திருச்சியில் எங்களின் கிளினிக் செயல்பட்டு வருகிறது. இயன்முறை மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு பிரான்சைசி முறையில் வழங்கி வருகிறோம். இதுவரை 2000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்.
இதைத் தொடர்ந்து ஆன்லைன் முறையிலும் அமைக்க இருக்கிறோம். இன்னும் 2 வருடத்தில் 100 கிளினிக் மற்றும் 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை இணைக்க ேவண்டும் என்பதுதான் எங்களின் டார்கெட்’’ என்றார் விஜய் கருணாகரன்.
ஷம்ரிதி
வாசகர் பகுதி
கார்த்திகை மாத சிறப்புகள்
* கார்த்திகை மாதம் தீபங்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. காந்தள் பூக்கள் பூக்கும் காலமாகவும், கரு மேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் காலமாகவும் இது அமைகிறது.
* தீபங்களை ஏற்றி வழிபடக்கூடிய சிறப்பு வாய்ந்த மாதமாகும். வீடுகளில் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குவது சிறப்பான பலன்களை தரும்.
* கார்த்திகை மாதத்தில் முப்பது நாட்களும் அதிகாலை நீராடி சிவ பெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து வித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும்.
* கார்த்திகை தீபத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருபத்தேழு நட்சத்திரங்களை மையமாக வைத்து மடக்கு தீபாராதனை நடைபெறும். * கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உகந்தது.
* கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்வதால், ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும்.
* கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு எனப்படும் காவேரியில் அன்று நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.
* கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாக புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால் கார்த்திகை ஏகாதசி அன்று துளசி செடியுடன் நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
* நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்து பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
|