சிறுகதை-உன்னைத்தானே தஞ்சமென்று!
அஞ்சனாவிற்கு சரியான கால் வலியாக இருந்தது. தொடர்ந்து ஐந்து மணி நேரம் நிற்பது என்றால் யாருக்குத்தான் வலிக்காது. அவளுக்கு கால் வலி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தன்னைப் போலவே அன்று காலையில் அவள் கழுத்தில் தாலி கட்டிய கணவன் காளீஸ்வரனுக்கும் நின்று நின்று கால் வலித்திருக்கலாம், அந்தக் கல்யாண மண்டபத்தின் வரவேற்பு ஹாலில் மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை உறவுக்காரர்களும், நண்பர்களும் வரும் போதெல்லாம் அஞ்சனாவும், அவள் கணவனும் எழுந்து நின்று வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு புகைப்படக்காரரும், வீடியோக்காரரும் சொல்லும் வரை அசையாமல் நின்று புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக் கொடுத்து சலித்து போனார்கள்.
ஒரு வழியாக இரவு ஒன்பது மணிக்கு ரிசப்ஷன் முடித்துக் கொண்டு காரில் வீடு திரும்பினார்கள். களைப்பு, கால்வலி இருவரையும் கவ்விக்கொள்ள படுக்கையில் விழுந்து தூங்கிப் போனார்கள்.
காளீஸ்வரன் குடும்பம் சற்று வசதியான குடும்பம், அவர்கள் எப்படி பரம ஏழையான அஞ்சனாவின் குடும்பத்தாரோடு சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள் என்பதே திருமணத்திற்கு வந்த பலரின் கேள்வியாக இருந்தது.
இரண்டாவது நாளும் இனிதே முடிந்தது. மூன்றாவது நாள் விருந்துக்கு அஞ்சனாவின் வீட்டுக்குப் போய் வந்த களைப்பில் தூங்கிப் போயிருந்தாள். அஞ்சனா புது மனைவி என்பதால் தனிமை கிடைக்கும் போதெல்லாம் அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். “என்னங்க இன்னைக்கு சாயங்காலம் மல்லிகைப்பூ வாங்கிட்டு வாங்க...” அவள் புன்னகையை பூக்கள் விரிவதைப்போல விரித்துவிட்டு சொன்னாள்.
இரவில் சொம்பில் பாலோடு அறைக்குள் நுழைந்தாள் அஞ்சனா. காளீஸ்வரன் அவளை கட்டி அணைத்தபடி கட்டிலில் சரிந்தான். “என் உசுரு என்கிட்டயிருந்து பிரியிற வரைக்கும் என்ன விட்டு விலக மாட்டேன்னு சத்தியம் பண்ணு...” “இதென்ன கேள்வி, நாம இப்பதான் புது வாழ்க்கை தொடங்கி இருக்கிறோம். மரணம் நம்மை பிரிக்கிற வரைக்கும் நீங்கதான் எனக்கு புருஷன், நான்தான் உங்க மனைவி...” அவள், அவன் கரங்களை கோர்த்தபடி சொன்னாள்.
“நான் உன்ன உயிருக்குயிரா நேசிப்பேன்...” “நானும்தான்...” அவள் அவன் மார்பில் சாய்ந்தாள். அவன் அவள் கேசத்தை வருடியபடி பேச ஆரம்பித்தான். அவனது பேச்சில் மயங்கி தூக்கம் தொலைந்து இரவு இரண்டு மணி வரை பேச்சு சத்தம் நீண்டு கொண்டே போனது.
அஞ்சனாவுக்கு லேசான கொட்டாவி வர அகலமாக வாய் திறந்து மூடினாள். அவள் தூங்கிப் போனாள். ஒரு வாரம் ஓடிப்போனது. அவனது அன்பில் நனைந்தவளுக்கு மெல்லியதாய் ஒரு சந்தேக மின்னல் வெளிச்சமிட்டது.
