பெண்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட உதவ வேண்டும்!



ஆசிரியை பணியோடு கலையையும் இணைத்து மாணாக்கர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வாழ்வியல் திறன் பயிற்சிகளை வழங்கி வரும் தீபா, தன் கலை மற்றும் கல்விப் பயணம் குறித்து பகிர்ந்துகொள்கிறார்.“திருத்தணி என் பூர்வீகம். தற்போது சென்னையை அடுத்த தாம்பரத்தில் வசித்து வருகிறேன். என் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. 

திருமணத்திற்குப் பின்னரே நான் உயர் கல்வியை தொடர்ந்தேன். D.T.Ed எனும் ஆசிரியர் பயிற்சியினை முடித்த பின்னர் M.A., M.Ed பட்ட படிப்புகளை முடித்தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு கலையில் ஆர்வம் இருந்தது. என் பாட்டிதான் எனக்கு உத்வேகம் அளித்தார். நான் சிறிது காலம் கல்கத்தாவில் வசித்த போது, ஆர்ட் மற்றும் கிராஃப்ட் தொடர்பான ஆறுமாத கால சான்றிதழ் படிப்பினை முடித்தேன். 

இதில், பூக்கள் தயாரித்தல், ஃபேப்ரிக் பெயின்டிங், பொம்மைகள் தயாரித்தல், விளையாட்டுப் பொருட்கள் தயாரித்தல், தையல் அலங்கார வேலைப்பாடு, மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் அடங்கும். ஆசிரியை பயிற்சி படிக்கும் போதே, இந்தக் கலை சார்ந்த பயிற்சியை செய்து வந்தேன். 

அப்போது கலை மற்றும் கைவினை வெளிப்பாடுகளில் என் சிறப்பினை கண்ட மகளிர் குழு, திருவள்ளூர் மாவட்ட DEO அலுவலகத்தில் என்னை பரிந்துரை செய்ததால், சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan -SSA) எனும் அரசு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கலை பயிற்சி அளிக்க எனக்கு அழைப்பு வந்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு சாம்பிராணி தயாரித்தல் மற்றும் காகிதப் பைகள் தயாரித்தல் போன்ற பயன் தரும் கைத்தொழில்களை பயிற்றுவித்தேன். மகளிர் குழுக்களுக்கும் இது போன்ற பயிற்சியை அளித்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அரசு கவின் கலை கல்லூரியின் கீழ் டிப்ளமோ இன் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பை முடித்தேன். 

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராகவும் கலை மற்றும் கைவினை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வகுப்புகளும் 6, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளும் எடுத்து வருகிறேன். பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, கதைகள் மற்றும் விளையாட்டுகள் மூலமாக விஷயங்களை போதிக்கிறேன். 

இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை கவனிப்பார்கள். தமிழ் போதிப்பதோடு மட்டுமின்றி, கவிதைகள் எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு” என்றவர் ஒரு தமிழ் ஆசிரியராகவும், ஓவிய ஆசிரியராகவும் இரட்டைப் பொறுப்புகளை வகிக்கிறார்.

“பள்ளியில், இந்தியக் கலை வடிவங்களான மதுபாணி, வார்லி ஆர்ட், பெண் வொர்க் மற்றும் லிப்பான் ஆர்ட் போன்றவற்றை பயிற்றுவிக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பு கலை வடிவங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 

இந்தக் கலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நானே வகுத்து வைத்துள்ளேன். பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றுவதற்கு அப்பாற்பட்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு ஓவிய வகுப்புகளை எடுத்து வருகிறேன். நான்கு மாணவர்களுடன் தொடங்கிய பயணம் இப்போது 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஓவிய வகுப்புகளில் உள்ளனர்.

இதில் ப்ரீ-கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களும் உள்ளனர். கலர் பென்சில் முதல் ஆயில் பெயின்ட் வரை அனைத்து மீடியங்களிலும் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சிகளை அளிக்கிறேன். என் மாணவர்கள் நிறைய ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். சமீபத்தில் ஒரு மாணவி இந்தியன் ஒலிம்பியாட் டிராயிங் போட்டியில் அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 

என் மாணவர்கள் மொபைல் பார்ப்பதில் நேரத்தை செலவிடுவதை விடவும் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவதாகப் பெற்றோர்கள் தெரிவிப்பது மகிழ்ச்சியாக இருக்கும். மாலை நேரங்களில் நான் நடத்தும் ஓவிய பயிற்சிகளுக்கு தற்போது, ஒரு தனியார் அகாடமியின் கீழ் பயிற்சியாளராக இருந்து அதன் மூலம் சான்றிதழ்களை வழங்கி வருகிறேன்.

