என்னை நானே சுயமாக செதிக்கிக் கொண்டேன்!



இசை, பாட்டு, ஓவியம் தொடங்கி கூடுவிட்டு கூடு பாயும் கலை வரை ஆயக்கலைகள் அறுபத்து நான்காம்... அதில்  சிற்பம் என்பது முப்பரிமாணக் கலை  படைப்பாகும். சிற்பிகள் தாங்கள் வடிக்கும் சிற்பங்கள் வாயிலாக கலை, பண்பாட்டு பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றனர். மேலும், கற்பனைக்கு உயிரோட்டம் கொடுத்து அழகியலை கலந்து உணர்வுகளின் வெளிப்பாடாகவும் சிலைகளை வடிக்கின்றனர். 

மாமல்லபுர சிற்பங்கள் தமிழ்நாட்டு சிற்பக்கலை சிறப்பை உலகளவில் பறை சாற்றுவது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் களிமண், கல், பொன் போன்றவற்றால் மட்டுமே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. தொழிற்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ போன்ற பலவித பொருள்களை வைத்து சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. அத்தகைய சிற்பங்களை செதுக்குவோர் பெரும்பாலும் ஆண் சிற்பிகளாகவே இருப்பர். பெண்கள் இத்துறைக்கு வருவது மிகவும் அரிதான ஒன்று. 

பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதிப்போம் என்ற வகையில் தன் அதீத கற்பனைத்திறன் மூலம் பெண் சிற்பிகளுக்கு வழிகாட்டியாக வலம் வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த பெண் சிற்பி அறிவழகி.‘‘எங்களுடையது பெரிய குடும்பம். நாங்க ஐந்து பேர். புதுச்சேரியில் பாரதியார் கலைக்கூடத்தில் பிஎஃப்ஏ படிச்சேன். அதன் பிறகு சென்னையில் கவின் கல்லூரியில் மாஸ்டர்ஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே  மண்ணில் வீடு கட்டி விளையாட பிடிக்கும். 

அதில் சாப்பிடும் உணவுகளான சோமாஸ், அதிரசம், முறுக்கு போன்றவற்றையும்செய்து விளையாடுவேன். அப்படி சின்ன வயசில் நான் விளையாட்டாக செய்ததுதான் இன்று என்னுடைய தொழிலாக மாற்றி இருக்கிறது’’ என்று பெண் சிற்பியாக தான் கடந்து வந்த பாதை பற்றி விவரிக்கத் தொடங்கினார். ‘‘நாங்க புதுச்சேரி சிட்டியில் இருந்து கிராமப் பகுதிக்கு குடியேறினோம். அங்கு களிமண் அதிகமாக கிடைக்கும். 

எனக்கு சின்ன வயசில் இருந்தே மண்ணில் விளையாட பிடிக்கும் என்பதால், களிமண் ெகாண்டு சிவலிங்கம், விநாயகர் போன்ற சுவாமி சிலைகள், மயில், கிளி பொம்மைகளை செய்து அவற்றை வீட்டில் வைத்தேன். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ‘உனக்கு அசாதாரண திறமை இருக்கு’ன்னு சொன்னது மட்டுமில்லாமல் என் பெற்றோரிடம் சிற்பக்கலை சார்ந்த படிப்பை படிக்க வைக்க சொன்னாங்க. எங்க வீட்டுலையும் அந்தப் படிப்பை படிக்க வச்சாங்க. எனக்கும் கலை மேல ஆர்வம் இருந்ததால், நானும் அதையே தேர்வு செய்தேன். 

பள்ளியில் என்னை ‘கிளி பொம்மைக்காரி’ன்னு தான் கூப்பிடுவாங்க, பள்ளியில் ஒருமுறை கிராஃப்ட் போட்டி நடத்தினாங்க. அதில் நான் தத்ரூபமாக கிளி பொம்மையை செய்தேன். அதற்கு முதல் பரிசும் கிடைச்சது. அன்று முதல் தான் எனக்கு இந்த பட்டப் பெயர் வந்தது. நானும் ஒரு கலைப் படைப்பாளினு என்னை உணர வச்சதே அந்த நிகழ்ச்சிதான்’’ 
என்று தன் பள்ளிப் பருவ நாட்களை சுவாரஸ்யமாக பகிர்ந்தார். 