அன்பு, பாசம் எல்லாம் சரிதான், தாம்பத்தியம்..? அது நடந்தால் தானே குலம் விருத்தியடையும், குழந்தை உண்டாகும், அது நடக்காமல் போகிறதே. அன்று இரவு ஒரு முடிவோடு இருந்தாள் அஞ்சனா. காளீஸ்வரன் கண்கள் கலங்கியது, அவன் முகம் சுருங்கியது. தான் ஒரு ஆண்மகன் அல்ல திருநம்பி என்ற உண்மையைச் சொல்லி அழ ஆரம்பித்தான் காளீஸ்வரன். கேட்ட அஞ்சனாவின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
பனிரெண்டு வயது வரை காளீஸ்வரி என்றுதான் அழைத்து வந்தார்கள். ஒரு பெண்ணாகத்தான் வளர்க்கப்பட்டாள், எப்பொழுதும் ஆண் குழந்தைகளோடு தான் சகவாசம். அப்பொழுது அவர்கள் டெல்லியில் இருந்தார்கள். அங்கிருந்து ஊர் திரும்பும் போது காளீஸ்வரனாகவே முழுதாய் மாறி இருந்தான்.
அவனது படிப்பு, வாழ்க்கை, வியாபாரம், திருமணம் எல்லாம் ஆணாகத்தான் நடந்தேறியது. கிட்டத்தட்ட பதினேழு வருட வாழ்க்கையில் யாருக்கும் அவன் மீது சந்தேகமே வரவில்லை. ஏழைக் குடும்பத்தில் பிறந்து திருமணத்திற்குப் பிறகு தன் வாழ்வில் வசந்தம் வீசுமென்று நம்பி வந்தவளுக்கு இப்படி ஒரு புயல் அடிக்கும் என்று அவள் நினைக்கவில்லை.
அவள் கனவுகள் புதைந்து போனது, தனக்கு தாலி கட்டிய கணவன் திருநம்பியா…? ஒரு பெண் உடலின் பருவ மாற்றத்தால் ஆணாய் மாறிவிட்டால் அவன் ஆண் ஆகி விடலாம். ஆனால், குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆண்மகனாய் ஆகிவிட முடியுமா…? அவள் அழுதபடியே இருந்தாள்.
காளீஸ்வரன் அவள் அருகில் வந்து ஆதரவாய் அவள் தோள்களை தொட்டான்.“ கையை எடுங்க” என்று எரிச்சலாகத் தட்டிவிட்டாள். அவள் முகத்தில் கோபம் நிலைக் கொண்டிருந்தது. பொழுது புலரும் நேரத்தில்தான் அவளுக்கு தூக்கம் எட்டிப் பார்த்தது.
அஞ்சனா கண் விழித்தாள். ஆனாலும், உடல் அசதியில் எழுந்திருக்க மனதில்லாமல் விட்டத்தை பார்த்தபடியே தன் எதிர்காலத்தைக் குறித்த கனவில் இருந்தாள்.
படுக்கையை விட்டு எழும்புவதற்குள் வாந்தி வாயிலிருந்து புறப்பட்டது. காளீஸ்வரன் ஓடிவந்து தனது விரல்களை சேர்த்து கையில் வாங்கிக் கொண்டான். அதை வாஷ்பேஷனில் கொட்டி விட்டு மறுபடியும் அவள் முன்னால் கைவிரித்து நின்றான்.
அஞ்சனா அவன் கைகளைத் தட்டி விட்டு முறைத்தாள். அடிவயிற்றில் இருந்து புறப்பட்ட வாந்தியை வாஷ்பேஷனில் கொட்டி விட்டு பைப்பை திறந்து விட்டாள். காளீஸ்வரன் அங்கிருந்து நகர்ந்தான். அஞ்சனாவின் உடலுக்குள் சோர்வு அமர்ந்து கொண்டது. ஒரு கப் டீ குடித்தால் தேவலாம் போல் இருந்தது.
அறைக் கதவை திறந்து கொண்டு காளீஸ்வரன் வந்தான். அவன் கையில் சுடச்சுட ஆவி பறக்கும் இஞ்சி டீ இருந்தது. அஞ்சனா வாங்கி குடித்தாள்.