விரைவில் எனது சொந்த அகாடமியை பதிவு செய்ய இருக்கிறேன். அதன் மூலம் டிப்ளமோ படிப்புகளை வழங்க வேண்டும் என்பது என் ஆசை” எனும் தீபா மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் மட்டுமின்றி பெண்களுக்கும் கைவினைக் கலைப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

“வீட்டில் குழந்தைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், வெளியே வேலைக்குச் செல்ல முடியாத, படித்த பெண்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட உதவ வேண்டும் என்பதே என் நோக்கம். நான் கல்கத்தாவில் கற்றுக்கொண்ட பல கிராஃப்ட் வேலைப்பாடுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். ரெஸின் ஆர்ட், கீ செயின்கள், ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள், வால் கிளாக்குகள், ஷோ பீஸ்கள், ஹேர் பேண்ட்டுகள் மற்றும் சில்க் திரெட் வளையல்கள் போன்றவை தயாரிக்கும் பயிற்சிகளை அளிக்கிறேன்.

பயிற்சியில் பங்கேற்ற பெண்கள் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி சிறிதளவில் தொழில் செய்து வருகின்றனர். ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு பெண், மன அமைதிக்காக கைவினைப் பொருள் தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டதாகவும், இப்போது அழகழகான தீபங்கள் தயார் செய்து வட இந்தியா வரையிலும் கூட விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சாம்பிராணி, தூபம் தயாரிக்கும் பயிற்சிகளை அளித்ததின் விளைவாக கொரோனா தொற்று காலத்தின் போது மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கும் அதனை கற்றுக்கொடுத்ததில், வீட்டிலேயே அவற்றை தயாரித்து கடைகளில் விற்பனை செய்து சிறிது வருமானம் ஈட்டியதாக தெரிவித்தனர். அவ்வப்போது அம்மா, மகள்/அம்மா, மகன் காம்போ  வொர்க்‌ஷாப்களை நடத்துவேன். ஒரே சமயத்தில் இருவரும் கலைப் பயிற்சிகளை கற்கலாம். 

காலை முதல் இரவு வரை மிகவும் பரபரப்பான மற்றும் திட்டமிட்ட வேலை அட்டவணையில் இருக்கிறேன். பள்ளியில் இரட்டிப்பு பொறுப்புகளை முடித்து வீட்டிற்கு வந்ததும் மாலை நேர ஓவிய வகுப்புகளை தொடங்கிவிடுவேன். வேலையை விரும்பிச் செய்வதால், சோர்வோ மன அழுத்தமோ ஏற்படுவதில்லை. 

எனக்குப் பிடித்தமான ஓவியங்களை வரையும் போது மகிழ்ச்சியாக இருப்பேன். சுவர் ஓவியங்கள் மற்றும் கிருஷ்ணர் ஓவியங்களில் ஆர்வமாக உள்ளேன். தமிழாசிரியராக இருப்பதுடன் கலைப் பணிகளைப் பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும். நிறைய பெண்களுக்கு பயிற்சியளித்து அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தொழில் தொடங்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்றார் தீபா.

ஆர்.ஆர்

கண்ணுக்குத் தெரியாத காது கேட்கும் கருவி!

காது கேட்கும் கருவி என்பது காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு மின்னணு சாதனம் ஆகும். இது ஒலிகளைப் பெருக்கி, அதன் மூலம் தொடர்பு கொள்ளவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவற்றை  வெவ்வேறு வடிவங்கள், வண்ணங்களில் ஃபோனிக் ஹியரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. 

பொதுவாக காது கேட்கும் கருவியினை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அந்தக் கருவியினை மட்டுமே விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இவர்கள் கருவிகளை விற்பனை செய்வது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களை முழு ஆய்வு செய்து அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப கருவியினை வழங்கி வருகிறார்கள். காது கேட்கும் திறன் குறைய அவர்களின் காதுகளில் பிரச்னை இருக்கலாம். சிலருக்கு வெர்டிகோ பிரச்னை இருந்தாலும் காது கேட்கும் திறனை பாதிக்கும். இவ்விரண்டு பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து காதில் இரைச்சல் மதிப்பீட்டினை கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளும் வழங்கப்படுகிறது. காது கேட்கும் திறனுக்கான பலவித கருவிகள் இருப்பதால், ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப கருவிகளை தேர்வு செய்து பிறகு வழங்கப்படும். அந்தக் கருவியினை இலவசமாக பயன்படுத்திய பிறகு புதிய கருவியினை பெற்றுக் கொள்ளவும் வசதிப்படுத்தி கொடுக்கிறார்கள். 

கருவிகளை விற்பனை மட்டுமில்லாமல் அதில் பழுது ஏற்பட்டால் விரைவில் சரி செய்தும் தருகிறார்கள். முன்பு காது கேட்கும் கருவிகள் பெரிய அளவில் அனைவருக்கும் தெரியும் படி இருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இப்போது மிகச் சிறிய கருவிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை காதில் பொருத்திக் கொள்வது எளிது.