நெகிழிக்கு மாற்றாக தென்னை ஓலை ஸ்ட்ராக்கள்!
இயற்கையை பாதுகாப்பது உலக மக்கள் அனைவருடைய கடமை. ஆனால், இன்றைய காலக்கட்டத்திற்கு தேவை, அவசரம், பற்றாக்குறை காரணமாக இயற்கையை காக்கும் கடமையிலிருந்து தவறிவிடுகிறோம். முக்கியமாக நெகிழி என்கிற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மண் வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதைப் பற்றி ஒரு சிலர் கவலைப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் நமக்கென்ன என்று நகர்ந்து விடுகிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் மண்ணின் மகத்துவத்தைக் காக்க அவ்வப்போது பல்வேறு செயல்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் தந்து இயற்கையின் நீட்சிக்கு உதவுகின்றனர்.  ‘‘ ‘தென்னையை பெத்தா இளநீரு! பிள்ளையை பெத்தா கண்ணீரு’ என்ற பழமொழிக்கு ஏற்ப கற்பக விருட்சமான தென்னையின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தக்கூடியது. ஆதிகாலத்தில் வீட்டின் கூரை வேய தென்னையோலைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை பழச்சாறு அருந்த பயன்படும் ஸ்ட்ராக்களாகவும் பயன்படுகின்றன.
அழிவில்லா அரக்கன் பிளாஸ்டிக் ஸ்ட்ராவின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் காகித ஸ்ட்ராக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. இருந்தாலும் அவையும் கெடுதல் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், நாங்கள் தயாரிக்கும் தென்னை ஓலை ஸ்ட்ராக்கள் நீரில் நனையாது, இயற்கைக்கு தீங்கில்லாதது’’ என்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த ராதா, மணிகண்டன் தம்பதியினர். இவர்கள் தென்னை ஓலையில் ஸ்ட்ராக்களைத் தயாரித்து விற்பனையும் செய்து வருகிறார்கள்.
‘‘எங்களுக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டுல தேவக்கோட்டை’’ என்று பேசத் துவங்கினார் மணிகண்டன். இன்ஜினியரிங் படிச்சேன். பதினைந்து வருடங்கள் ஐ.டி துறையில் இருந்தேன். ஆனால், எனக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அதில் இளநீர் தேங்காயை நன்றாக சீவி, கடைகள், சூப்பர் மார்க்கெட், வீடுகளுக்கு வழங்கி வந்தோம். அவ்வாறு வழங்கப்படும் இளநீருக்கு பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள்தான் வழங்கி வந்தோம். இளநீர் போன்று உடலுக்கு நல்ல உணவினை கொடுத்துவிட்டு அதற்கு தீங்காக பிளாஸ்டிக் ஸ்ட்ராவினை கொடுப்பது எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் காகித ஸ்ட்ராக்கள் கொடுக்க ஆரம்பித்தோம். ஆனால், அது தண்ணீரில் நனைந்துவிடுவதாகவும், வளைந்து விடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினார்கள். அந்த சமயத்தில்தான் இளநீரை கொடுக்கும் தென்னை மர ஓலையிலிருந்தே ஸ்ட்ராக்களை செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது’’ என்றவரை தொடர்ந்தார் ராதா. ‘‘நானும் என் கணவரும் சேர்ந்துதான் இந்த பிசினசை துவங்கினோம். அவர் மிஷினரிஸ், மார்க்கெட்டிங், புரோமோஷன் பார்த்துக் கொள்கிறார். நான் அவருக்கு துணையாக ஸ்ட்ராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன்.
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 150 ஸ்ட்ராக்கள் உற்பத்தி செய்தோம். ஆர்கானிக் மற்றும் எளிதாக மட்கும் தன்மையில் உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாங்க தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கிழித்த தென்னை ஓலைகளை வாங்குவோம்.
பிறகு அதனை ஸ்ட்ராக்களாக மாற்றுவோம். முதலில் துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து தரம் பிரித்து வளைக்க ஏதுவாக மிருதுவாக மாற்றி, நாங்களே தயாரித்த ஆர்கானிக் பசை சேர்த்து ஒட்டி காய வைத்து, பின்னர் சுருளாக மாற்றும் இயந்திரத்தில் விட்டு அளவு வாரியாக கட் செய்து பூஞ்சைகள் பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. தரப் பரிசோதனை செய்த பின்னரே பேக்கிங் செய்கிறோம். இருபது பெண்கள் எங்க கிட்ட வேலை பார்க்கிறாங்க. ஸ்ட்ரா செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்க இயந்திரங்களை அதற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்தோம். அந்த இயந்திரங்களில்தான் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ஸ்ட்ராக்கள் வரை செய்கிறோம். நவீன இயந்திரங்கள் இருந்தால் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ஸ்ட்ராக்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்’’ என்கிறார் ராதா.
‘‘இங்குள்ள பெரிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், கஃபே, மால்களில் உள்ள உணவகங்களில் இருந்து எங்களுக்கு ஆர்டர் வருகிறது. தமிழ்நாட்டிலும் சேம்பிள் வாங்கியிருக்காங்க. நாங்க ஒரு நாளைக்கான உற்பத்தியை உயர்த்தினா மட்டும்தான் லாபம் பார்க்க முடியும்.
அதற்காக நவீன முறையில் ஸ்ட்ரா தயாரிப்புக்கான இயந்திரங்களை டிசைனிங் செய்து வருகிறோம். இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான வேலை முற்றிலும் முடிவடைந்துவிடும். தமிழ்நாட்டிலும் எங்களின் உற்பத்தியை ஆரம்பித்துவிடுவோம். அதற்கான தனிப்பட்ட யூனிட் அமைக்கும் திட்டமும் உள்ளது’ என்ற மணிகண்டன் கோயம்புத்தூரில் தவிடு தட்டு தயாரிக்கும் தொழிலும் செய்து வருகிறார். ‘‘கோவையில் ‘லைவ்லி எக்கோ சஸ்டெயினபிள் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தவிடு தட்டுகளை தயாரித்து வருகிறேன். பனை மட்டை, வாழை மட்டை ஆகியவற்றை போல் தவிட்டிலும் தட்டு தயாரிக்கலாம். ஐரோப்பாவில் சில நாடுகளும் இந்தியாவில் சில பகுதிகளிலும் மட்டுமே தவிடு தட்டு தயாரிக்கறாங்க. இந்த தட்டுகளை உபயோகித்த பின் மாடுகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம். என் தயாரிப்புகள் அனைத்தும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத எளிதில் மட்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
என்னுடைய தயாரிப்புக்கு மத்திய அரசு மானியம் வழங்கியுள்ளது. அதன் மூலம் சில இயந்திரங்களை வாங்க உதவியாக உள்ளது. இந்தத் தொழிலில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசாங்க அங்கீகாரத்தையும் பெற்று உற்பத்தியை பெருக்க வேண்டும். இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து மண் வளத்தை காக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்’’ என்கிறார்கள் இயற்கை பற்றாளிகளான ராதா மணிகண்டன் தம்பதியினர்.
கலைச்செல்வி
|