”நீ எந்த தப்பான முடிவும் எடுத்துடாத, நாம ரெண்டு பேரும் சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழலாம், குழந்தை இருந்தால்தான் குடும்பமா…? குழந்தை இல்லாமல் நம்மளால வாழ்ந்திட முடியாதா…?” அஞ்சனாவுக்கு அவன் பேசுவது எரிச்சலாக இருந்தது.“கொஞ்சம் பேசுறத நிப்பாட்டுறீங்களா…? நான் போய் குளிச்சிட்டு ரெடியாகுறேன், என்ன அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டுடுங்க...” சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி நடந்தாள்.அவளைச் சமாதானப்படுத்தலாம் என்று நினைத்தவனுக்கு அது முடியாது என்று தோன்றியது.
நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி அவனும் குளிக்க புறப்பட்டான். அவளது வீட்டின் முன் இறக்கி விட்டு விட்டுக் காரைத் திருப்பினான். ‘‘வீடு வரைக்கும் வந்துட்டு போங்க” என்று கூட அவள் அழைக்கவில்லை. ‘‘என்னடி நீ மட்டும் தனியா வந்திருக்க, மாப்பிள்ளை எங்கே…?” கேட்டபடி வெளியே வந்தாள் அவளது அம்மா அனுராணி. அவள் பதில் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் நடந்தாள். “என்னடி ஆச்சு...” கேட்டாள் அனுராணி.
“எதுவும் ஆகல, எனக்கு அவன் கூட வாழப் புடிக்கல, வந்துட்டேன்...” கோபத்தில் வெடித்தாள் அஞ்சனா. அனுராணி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
விஷயம் கேள்விப்பட்டு மதியம் வீடு வந்து சேர்ந்தாள் அஞ்சனாவின் அக்கா அர்ச்சனா. “இப்ப நீ கோபத்துல இருப்பேன்னு தெரியும். நானா எதுவும் கேட்கல, ரெண்டு நாள் உன் கூட இருப்பேன்... உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லு...” “எனக்கு அவனப் புடிக்கல, எவ்வளவு சீக்கிரம் இந்த பந்தத்தை அத்துவிட முடியுமோ அத்து விட்டுடுங்க...”“ இங்க பாரு, புருஷன் பொஞ்சாதிக்குள்ள ஆரம்பத்துல ஆயிரம் பிரச்னைகள் வரும்.
இவன் நமக்கு செட்டாக மாட்டான்னு கூட தோணும்... கொஞ்சம் நாள் வாழ்ந்து பார்த்தா, அடடா, இவரையா நாம பிரிய நினைச்சோம்னு தோணும்...”“நான் அவன் கூட எத்தனை நாள் வாழ்ந்தாலும் அப்படி தோணாது... எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல...” அர்ச்சனா அவள் பேச்சை கேட்டு சத்தமிட்டு சிரித்தாள். “ உங்களுக்கெல்லாம் என்னப் பாத்தா என்ன நினைக்கத் தோணும்... நான் என் புருஷன் கூட சந்தோஷமா இருக்கேன்னு நினைக்கத் தோணும்... அந்த வீட்டில நான் மாடு மாதிரி உழைக்கணும், எல்லா வேலையையும் முடிச்சிட்டு ஆபீஸ் கிளம்பணும், திரும்ப வந்து துணி துவைக்கணும், சமையல் பண்ணணும், எல்லாமே நான்தான் பண்ணணும், என் வீட்டுக்காரர் குனிஞ்சு ஒரு குப்பை எடுத்து போட மாட்டார், ஆபீஸ் முடிஞ்சு வந்தா வாட்ஸப், ஃபேஸ்புக்னு கதியா கிடப்பார்.
இதுல கண்ட கண்ட பொண்ணுங்க கிட்ட சாட்டிங் வேற... அவருக்கு தோணினா மட்டும்தான் தாம்பத்தியம் வெச்சிக்குவார்.
