சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் வயது 10!
உலக வன விலங்கு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற 61வது புகைப்பட போட்டியில் 10 வயதேயான ஷ்ரேயோவி மேத்தாவின் படங்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஷ்ரேயோவியின் இரண்டு புகைப்படங்களான ‘உயரத்தின் பலன்’, ‘ஈரநில இடைவெளி’ 10 முதல் அதற்கும் மேற்பட்ட வயதினர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஷ்ரேயோவி மேத்தா 5ம் வகுப்பு படித்து வருகிறார். 117 நாடுகளைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 60,000த்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை பரிசீலனை செய்து, அதில் ஷ்ரேயோவி மேத்தாவின் படங்களுக்கு லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் சிறந்த வன விலங்கு புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்பட்டது.
 ‘‘நான் இரண்டு வயதிலிருந்தே கேமராவை கையாண்டு வருகிறேன். எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது, பரத்பூரில் மயில்களின் புகைப்படம் எடுத்தேன். அந்தப் படம், ‘இன் தி ஸ்பாட்லைட்’ தலைப்பில் பிபிசியின் 2024ம் ஆண்டின் சிறந்த வன விலங்கு புகைப்படக் கலைஞர் விருதை எனக்கு பெற்றுத் தந்தது. அம்மா, ‘நேச்சர் வாண்டரர்ஸ்’ என்ற முன்னணி வன விலங்கு சுற்றுலா மேலாண்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். எனது தந்தை சிவாங் மேத்தா, திறமையான வன விலங்கு புகைப்படக் கலைஞர். தந்தை புகைப்படம் எடுக்க வனப் பகுதிக்கு செல்லும் போது நானும் அவருடன் செல்வேன். அப்பா காடுகளில் கரடுமுரடான பாதையில் நடந்து செல்வார்.  மேலும், அங்கு நிலவும் கடுமையான காலநிலைகளை எல்லாம் சமாளித்துதான் புகைப்படம் எடுப்பார். அதுவும் ஒரு புகைப்படம் எடுக்க மணிக்கணக்கில் காத்திருப்பார். புகைப்படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை.
ஆனால், தகுந்த தருணத்தில் புகைப்படம் எடுக்க பொறுமை, கவனம், ஒழுக்கம் அவசியம். அதை அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அப்பாவின் இந்தக் கடின உழைப்பு மற்றும் பொறுமையை பார்த்துதான் நான் வளர்ந்தேன். மேலும், அவரின் தொழில் அர்ப்பணிப்பு எனக்கு உத்வேகத்தை அளித்தது.
‘ஹைட் அட்வான்டேஜ்’ என்ற தலைப்பில் நான் பிடித்த படத்திற்கு சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது கிடைத்தது. கொக்கு எனக்கு மிகவும் பிடித்த பறவைகளில் ஒன்று.
அவை ஈர நிலங்களுக்கு வந்து போகும். அந்தப் பறவையை படம் பிடிக்க மணிக்கணக்கில் காத்திருந்தேன். இறுதியாக ஒரு பறவையைக் கண்டேன். ஆனால், அந்த கொக்கு பறவை திடீரென்று இறக்கைகளை அசைத்தது. அந்தத் தருணத்தை கச்சிதமாக்க படம் பிடித்தேன். அந்தப் படம்தான் 61வது வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுக்கான போட்டியில் பலராலும் பாராட்டப்பட்டது. எனது இன்னொரு புகைப்படம், ஒரு நீளவால் தாழைக் கோழிக்கும் நீல நிற சதுப்புக் கோழிக்கும் இடையிலான வானத்தைப் படம் பிடித்தேன். அதுவும், சரியான நேரம் காத்திருந்து என் கேமராவில் அந்தக் காட்சியை பிடித்தேன்’’ என்றவர், விடுமுறை நாட்களில் தன்னுடைய கேமராவுடன் படம் பிடிக்க கிளம்பி விடுவாராம்.
‘‘பள்ளிப் பாடங்கள் முக்கியம் என்றாலும், நான் காட்டில் இருக்கும் நேரம் பள்ளிப் பாடப் புத்தகங்கள் கற்பிக்க முடியாத பாடங்களை சொல்லிக் கொடுத்தது. விலங்குகளுக்கு உள்ளுக்குள் பயம் உள்ளது. நாம் அவற்றின் இடத்தை மதிக்க வேண்டும். அவற்றின் எல்லைக்குள் நாம் புகுந்துவிட்டால் அவை ஓடிவிடும் அல்லது நம்மைத் தாக்கக்கூடும். எனவே, விலங்குகளின் எல்லைகளை நாம் மதிக்க வேண்டும்.
எனது கனவு பனிச் சிறுத்தைகளை படம் பிடிக்க வேண்டும் என்பதுதான். அப்பா இமயமலையில் பல மாதங்களாக பனிச் சிறுத்தைகளை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை நான் பார்த்திருக்கிறேன்.
அந்த அழகான சிறுத்தைகளை படம் பிடிக்க விரும்புகிறேன். தொடர்ந்து அருமையான கோணத்தில் வித்தியாசமாக படங்களை பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறேன். இயற்கை மற்றும் விலங்குகள் மீது கரிசனம் காட்ட வேண்டும். விலங்குகளிடம் பச்சாதாபம் கொள்ளுங்கள். விலங்குகளுக்கு பேசத் தெரியாது’’ என்கிறார் ஷ்ரேயோவி மேத்தா.
கண்ணம்மா பாரதி
வாசகர் பகுதி
அழகினை மெருகேற்றும் ஃபேஸ் பேக்குகள்...
தயிர் மற்றும் ரோஸ் பேக்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலங்கள்
இயற்கையாகவே முகத்திற்கு பிரகாசம் தரும். ரோஜா பொலிவினை கொடுக்கும்.
செய்முறை: முதலில் ரோஜா இதழ்களை தனியாக எடுத்து, மிக்ஸியில் அரைத்து, பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்ட்டுடன் தேன், ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டை முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
பச்சை பால் மற்றும் ரோஸ் பேக்
ரோஜா இதழ்கள், பால் மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றை கொண்டு தயார் செய்யப்படும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது.
செய்முறை: முதலில் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை பால் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இது முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
தேன் மற்றும் ரோஸ் பேக்
தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்பட ஏராளமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், சரும செல்களுக்கு ஊட்டச் சத்தை வழங்குவதன் மூலம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி நல்ல பலனை அளிக்கிறது.
செய்முறை: ரோஜா இதழ்களை 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் நன்றாக அரைத்து அதனுடன் 3 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி லேசாக மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.
சந்தனப் பொடியுடன் ரோஸ் ஃபேஸ் பேக்
சந்தனத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, ரோஜா இதழ்களுடன் சந்தனப் பொடியினை சேர்த்து கட்டியான பேஸ்ட் போன்று செய்து கொண்டு முகத்தில் தடவினால் நல்ல பயனளிக்கும்.
|