கிச்சன் டிப்ஸ்
* பச்சை கொத்தமல்லி, கறிவேப்பிலையை எண்ணெயில் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால்தான் அதன் சத்துக்களும், வாசனையும் அழியாமல் இருக்கும்.
 * உளுத்தம் பருப்பு வைத்துள்ள டப்பாவில் நான்கு, ஐந்து வரமிளகாய்களை புதைத்து வைக்க பூச்சிகள் வராது.
* சாம்பார் வைக்கும் போது பாத்திரத்துக்கு வெளியே பொங்கி வழிந்தால், சாம்பார் மீது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிவிட்டால் போதும் பொங்கி வழியாது.
- புனிதவதி, கோவை.
* அருமையான வாசனையுள்ள சாக்லேட் செய்ய எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட எசென்ஸ் சேருங்கள்.
* அல்வா கலவையை அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும் பொழுது சரியாக இருக்கும்.
* பால் அல்வா செய்யும் போது கோக்கோ பவுடர் சேர்த்து, சாக்லேட் பால் அல்வா செய்யலாம்.
* கார வகைகளை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் செய்தால் ருசியாகவும், சீக்கிரம் கெடாமலும் இருக்கும்.
- இந்திராணி தங்கவேல், சென்னை.
* எந்த உப்பு பட்சணம் செய்தாலும் வெறும் வாணலியில் வெள்ளை உளுத்தம் பருப்பை லேசாக வறுத்து மாவாக்கி வைத்துக் கொண்டு, ஒரு கரண்டி சேர்த்து பிசைந்து செய்தால் பட்சணம் கடிக்க எளிதாக இருக்கும்.
* 2 படி அரிசிக்கு அரைப்படி பொட்டுக்கடலை போட்டு அரைத்து தேன் குழல் பிழிந்தால் பொன்னிறத்துடன், கரகரப்பாக இருக்கும்.
* சோமாஸ் மாவை கொஞ்சம் கூடுதலாக நெய் விட்டு பிசைந்தால் சோமாஸ் கிரிஸ்பியாக வரும். மாவை சலித்து விட்டு நன்கு அழுத்தி பிசைந்தால் சோமாஸ் எண்ணெயில் வேகும் போது விரிசல் விடாது.
- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
* புளி வைக்கும் பானையில் மந்தார இலையை வைத்து, அதன் மேல் புளியை வைத்தால் புளி பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
* தோசை மாவு புளித்திருந்தால் அதில் சிறிது சுக்குப் பொடி கலந்தால் புளிப்பு மட்டுப்பட்டு ஜீரணமும் ஆகும்.
* டைனிங் மேஜை விரிப்பில் காபி, தேநீர் சிந்திவிட்டால் அப்பகுதியில் சர்க்கரை தூவினால் கறை படியாது.
- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.
* மிக்ஸியில் சட்னி போன்றவற்றை அரைத்து எடுத்ததும் ஜாரில் நீர் விட்டு மீண்டும் மிக்ஸியை ஓட விடவும். அதனுள் ஒட்டிக் கொண்டிருக்கும் சட்னி, மசாலா போன்றவை தண்ணீரோடு வந்து விடும். சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.
* குக்கர் காஸ்கட் லூசாகிவிட்டால் ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து விட்டு மறுநாள் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்.
* தோசைக்கு அரைக்கும் போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையை ேசர்த்து அரைத்து தோசை வார்த்தால் புது சுவையில் அபாரமாக இருக்கும்.
* தேங்காயை துண்டுகளாக்கி ஃப்ரீசரில் வைத்து பின்னர் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் சில விநாடிகள் சுற்றினால் தேங்காய் துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.
- அமுதா அசோக்ராஜா, அசூர்.
* வேகவைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி செய்தால் சுவையாக இருக்கும்.
* முட்டைகளின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவினால் நீண்ட நாள் கெடாது.
* சலித்த சப்பாத்தி மாவின் கட்டிகளை வீண் ஆக்காமல் அடை மாவில் கலந்தால் சுவையாக இருக்கும்.
* சின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊறவைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகமாகும்.
- எஸ்.கார்த்திக், திண்டுக்கல்.
* இட்லி மாவு பொங்கி வழியாமல் இருக்க மாவின் மேற்புறம் சில வெற்றிலைகளை போட்டால் பொங்கி வழியாது.
* உளுந்த கஞ்சி செய்யும் போது சுக்கைப் பொடித்து ஒரு ஸ்பூன் சேர்த்தால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.
* பருப்பு பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக இருக்கும்.
* கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டுவிட்டால் விரைவில் கெடாது.
- வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிதளவு ரவையை வறுத்து கலந்து விட்டால் நன்கு கெட்டியாகிவிடும்.
* ரவையை உப்புப் போட்டு பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அது சூப்பராக இருக்கும்.
* வெள்ளரிக்காயை சிலைஸ்களாக நறுக்கி பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனி.
* கொள்ளை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ரசம் வைக்கும்போதெல்லாம் ஒரு ஸ்பூன் போட்டு விடுங்கள். பனி காலத்தில் சளி பிடிக்காது.
- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
பலாப்பழ இனிப்பு பணியாரம்
தேவையானவை: பலாப்பழம் - 1 கிலோ, சர்க்கரை - 1 கிலோ, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், நெய் தேவையான அளவு.
செய்முறை: பலாப்பழத்தை பொடியாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, வெண்ணெய் மாதிரியான பக்குவத்தில் அரைக்க வேண்டும். சர்க்கரையை நீரில் நன்கு கரைய விட்டு, அதனுடன் எலுமிச்சம் சாற்றையும் கலந்து, அரைத்த பலாப்பழத்தை சேர்த்து வாணலியில் கிளற வேண்டும். அது நன்றாக வற்றும்போது நெய் தடவிய தட்டில் போட்டு, நன்றாக ஆறிய பிறகு துண்டுகளாக்கவும்.
- கீதா சுப்பிரமணியன், கும்பகோணம்.
|