ஆரம்பத்துல எனக்கும் அவரை விட்டு பிரிஞ்சிடலாம்னு தோணுச்சு, அம்மாவையும் உன்னையும் நினைச்சு பார்த்தேன் சகிச்சுக்கிட்டேன்...” கேட்ட அர்ச்சனாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லாததை கண்டு மேற்கொண்டு அட்வைஸ் பண்ணுவதை நிறுத்திக் கொண்டாள் அர்ச்சனா. ஒரு வாரம் ஓடிப்போனது. அன்று அனுராணி கடைவீதிக்கு வந்திருந்தாள். தரகர் மாசிலா மணி அவள் அருகே ஓடி வந்தான். “தப்பு பண்ணிட்டேன்மா... தப்பு பண்ணிட்டேன்... மாப்பிள்ளையை தீர விசாரிக்காம இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டேன், மாப்பிள்ளை சொந்தக்காரன் ஒருத்தன் டெல்லில இருந்து வந்தான், அவன்கிட்ட விசாரிச்சப்போ மாப்பிள்ளை பத்தி சில உண்மைகள் தெரிஞ்சுக்கிட்டேன். மாப்பிள்ளை திருநம்பியாம்...”‘‘அப்படின்னா…?” புரியாமல் கேட்டாள் அனுராணி.
‘‘அதாவது, பொண்ணா பொறந்து அப்புறம் ஆணா மாறினவன்...” கேட்ட அனுராணியின் கண்கள் இருண்டு சொருகிப் போனது. “ஐயோ என் மகளை பாழும் கிணத்துல தள்ளி விட்டுட்டேனே...” அவள் கடைவீதி என்று கூட பார்க்காமல் ஒப்பாரி வைத்தாள். “இதை சும்மா விடக்கூடாது, பொய் சொல்லி ஏமாத்துன மாப்பிள்ளைய பத்தி போலீசில புகார் கொடுத்து கல்யாண செலவுக்கு நஷ்ட ஈடா வாங்கணும், வாங்க போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துடலாம்...” அனுராணி மாசிலாமணியின் பின்னால் நடந்தாள்.
இன்ஸ்பெக்டர் பாபுராஜ் புகாரை வாங்கிக்கொண்டு காளீஸ்வரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு சாயங்காலம் ஐந்து மணிக்கு வரும்படி அழைத்தார்.காளீஸ்வரனும் அவனது குடும்பத்தாரும் காவல் நிலையம் முன்பு காத்திருந்தனர்.
நஷ்ட ஈடாக ஐந்து லட்சம் பேசப்பட்டது. காளீஸ்வரன் தலை குனிந்தபடி கொடுக்க சம்மதித்தான். “சார் ஒரு நிமிஷம்… அம்மா புகார் கொடுத்த விஷயம் எனக்கு போன் பண்ணுனப்பதான் தெரியும், முன்னாடியே தெரிஞ்சிருந்தா புகார் கொடுக்க அனுமதிச்சிருக்க மாட்டேன். அவரை எனக்கு பிடிக்காமதான் பிறந்த வீட்டுக்கு வந்தேன்.
அக்காவோட அட்வைஸ் கேட்டதுக்கு அப்புறம் மனச மாத்திக்கிட்டு அவர் கூட வாழ்ந்த அந்த ஒரு வார காலத்த நினைச்சுப் பார்த்தேன்... அவர் என்ன நல்லா பாத்துக்கிட்டார்... காலம் பூரா என்ன வெச்சு நல்லா பாத்துக்குவார்ங்கிற நம்பிக்கை எனக்கு வந்திச்சு, தாம்பத்தியம், குழந்தை இதுதான் வாழ்க்கைன்னு நினைச்சேன், வாழ்நாள் பூரா அன்பும், அக்கறையும், பரிவும் இருந்தா நமக்கு குழந்தைகளே தேவையில்ல, நாமளே குழந்தைகளா மாறிடலாம்ங்கிறத நான் புரிஞ்சிகிட்டேன்.
நான் அவர் கூடத்தான் வாழப் போறேன்...” சொல்லிவிட்டு காளீஸ்வரன் கரங்களைப் பற்றினாள் அஞ்சனா. அனைவரும் வியந்து நிற்க, தன் கணவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறினாள். வானில் நிலவிய கறுப்பு மேகங்கள் விலகி வானம் பளிச்சென்று இருந்தது.
மதிவதனி ராசய்யா
|