‘‘நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது களிமண்ணில் வீட்டு உபயோகத்திற்காக இருந்த பெயின்டையும் பயன்படுத்தி எனக்காக நகையை டாலரோடு உருவாக்கினேன். டெரக்கோட்டா ஜூவல்லரி அறிமுகமாகாத காலம் அது. எந்தவித பயிற்சிகள் இல்லாமலே இயற்கையாகவே எனக்குள் இருந்த இந்த திறனைப் பார்த்த டெரகோட்டா கலைஞர்கள் வாழ்த்தினார்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கான சேனல் ஒன்றில் கலை சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் வரும் அனைத்து கிராஃப்டுகளையும் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் மற்றும் களிமண் கொண்டு செய்வேன். இப்படித்தான் என்னை நானே வளர்த்துக் கொண்டேன்.

அதன் பிறகு சிற்பக் கலைஞர் ஒருவருடன் இணைந்து கஸ்டமைஸ்டு சிற்பங்கள் செய்தேன். இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக கஸ்டமைஸ்டு சிற்பங்களை செய்து வருகிறேன். ஒருவரின் புகைப்படம் கொடுத்தால் போதும், அவர்களை அப்படியே சிலையாக வடித்துவிடுவேன். 

நான் செய்ததை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தேன். அதன் மூலம் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. வெளிநாட்டிலிருந்தும் சிலைகளை செய்து தரச் சொல்லி கேட்கிறாங்க. தமிழக அரசு சார்பாக ‘அடுத்த தலைமுறை பூம்புகார் விருது’ தந்தாங்க. மேலும், ரிசர்வ் வங்கி சார்பில் நடத்திய நிகழ்ச்சியில் ஆயிரம் பேர் கலந்துகிட்டாங்க. அதில் இறுதியாக எட்டு பேர் தேர்வானோம். 

அந்தப் போட்டியில் நான் வரைந்த பென் டிராயிங்க்கு முதல் பரிசு கிடைச்சது. இன்றும் அந்த ஓவியம் ரிசர்வ்  வங்கியில் உள்ளது’’ என்றவர், ரத்த தானத்திற்காக அவர் வரைந்த ரங்கோலிக்கு கிடைத்த முதல் பரிசினை கிரண் பேடி அவர்களிடம் பெற்றுள்ளார். 

‘‘இயற்கையான களிமண், பவுடர் கிளே, போட் செய்கிற பைபர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எல்லாம் பயன்படுத்திதான் சிலைகள் வடிக்கிறோம். டிரெண்டில் உள்ள குழந்தைகளின் கால், கை மோல்டு முதல் ரெசின் ஆர்ட் வரை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் செய்து தருகிறேன். கலை வேலைப்பாடு பொறுத்தவரை எதையும் விடுவதாக இல்லை. 

அனைத்தையும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த கலையினை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்ற ஆவல் எனக்குள் உள்ளது. 

அதற்கான மூலப்பொருட்களை அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தால் போதும் எதிர்கால தலைமுறையினருக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், சாலையோர குழந்தைகளுக்கு சிற்பக்கலையை இலவசமாக கற்றுத்தர நான் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறும் சிற்பக் கலையரசி, இந்திய அளவில் சிறந்த பெண் சிற்பியாக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி தன்னம்பிக்கையுடன் தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: முபாரக் ஜான்


வாசகர் பகுதி

பனிக்கால நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்து காணப்படும். அதனால் குளிர்காலத்தில் ஊறவைத்த உணவுகளால் உடலுக்கு வெப்பம் கிடைக்கும். அதற்காக ஊறவைத்து சாப்பிட வேண்டிய 5 உணவுகள்.

*சியா விதைகள்: குளிர் காலத்தில் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனால் செரிமானம் சீராகி, குடல் இயக்கம், ஆரோக்கியமாக நடைபெறும்.

*பயறு வகைகள்: பச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள், பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள், புரதங்கள் முழுவதுமாக கிடைக்கிறது. இதில் உள்ள இரும்புச் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். குளிர் காலத்தில் நோய்களை அண்ட விடாது.

*வால்நட்ஸ்: வால்நட்ஸை குளிர்காலத்தில் ஊறவைத்து சாப்பிடுவதால் இதல் உள்ள புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், செரிமானமும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

*பாதாம்: பாதாம் இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிட்டால் இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் செரிமானத்தை சீராக்கும். இதில் உள்ள பைடிக் அமிலம் கரைந்து கனிமங்கள் எளிமையாக உடலில் சேரும்.

*ஓட்ஸ்: இதை இரவில் ஊறவைத்து எந்த விதத்திலாவது கஞ்சியாக சாப்பிட, நார்ச்சத்தால் செரிமானம் சீராகி, கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.